வாஷிங்டன்: ஆப்கன் மற்றும் இராக்கில் பணிபுரிந்து நாடு திரும்பும் படைவீரர்கள் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சமூகப்பிரச்சனையாக மாறுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மனநலம், உடல்நலம் பாதிக்கப்படுவதால் மனநிலை பாதிக்கப்பட்ட இப்படையினர் கடந்த 6 வருடங்களில் அமெரிக்காவில் குறைந்தது 120 பேரையாவதுப் பலவகைகளில் கொலை செய்துள்ளதாக இவ்வறிக்கைகள் கூறுகின்றன. அமெரிக்காவின் பல பாகங்களில் நடந்தச் சம்பவங்களை வெளியிட்டப் பல்வேறு தினப்பத்திரிக்கைகளின் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அதிர்ச்சி தரும் இவ்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்கப்படையினரால் கொலை செய்யப்பட்டவர்களில் மூவரில் ஒருவர் மனைவியோ, காதலியோ அல்லது நெருங்கிய உறவினர்களோ ஆவர். கொலைகளில் பாதிக்கு மேற்பட்டவை துப்பாக்கியால் சுடப்பட்டவைகளாகும். மற்றவை கத்திக் குத்து, மோசமான முறைகளில் கொடுமைப்படுத்தல், கழுத்தை நெரித்துக் கொலை செய்தல் மற்றும் நீரில் அமிழ்த்திக் கொல்லல் போன்றப் பல்வேறு நூதன முறைகளில் நிகழ்த்தப்பட்டவைகளாகும். சில அளவுக்கதிகமான போதைப்பொருள் உட்கொண்டும் தற்கொலை செய்யும் எண்ணத்தில் கவனமின்றி வாகனம் ஓட்டி மற்ற வாகனங்களின் மீது மோதியும் நடந்துள்ளன.
இராக்கின் ஃபலூஜாவில் பணி இடத்தின் அருகில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயதான ஓர் அமெரிக்கப் படைவீரனின் அனுபவத்தையும் நியூயார்க் டைம்ஸ் விரிவாகக் கூறுகிறது. இவரின் சிகிச்சைக்கிடையில் தனது இரண்டரை வயதான மகளின் தலையைச் சுவற்றில் மோதிக் கொல்ல முயற்சி செய்துள்ளார். மிக மோசமான மன, உடல் நிலை பாதிப்பே இது போன்றச் சம்பவங்களுக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வியட்னாமில் இருந்துத் திரும்பும் படைவீரர்களில் தான் இதுபோன்றச் செயல்பாடுகள் முன்பு நிகழ்ந்துள்ளன. இப்பொழுதும் அவர்களில் பலர் குணமடையவில்லை. இந்த மோசமான அனுபவத்தில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் பாடம் படிக்கவில்லை என பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.