பாலஸ்தீனர்கள் படுகொலை: மத்தியகிழக்கில் அமைதிக்கு நடனமாடும் புஷ்?

{mosimage}பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மத்திய கிழக்குச் சுற்றுப்பயணம் செய்த வேளையிலேயே பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 19 பாலஸ்தீன முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களில் ஹமாஸின் மூத்த தலைவர் மஹ்மூத் ஸஹரின் 24 வயது மகனும் அடங்குவார்.

கடந்த ஜூன் மாதம் காஸா பகுதியின் கட்டுப்பாட்டை ஹமாஸ் கைப்பற்றிய பின்னர் இஸ்ரேலியப் படை நடத்திய அக்கிரமங்களில் இதுவே மிகவும் கொடூரமான தாக்குதலாகும். டாங்குகள், ஹெலிகார்கள் உட்பட மிகப்பெரிய படையுடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா இரத்தக்காடானது. 45க்கும் மேற்பட்டவர்களுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் 65 வயது முதியவராவார். தாக்குதலில் பலரின் உடலும் சின்னாபின்னமாக சிதறிப் போனதாக நலத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த டாக்டர். ஹஸ்னைன் கூறினார். இஸ்ரேல் தாக்குதலின் போது பன்னாட்டு ஒப்பந்தங்களின் மூலம் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உபயோகித்துள்ளது என்பதற்கான ஆதாரமாகும் இது என அவர் மேலும் கூறினார்.

ஹமாஸின் ராக்கட் தளம் தகர்ப்பதாகக் கூறி காஸா பகுதியினுள் இஸ்ரேலிய படையினர் அத்துமீறி நுழைந்து தாக்க ஆரம்பித்ததே இப்புதிய சம்பவத்திற்கான துவக்கம். ஹமாஸ் போராளிகள் தடுக்க முயன்ற போதிலும் இஸ்ரேல் ஹெலிகாப்டர்கள் உபயோகித்து அவர்களின் மீது குண்டு மழை பொழிந்தது.

இஸ்ரேலின் இந்த இரத்தவெறிக்கு எதிராகவே 17 மோட்டார்கள் இஸ்ரேலின் மீது தொடுத்ததாக ஹமாஸ் அறிவித்தது. போராளிகளின் எதிர் தாக்குதலில் இஸ்ரேலில் ஒருவர் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் புஷ் வந்து சென்ற பின் பாலஸ்தீனக் குழுவினர் இஸ்ரேலுடன் நடத்தி வரும் அமைதிப் பேச்சுகளுக்கிடையே தற்போதைய காஸா, மேற்குக்கரை பகுதிகளின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மனிதத் தன்மையற்றதும் நயவஞ்சகமானதும் ஆகும்.

 

மத்திய கிழக்கின் அமைதியில் அக்கறை கொண்டதாகக் கூறிப் பயணம் மேற்கொண்ட புஷ், இத்தாக்குதல் குறித்து நாடு திரும்பிய பின்னும் எவ்விதக் கருத்தையும் புஷ் வெளியிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

 

மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்தப்போவதாகச் சுற்றுப் பயணத்தைத் துவக்கிய புஷ், இஸ்ரேல் இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்திய போது சவூதியில் அந்நாட்டு ஆளும் குடும்பத்தினருடன் வாளைக் கையிலேந்தி நாட்டுப்புற அரபி நடனம் ஆடிக் கொண்டிருந்தது எந்த அளவுக்கு மத்தியகிழக்கு அமைதியில் அவருக்கு ஆர்வம் இருந்தது என்பதைக் காண்பிக்கிறது.

 

உண்மையில் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இஸ்ரேலை நண்பன் போலக் காட்டவும், வளைகுடா நாடுகளோடு நட்பு பாராட்ட விழையும் ஈரானைப் பேராபத்து போலச் சித்தரித்து பெருமளவு ஆயுதவிற்பனையை முடுக்கிவிடவுமே புஷ் இப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் என்பது மேலும் தெளிவாகிறது.