நரேந்திர மோடியின் தமிழக வருகை

குஜராத்தில் பெண்கள், சிசுக்கள் உட்பட அப்பாவி முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்திடப் பக்கபலமாக இருந்த மரணவியாபாரி நரேந்திர மோடியின் 14.01.08 அன்றைய தமிழக வருகையில் தமிழக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான செல்வி ஜெயலலிதா அவருக்கு விருந்தளிக்க உள்ளார் என்பது தமிழ் முஸ்லிம்களின் உள்ளத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இந்தியாவிற்கே உலக அரங்கில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது குஜராத் இனப்படுகொலையாகும். இந்த மரணவியாபாரி மோடிக்கு விருந்தளிக்க முடிவு செய்திருப்பதன் மூலம், முஸ்லிம்களின் வாக்குகளுடன் இன்று எதிர்கட்சி தலைவராக உள்ள அஇஅதிமுக எனும் திராவிடக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திராவிடர்களாகிய தமிழக முஸ்லிம்களுக்கும் அவர்களுடன் சகோதரர்களாகப் பழகிவரும் ஏனைய திராவிடர்களுக்கும் இதன் மூலம் இழுக்கு ஏற்படுத்தவுள்ளார் என்பதை கவனத்தில் கொண்டு அனைவரும் அஇஅதிமுக -வின் இச்செயலை எதிர்க்க வேண்டும் என்று தமிழகமெங்கும் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

சென்ற சட்ட மன்ற தேர்தலில் முஸ்லிம்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுப் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் ஜெயலலிதாவின் இந்தப் போக்கை முஸ்லிம்களும் நியாயவான்களும் கடுமையாகக் கண்டிப்பதாகவும், இந்த ஈனச் செயல் முஸ்லிம்களைக் கொதித்தெழச் செய்துள்ளதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் P. ஜெய்னுல் ஆபிதீன் எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து 11.01.08 அன்று தமிழகம் எங்கும் செல்வி ஜெயலலிதாவின் இந்த ஈனச் செயல்பாட்டைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது.

 

தெஹல்கா புலனாய்வில் வெளியான குஜராத் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களின் வாக்குமூலத்தின் மூலம் நரேந்திர மோடி நடத்திய இனப்படுகொலை உலகிற்கே அம்பலமானது.


அமைதிப் பூங்காவாகவும் அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்திற்குள் நரேந்திர மோடியை அனுமதிப்பதின் மூலம் பாசிச மதவாதசக்திகள் துளிர்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே மோடியின் வருகையைத் தடை செய்ய வேண்டும் எனத் தமிழகம் எங்கும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்(TNTJ)தின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயிக்கப்பட்டபடி கடந்த வெள்ளிக்கிழமை (11-1-2008) நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குத் தமிழக அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் தடைகளைப் பொருட்படுத்தாமல் கையில் குழந்தைகளுடன் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டுக் கைதாகினர்.

 

பாசிஸ எதிர்ப்பு முன்னணி என்ற ஒருங்கிணைந்த முன்னணியின் பெயரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் திரு வன்னியரசு, சிறூபான்மையினர்  கூட்டமைப்பின் தலைவர் பேரா. எஸ்றா சற்குணம், பெரியார் திக-வின் விடுதலை ராஜேந்திரன், மனித உரிமைகள் கூட்டமைப்பின் பேரா. அ மார்க்ஸ் உள்ளிட்ட பல மனித நேயம் விரும்பும் சிந்தனையாளர்கள் இணைந்து 14.01.2008 அன்று மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்புத் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

மனித நேயத்தையும் ஒற்றுமையான சமூக வாழ்வையும் விரும்பும் திராவிடர்களைக் கொண்ட தமிழகத்தில் மனித இனத்திற்கு எதிராகச் செயல்படும் மரண வியாபாரி மோடி போன்றவர்களுக்கு இடமில்லை என்பதையே மேற்கண்ட மனித நேயர்களின் எதிர்ப்புகள் தெரிவிக்கின்றன. மனித நேயர்களின் இவ்வெதிர்ப்புகளை தமிழ் மக்களின் ஒருங்கிணைந்தக் குரலாக எடுத்துக்கொண்டு திராவிட இயக்கத்தின் தலைவராக உள்ள தமிழக முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள் மரணவியாபாரி மோடியின் தமிழக வருகைக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். திராவிடர்களின் பெயரை கட்சி பெயரில் கொண்ட அண்ணா வழியைப் பின்பற்றும் செல்வி ஜெயலலிதாவும் உடனடியாக மரணவியாபாரிக்குத் தரப்போகும் விருந்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்.