இஸ்லாமும் மேற்கத்தியக் கலாச்சாரமும்!

Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு


மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கு மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது முகஞ்சுளிக்க வைக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், தங்கள் கலாச்சாரத்தை மிக உயர்வானதாகக் கருதிக் கொண்டிருக்கும் மேற்கத்தியர்களின் மனதில் இஸ்லாம் என்றால் பிற்போக்கான, நெகிழ்வுத்தன்மையற்ற ஒரு மதம் என்ற மனப்பிம்பம் தோன்றியிருக்கிறது. மேலும், மேற்கத்தியக் கலாச்சாரமே நாகரீகமானது என்றும், மதக்கோட்பாடுகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் பிற்போக்கானவர்கள் என்பது போலவும் வலிந்து ஊட்டப் பட்ட ஒரு பொதுவான கருத்து நிலவுவதையும் நம்மால் மறுக்கவியலாது. இந்த முரண்பாடு எப்படித் தோன்றியது?

ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிட முடியாதுஎன்றோர் ஆங்கிலச் சொற்றொடர் உண்டு. இஸ்லாமியக் கலாச்சாரத்தை மற்றக் கலாச்சாரங்களுடன் ஒப்பிட முயல்வதும் அப்படித்தான்! எனவே, ஒப்பிடும் நோக்கமின்றி முஸ்லிம்களிடையே மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கத்தைப் பற்றி அறியும் முயற்சியே இக்கட்டுரை!


மேற்கத்தியக் கலாச்சாரம் என்றால் எது?


கலாச்சாரம் என்பது ஒரு சமுதாயத்தினரது பழக்க வழக்கங்கள், நன்னெறிகள், நம்பிக்கைகள், ஆடை, மொழி, மதம் உள்ளிட்ட முழு வாழ்க்கை முறையைக் குறிக்கிறது எனச் சொல்லலாம். ஆனால் மேற்கத்தியர்களின் கலாச்சாரத்தை இவ்வாறு வரையறுப்பது எளிதானதன்று. முன்னொரு காலத்தில் மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது பண்டைய கிரேக்க நாகரீகம், ரோமப் பேரரசின் சட்டதிட்டங்கள் மற்றும் கிறிஸ்துவ மதப் போதனைகளின் கூறுகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் இன்றோ அதை ஆதிக்கம் செலுத்துவது பெரும்பாலும் முதலாளித்துவச் சிந்தனைகள், நாத்திக வாதங்கள், ஒற்றைப் பெற்றோர், ஓரினத் திருமணம் போன்றமுற்போக்குக் கருத்துகள், இவையே! சுருக்கமாகச் சொல்வதென்றால், ‘கலாச்சாரம்எதுவும் இல்லாததுதான் இன்றைய மேற்கத்தியக் கலாச்சாரமாக இருக்கிறது!


மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம்!


காலை ஜப்பானில் காபி

மாலை நியூயார்க்கில் காபரே

இரவில் தாய்லாந்தில் ஜாலி

இதிலே நமக்கென்ன வேலி


என்கிறது தமிழ்த் திரைப் பாடல் ஒன்று. மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கத்தை இப்பாடல் பிரதிபலிக்கிறது என்றால் அது மிகையன்று. ஆம்; இந்தியக் கலாச்சாரம் போன்ற பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றைப் பெரிதாக மதிக்கும் சமுதாயங்களிலும் மேற்கத்தியக் கலாச்சாரத் தாக்கம் மிகைத்தே காணப்படுகிறது. பல முஸ்லிம் நாடுகளையும் இது விட்டு வைக்கவில்லை.


எப்படி ஏற்பட்டது இந்த அபரிமித வளர்ச்சி?


ந்தக் கேள்விக்குப் பதிலாக சில காரணிகளைக் குறிப்பிடலாம். நாடுகளுக்கிடையிலான பொருளியல் நடவடிக்கைகள் என்பது பலகாலமாக நடந்து வருவதுதான். நபி (ஸல்) அவர்கள் கூட அவ்வாறு வியாபாரம் புரிந்தவர்தாம். ஆனால் இன்று பல்கிப் பெருகியிருக்கும் தொலைத்தொடர்பு வசதிகள் பொருளியலை எல்லைகளற்றதாக மேலும் விரிவடையச் செய்திருக்கிறது. இதைத்தான் உலகமயமாக்கல் என்கிறார்கள். இதன் விளைவாக உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்.


இத்தகையப் பொருளியல் நடவடிக்கைகளினூடே கலாச்சாரங்களும் பயணிக்கின்றன. எந்த ஒரு நாடும் மற்ற நாடுகளிலிருந்து பொருட்களை வாங்காமல் தனது பொருட்களை மட்டும் விற்றுக் கொண்டே இருக்கவியலாது. நேரடியாகவோ மறைமுகமாகவோ அது மற்ற நாடுகளிலிருந்து பொருட்களையோ சேவைகளையோ வாங்கவே செய்யும். ஆக, பொருளியல் நடவடிக்கை என்பது இருவழிப் பாதையாக இருக்கிறது. ஆனால் கலாச்சாரம் பயணிப்பதோ பெரும்பாலும் ஒரு வழிப்பாதையில். வலிமை பெற்ற அல்லதுநவீனமயமான ஒரு சமுதாயத்தின் கலாச்சாரம் உயர்வானதாகத்தானிருக்கும்என நினைக்கும் பிற சமுதாயங்களின் குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் எளிதாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. இதற்கு ஊடகங்களும் பெருமளவில் துணை புரிகின்றன.


வலிய சமுதாயத்தின் கலாச்சாரத்தை எளிய சமுதாயங்கள் ஏற்றுக் கொள்ள இன்னொரு காரணமும் சொல்லலாம். ஒரு கடையில் கூட்டமாக மக்கள் முண்டியடித்து ஒரு பொருளை வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டால், நாமும் அதை வாங்கினால் என்ன என்று பலருக்கும் தோன்றும்அந்தப் பொருள் தனக்குத் தேவைப்படாததாக இருந்தால் கூட. இது மனித இயல்பு. அதுபோல பெரும்பான்மையினரின் கலாச்சாரம் என்பதற்காகவே, அது தனக்கு ஒவ்வாததாக இருந்தபோதிலும் அதை நாடி ஓடுகின்றனர் பலர். இது புலியைப் பார்த்து பூனை – இல்லையில்லை – பூனையைப் பார்த்துப் புலி தன் உடலிலிருந்து கோடுகளை அழிக்க முற்பட்ட எதிர்மறைக் கதையாக இருக்கிறது. தனது சொந்த கலாச்சாரத்தின் மதிப்பினை இவர்கள் உணராமல் இருப்பதும் இதற்கு மற்றொரு காரணம் எனலாம்.


இஸ்லாம் மீதான தாக்கம்!


மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் பல முஸ்லிம் நாடுகளையும் விட்டு வைக்கவில்லை என்பதை முன்பே பார்த்தோம். இதை முஸ்லிம்கள் எப்படி எதிர் கொள்ள வேண்டும்? நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த தூய இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களுக்குப் பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது.


இஸ்லாமிய மார்க்கம் என்பது வெறுமனே சில மதக் கோட்பாடுகள் மட்டுமன்று. மாறாக, முழுமையாக வரையறுக்கப்பட்டுவிட்ட ஒரு வாழ்க்கை நெறி அது. காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப அது தனது கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை. ஏனெனில், அடிப்படைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இஸ்லாத்திற்கு இல்லை என்பதே உண்மை. அப்படியிருக்கையில், ஒரு பிற மதக்கலாச்சாரத்தின் தாக்கம் முஸ்லிம்களிடையே ஊடுருவுகிறது என்றால், அது இஸ்லாம் காட்டித் தந்த வாழ்வியல் நெறிகளுடன் ஒத்துப் போகிறதா அல்லவா என ஆய்ந்து பார்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.


இந்த இரு கலாச்சாரங்களுக்கிடையிலான ஒற்றுமை எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இவ்விரண்டின் நோக்கங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


இன்றைய மேற்கத்தியக் கலாச்சாரத்தில் செக்யூலர் (secular) எனப்படும் மதச்சார்பற்றக் கொள்கைகளே மேலோங்கி நிற்கின்றன. செக்யூலர் என்ற வார்த்தைஇங்கு, இப்பொழுதுஎன்று பொருள்படும் ஒரு இலத்தீன் வார்த்தையிலிருந்து உருவானது. “மனிதப் புலன்களுக்கு எட்டியவை மட்டுமே நிதர்சனம்; அவை மட்டுமே வாழ்க்கைஎன்ற கொள்கையை இது குறிக்கிறது. மதக் கோட்பாடுகளான படைப்பு, மறுமை, சொர்க்கம், நரகம் போன்றவற்றைசெக்யூலர்வாதிகளால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணம் அவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படவில்லை. நவீன கண்டுபிடிப்புகள், பொருளாதார முன்னேற்றம், விஞ்ஞான வளர்ச்சி இவை மட்டுமே வாழ்க்கை என இவர்கள் முடிவு கட்டி விட்டார்கள். மதப்பற்றுடைய சில மேற்கத்தியர்களுக்குக் கூட ஆன்மீகம் என்பது வாரயிறுதியில் சில மணி நேரங்களை சர்ச்சுகளில் செலவிடுவதோடு முடிந்து விடுகிறது. தங்கள் வாழ்க்கைக்கான நெறிமுறைகளைத் தீர்மானிக்க இவர்களுக்கு மதங்கள் தேவைப்படுவதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் இலக்கற்ற ஒரு வாழ்க்கை முறையை இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் எனலாம்.


இஸ்லாம் மனிதர்களின் உலகாதாய நடவடிக்கைகளைத் தடை செய்யவில்லை. மாறாக, சில கட்டுப்பாடுகளுடன் இவ்வுலக வாழ்வை அனுபவிக்கவே சொல்கிறது. ஆனால், ‘இவ்வுலகம் மட்டுமே வாழ்க்கைஎனும் செக்யூலர் சித்தாந்தத்தையே அது மறுக்கிறது. நமது கண்ணிற்குத் தெரியும் இந்த வாழ்க்கைக்கு அப்பால், நமது புலன்கள் கண்டிராத ஒரு மறுமை வாழ்வு இருப்பதாக இஸ்லாம் போதிக்கிறது. இவ்வுலக வாழ்வு அந்த மறுமை வாழ்விற்கான தயாரிப்புக் களம் எனவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த நம்பிக்கையே மனித வாழ்வை ஒரு முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்கத் துணை புரிகிறது. மார்க்கப் பற்றுள்ள ஒரு முஸ்லிம், தனக்கும் தன்னைச் சுற்றியும் நிகழும் எந்த ஒரு நிகழ்வும் அர்த்தமற்ற தற்செயலான நிகழ்வுகளல்ல என்பதைப் புரிந்து வைத்திருப்பார். மறுமை வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் இவ்வுலக வாழ்வை சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருப்பார். அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் இஸ்லாம் காட்டித் தந்த பாதையில் அமைந்திருக்கும். இவ்வாறாக அவரது முழு வாழ்வும் அர்த்தம் பொதிந்ததாக அமைந்து விடும்.


முஸ்லிம்கள் செய்ய வேண்டுவது என்ன?


மேற்கத்தியக் கலாச்சாரம், இஸ்லாம் காட்டும் வாழ்க்கை முறை, இவ்விரண்டின் நோக்கங்களும் இலக்குகளும் வெவ்வேறாக இருக்கும் சூழ்நிலையில், அந்நியக் கலாச்சாரத்தின் கூறுகளை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில் முஸ்லிம்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.


ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் என்பவை ஊருக்கும் காலத்துக்கும் ஏற்ப மாறக்கூடியவை! நேற்று வரை ஒழுங்கீனம், ஆபாசம் என்று கருதப் பட்ட வாழ்க்கை முறைகள் இன்று ஒழுங்கானவை, இயல்பானவை என்று முத்திரை குத்தப்பட்டு விடுகின்றன. இன்றைய நடைமுறை வாழ்க்கையில் எது சரி, எது தவறு என்று கண்டறியும் முயற்சியிலேயே மனிதர்கள் காலமெல்லாம் அழுந்திக் கிடக்கின்றனர். அவர்களின்தேடல்என்றும் முடிவடைவதேயில்லை.


இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு இந்தக் குழப்பம் ஏற்படுவதில்லை. பின்பற்றத் தகுந்த நேரிய வழி எது என்பதை திருமறை மிகத் தெளிவாக அறிவிக்கிறது;


(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள் – (அல்குர்ஆன் 7:3)


முஸ்லிம்கள் செய்ய வேண்டுவதெல்லாம், தங்கள் வாழ்விற்குத் தேவையான வழிகாட்டுதல்களை இறைவன் தேர்ந்தெடுத்துத் தந்த இஸ்லாத்திலிருந்தே பெற்றுக் கொள்வதுதான்.


மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். (ல்குர்ஆன் 3:110).


(இறைவா!) நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமன்று; நெறி தவறியோர் வழியுமன்று! (ல்குர்ஆன் 1:6).


+++++++++++++++++++++++++++


ஆதார நூ
ல்கள் மற்றும் கட்டுரைகள்:

· Muhammad Asad, ‘Islam at the Crossroads’, Kuala Lumpur: The Other Press, 2005

· Mohamed Aslam Haneef, The case of Islamic Economics, Post-autistic economics review – http://www.paecon.net/PAEReview/issue34/Haneef34.htm

· MissionIslam.com, Culture verses Islam – http://www.missionislam.com/family/culture.htm

· பாத்திமுத்து சித்தீக், நல்ல வாழ்க்கைக்கு வல்லவன் காட்டிய வழி, ஐதராபாத்: பாமு பதிப்பகம், 1999.


ஆக்கம்: சகோதரர். சலாஹுத்தீன்


சகோதரர் சலாஹுத்தீன் அவர்கள் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். திண்ணை தமிழ் இணையத் தளத்தில் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார்.

சகோதரர் சலாஹுத்தீன் அவர்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். அவரது தமிழாக்கம் திண்ணை இதழில் வெளிவந்துள்ளது.

இவையன்றி, http://salahuddin.blogsome.com http://salahuddin.blogspot.com என இரு வலைப்பதிவுகள் வைத்து எழுதி வருகிறார்.

2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான இரண்டாம் பரிசை வென்ற சகோதரர் சலாஹுத்தீன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! – சத்தியமார்க்கம்.காம்


2022007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.