மலேசிய முஸ்லிம் மருத்துவர் விண்வெளி வீரராகிறார்

{mosimage}கோலாலம்பூர்- மலேசியாவின் முதல் விண்வெளி வீரராகும் பெருமையை அந்நாட்டைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவரான முஸஃபர் ஷுகூர் பெற்றுள்ளார். பத்து வயதிலிருந்து தனக்கு இருந்த விண்வெளியில் பறக்க வேண்டும் என்கிற கனவை இறைவன் இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றுவான் என அவர் கூறினார். எலும்பியல் மருத்துவ நிபுணரான இவர் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பிரிவில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.

செப்டம்பர் 2007ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை நோக்கி ஏவப்பட இருக்கும் ரஷ்ய சோயுஸ் விண்கலத்தில் பயணிக்கவே இவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

மலேசிய ராணுவத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான ஃபைஸ் காலிதும் இவருடன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இருவரும் கடும் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர். இருப்பினும் ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் முஸஃபர் பயணிக்க இயலாவிட்டால் ஃபைஸ் விண்வெளிக்குப் பறப்பார்.

கிட்டத்தட்ட 12,000 பேரிலிருந்து வடிகட்டப்பட்டு பல நிலைகள் கடந்து இவ்விருவரும் கடும் சோதனைகளில் வெற்றி பெற்ற பின்னரே இந்த விண்வெளிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதாக மலேசிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வைத்து மலேசியா உலக அரங்கில் பெருமை பெற இறைவன் உதவி புரிவான் என்று மலேசியப் பிரதமர் அப்துல்லாஹ் அஹ்மத் பதாவி தெரிவித்தார். மலேசிய அரசு, "இந்தப் பயணத்தின் மூலம் முஸ்லிம்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் எவருக்கும் சளைத்தவர்களல்லர் என்பதை நிரூபிக்கும்" என்று கூறுகிறது. 2020க்குள் சந்திரனுக்கு மலேசிய வீரர் அனுப்பி வைக்கப் படுவார் எனவும் அந்நாடு கூறியுள்ளது.

மலேசிய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஜமாலுத்தீன் ஜர்ஜிஸ் இந்த விண்வெளிப் பயணம் மலேசியாவின் 50 வது விடுதலை நாளைக் குறிக்கும் வண்ணம் 2007 செப்டம்பர் 2 ஆம் நாள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

விண்வெளியில் நடத்தப் பெறும் சோதனைகளில் மலேசியத் தேநீர் தயாரித்தலும் இடம் பெறும் எனத்தெரிகிறது. மலேசியர்கள் தேநீரை இரு கைகளையும் விலக்கி ஒருகையை மிகவும் உயர்த்தி ஆற்றி நுரை பொங்கத் தயாரிப்பர். இதற்கு 'தே தாரிக்' என்று பெயர்.

மலேசியா பல துறைகளில் விரைவாக முன்னேறி வரும் ஒரு நவீன முஸ்லிம் நாடாக உருவாகி வருகிறது.