தீவிரவாதம் யாருக்குச் சொந்தம்?

அந்த விமானம், அமெரிக்காவிலிருந்து மும்பை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

வான மண்டலத்தில் மேகக் கூட்டங்கள் வரைந்த ஓவியங்களில் சிலர் லயித்திருந்தனர். இன்னும் சில இளைஞர்கள் கைபேசியில் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் அடிக்கடி இருக்கைகளிலிருந்து எழுந்தனர். அதுதான் அவர்கள் செய்த குற்றம்.

விமானப் பணியாளர்கள் சந்தேகம் கொண்டனர். அவர்கள் இஸ்லாமியர்கள். அத்துடன், அவர்கள் மும்பைவாசிகள். எனவே, அவர்கள் தீவிரவாதிகள்தான் என்று அச்சத்தில் உறைந்து போனார்கள்.

ஹாலந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. பன்னிரண்டு பேர் தனியாகப் பிரிக்கப்பட்டனர். பயங்கரமாக சித்திரவதை செய்யப்பட்டனர். நீண்ட விசாரணைக்குப் பின்னர், நிரபராதிகள் என்று, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சோகத்தைச் சுமந்து கொண்டு அவர்கள் மும்பை நகரில் காலடி எடுத்து வைத்தனர்.

அடிக்கடி குண்டு வெடிப்பு நிகழும் அந்த நகரத்தைத் தீவிரவாதத்தின் தொட்டில் என்றே உலகம் கருதுகிறது.

தொப்பி அணிந்திருக்கிறாரா? தாடி வளர்த்திருக்கிறாரா? அத்துடன் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரா? உறுதியாக அவர் தீவிரவாதிதான் என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள்.

அமெரிக்க வணிக வளாகம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கே சீக்கிய மக்கள்கூட சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். காரணம், அவர்களும் தாடி வளர்த்திருந்தார்கள்.

தொப்பி, தாடி, இவை தீவிரவாதத்தின் அடையாளங்களா? முன்பெல்லாம் வெளிநாடுகளுக்குச் சென்றால் ஒரு கேள்வி கேட்பார்கள்.

உங்கள் நாட்டில் பாம்புகளெல்லாம் தெருக்களில் ஓடி விளையாடுமாமே?’ என்று கேட்பார்கள்.

இப்போது, ‘பயங்கரவாதம் உங்கள் ஊரில்தான் பயிர் செய்யப்படுகிறதாமே? பாகிஸ்தானிலிருந்து பதியங்கள் வருகிறதாமே?’ என்று கேட்கிறார்கள்.

எரிமலைக் குழம்பிலிருந்து இங்கேதான் துப்பாக்கிகள் உருக்கி எடுக்கப்படுகிறதா? என்று அவர்கள் பதற்றத்தோடு கேட்கிறார்கள். கடைவீதிகளில் கையெறி குண்டுகள் கூறு கட்டி விற்கப்படுகிறதா என்று கூச்சத்தோடு கேட்கிறார்கள். பொதுவாக, ரத்தச் சுவடுகளில்தான் இந்தியா நடந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அதன் விளைவு என்ன? நடு வானில் பறந்த அமெரிக்க விமானம், ஆம்ஸ்டர்டாம் நகரில் இறக்கப்பட்டது. இந்தியக் குடிமக்கள் இம்சைகளுக்கு ஆளானார்கள்.

அண்மையில் டெல்லியில் நாடாளுமன்ற இணைப்பு வளாகத்தில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.

பயங்கரவாதம் ஏன் துளிர்விடுகிறது? அதனை முளையிலேயே கிள்ளி எறிவது எப்படி? என்னென்ன காரணங்களால் தீவிரவாதம் படமெடுத்து ஆடுகிறது? பாம்புப் புற்றுகளே உருவாகாமல் தடுப்பது எப்படி? என்ற தலைப்புகளில்தான் அறிஞர் பெருமக்கள் பலரும் தங்கள் ஆராய்ச்சிக் கருத்துக்களை வெளியிட்டனர்.

இறுதியாக, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். பயங்கரவாத நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதுதான் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்தக் கண்ணோட்டத்தில்தான் அவர்கள் குற்றங்களை ஆராய்கிறார்கள்என்று பிரதமர் வருத்தத்தோடு குறிப்பிட்டார்.

விரைவில் முதலமைச்சர்கள் மாநாடு கூட்டி இந்தக் குறுகிய கண்ணோட்டத்திற்கு விடை காண்போம்என்றார்.

மும்பை ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடித்தன. இஸ்லாமிய மார்க்க உலமாக்கள்தான் விசாரணை செய்யப்பட்டனர். அதே சமயத்தில் அமரவாதி, நான்டெட் நகரங்களிலும் குண்டுகள் செய்யும்போது வெடித்துச் சிதறின. அதனைப் பற்றி ஏன் விசாரணை நடைபெறவில்லை என்று மாராட்டிய முதல்வரைக் கேட்டிருக்கிறேன்என்றும் பிரதமர் சொன்னார்.

ஆம். நான்டெட் நகரிலிருந்து வகுப்புவாதத் தீவிர அமைப்பான பஜ்ரங் தள அலுவலகத்தில் குண்டுகள் வெடித்தன. அத்தகைய குண்டுகளை எல்லா மதத் தீவிரவாதிகளும்தான் கோலிக்குண்டுகளாக உருட்டி விளையாடுகிறார்கள். எனவே, ஒரு குறிப்பிட்ட சமுதாய மார்க்க அறிஞர்களிடம் மட்டும் ஏன் விசாரணை செய்ய வேண்டும்? பிரதமரின் நியாய உணர்வை நாம் பாராட்ட வேண்டும்.

மும்பை ரயில் நிலையங்களில் நடந்த குண்டுவெடிப்புக்களை ஒரு குறிப்பிட்ட சமுதாயக் கண்ணோட்டத்தோடு மட்டும் பார்க்காதீர்கள். பிற கண்ணோட்டங்களிலும் கவனம் செலுத்துங்கள்என்று இந்தக் கருத்தரங்கில் பேசிய இஸ்லாமிய அறிஞர் பெரு மக்கள் கேட்டுக் கொண்டனர்.

மும்பை நகரில் எல்லா சமூக தீவிரவாதங்களும் பள்ளி கொண்டிருக்கின்றன.

மும்பை ரயில் குண்டுவெடிப்புக்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர், ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டதாகச் சிவசேனையினர் பெரும் ரகளை செய்தனர். அரசு வாகனங்கள் அக்கினி பகவானுக்கு ஆகுதியாக வழங்கப்பட்டன.

அத்வானி தலைமையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, தீவிரவாதத்திற்குப் பிள்ளையார் சுழி போட்ட நாளிலிருந்து இன்று வரை எத்தனையோ பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறியிருக்கின்றன. ஆனாலும் இருபெரும் சமுதாயங்களுக்கு இடையே வகுப்புக் கலவரங்கள் பெருமளவில் மூளவில்லை. நரேந்திரமோடியின் குஜராத் அதற்கு விதிவிலக்கு. எனவே, அப்படி இந்தியாவில் ரத்த ஆறுகள் ஓட வேண்டும் என்று துடிப்பவர்கள் உண்டு.

ஆகவே, அந்தக் கோணங்களிலும் குண்டு வெடிப்புகளுக்கான பின்னணிகள் ஆராயப்படவேண்டும்.

பயங்கரவாதம், தீவிரவாதம் என்பது இஸ்லாமிய சமுதாயத்தின் ஏகபோக உரிமை என்ற தோற்றத்தை, அமெரிக்கா தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. ஒசாமா என்றால் வெள்ளை மாளிகையே கிடுகிடுக்கிறது. அமெரிக்க புஷ் எங்காவது பொதுக்கூட்டத்தில் பேசியது உண்டா? படை பட்டாளங்களுக்கு நடுவேதான் அவர் வீர உரை நிகழ்த்துகிறார்.

இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக இஸ்ரேலை பயங்கரவாத நாடாக உருவாக்கி வைத்திருப்பது யார்? ஆப்கனிஸ்தானில் பயங்கரவாதக் கள்ளிச்செடிக்குப் பதியம் போட்டது யார்? எனவே, இன்றைக்கு விமானத்தில் பறக்கின்ற அப்பாவிகள்கூட, அவர்களுக்குப் பயங்கரவாதிகளாகக் காட்சி அளிக்கிறார்கள்.

எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் பயங்கரவாதிகளெல்லாம் இஸ்லாமியர்கள்தான் என்ற மாயத் தோற்றத்தை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது.

மனித வெடிகுண்டுக் கலாசாரம், ஈழத்து மண்ணில்தான் பிறந்தது. அதன் பிதாமகன் இஸ்லாமியர் அல்லர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலம், ரத்தக் கொதிகலனாக இருந்தது. அந்தப் பயங்கரவாதத்தின் முன்னோடிகள் இஸ்லாமியர்கள் அல்லர், சீக்கியர்கள்.

அஸ்ஸாமில் இன்றைக்கும் செயல்படுகிற உல்பா தீவிரவாத இயக்கம், பங்களாதேஷிலிருந்து குடிபெயர்ந்த இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இயக்கம்தான். அந்த இயக்கத்தின் முன்னணிப் படையினர் முழுக்கமுழுக்க இந்துக்கள்.

இந்தியாவில் மொத்தமுள்ள 600 மாவட்டங்களில் 150 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் சிந்தனையாளர்களின் செல்வாக்கு மண்டலமாகி இருக்கின்றன. அந்த மாவோயிஸ்ட்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களா?

நாகா தீவிரவாத அமைப்புக்களையும் மிசோரம் தீவிரவாதக் குழுக்களையும் முன்னின்று இயக்குபவர்கள் கிறிஸ்துவர்கள்.

பிரதமர் பங்குகொண்ட டெல்லி மாநாடு ஒரு பிரகடனம் செய்திருக்கிறது.

பயங்கரவாதம் எந்த உருவில் யார் தலைமையில் உருவானாலும் கண்டிப்போம். எல்லா பயங்கரவாதச் செயல்களையும் இஸ்லாத்தோடு இணைப்பதையும் கண்டிப்போம்.

நல்ல பிரகடனம். வரவேற்போம்.

தகவல்: MuSa நன்றி: திரு.சோலை, குமுதம் ரிப்போர்ட்டர்