தேசப்பற்றின் புதிய அளவு கோல்

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற சொல் பாஜகவுக்காக உருவாக்கிய பழமொழியாகத் தான் இருக்க வேண்டும். பாஜகவுக்குப் புல் எல்லாம் தேவைப்படாது; ஒரு பாட்டு போதும். மற்ற அரசியல் கட்சிகள் வறுமை, வேலையின்மை, ஊழல், அயல்நாட்டுக்கொள்கை போன்ற கௌரவமான பிரச்சனைகளை முன்னிறுத்தி தங்கள் கட்சியை மக்கள் முன்னிலையில் கொண்டு சென்று அரசியலில் ஒரு இடம் தேட முயலும் பொழுது பாஜகவுக்கும் அதனுடன் ஒத்து ஊதும் இந்துத்துவப் பாசிச சக்திகளுக்கும் இது போன்ற ஏடாகூடமான காரியங்களை கையில் எடுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமொன்றும் இல்லை. நர்சரிப்பாட்டு, பெயிண்டிங், கிரிக்கெட் முதலான மிக முக்கியமான தேசியப்பிரச்சனைகளில் இருந்து விஷயங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டால் போதுமானது.

பாஜக என்கிற வல்லவன் தற்போது தேசியப்பிரச்சனையாக கையில் எடுத்திருப்பது வந்தே மாதரம் என்ற பாடலாகும். செப்டம்பர் 7 அன்று இந்திய நாட்டில் உள்ள எல்லாப் பாடசாலைகள், நர்சரிகள், மதரசாக்கள் போன்றவற்றில் பயிலும் எல்லா மாணாக்கரும் "ஸுஜலாம் ஸுஃபலாம் மலயஜ சீதளாம்" என்று பாடி துர்கா தேவியை வணங்கியே தீர வேண்டும். இது போன்று தேவியைத் துதி செய்யாதவர் தேசத் துரோகிகள் என்ற முத்திரை குத்தப்படுவதற்கு பிஜேபி ஆளும் மாநிலங்களில் உள்ள அதன் ஹிந்துத்துவ கூட்டத்துக்கு யாதொரு சந்தேகமும் இல்லை.

இவ்வாறு பாடித் தங்களது தேசப்பற்றை தெரிவிக்காதவர்களை என்ன செய்ய வேண்டும் என பிஜேபி நேரடியாக கூறவில்லை. எனினும் அதனன அரசியல் முகமாகக் கொண்டு இயங்கும் சங் பரிவார தலைவர்கள் பல ஆலோசனைகளை முன்மொழியத் தொடங்கி விட்டனர்.  

இதற்கு அதிகப்படியாகச் சில அருமையான ஆலோசனைகள் நமக்கும் உண்டு. அவ்வாறு பாட்டுப்பாடித் தங்களது தேசப்பற்றை நெற்றியில் ஒட்டிக் காண்பிக்காதவர்களைத் தேடிப்பிடித்துச் சிறையில் அடைக்கலாம், இந்திய எல்லையைக் கடந்து பாகிஸ்தானிற்கு நாடுகடத்தலாம், அல்லது குஜராத் போல இனச்சுத்திகரிப்புச் செய்யலாம். எந்த முறையைத் தேர்ந்தெடுப்பது என்பதைக் குறித்து இனி சங் பரிவாரத்தின் தலைமையகமான ஆர்.எஸ்.எஸ் தான் முடிவெடுக்க வேண்டும்.

கடந்த சில காலங்களாக பாஜக என்ற தேசப்பற்றை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட சங் பரிவாரத்தின் அரசியல் முகத்திற்கு முக்கிய தேசப்பிரச்சனைகள் பாட்டுக்களாகும். இது போன்று பல முக்கிய தேசப்பிரச்சனைகளைக் கையில் எடுத்துக் கொண்டு போராட ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் இந்திய நாட்டின் மதசார்பின்மை இதற்கொன்றும் இதுவரை வளைந்து கொடுக்கவில்லை. ஒரு வேளை அதனால் தான் பாட்டு என்ற புதிய ஆயுதத்தை காவிமுகங்கள் கையில் எடுத்திருக்க வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்பு ஒரு நர்சரிப் பாட்டிலிருந்து இது ஆரம்பமானது. உலகம் முழுக்க உள்ள குழந்தைகள் பாடிவருகின்ற  "டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்" என்ற பாடலுக்கு எதிராக பாஜக ஒருமுறை ஓங்கிக் கத்திப் பார்த்தது. ஆங்கிலக் கலாச்சாரத்தின் வாடை அடிக்கும் இப்பாடல் பாரதீய கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல என்பது தான் பாஜக இதற்குக் கண்டுபிடித்த காரணம். இக்கண்டுபிடித்தல் நடந்தேறியது பாஜக ஆட்சி புரியும் மத்தியபிரதேசத்தில் தான். இதனைத் தொடர்ந்து இந்த நர்சரிப் பாட்டை பாடும் குழந்தைகளும் தேசவிரோதிகளே என்று பாட்டைக் கொண்டு தேசப்பற்றை அளக்க புதிய அளவுகோல் கண்டுபிடித்த இந்தியச் சுதந்திரப்போரில் ஆங்கிலேயர்களுக்கு சுதந்திரப்போராளிகளை காட்டிக் கொடுத்த நவீன காவி தேசப்பற்றாளார்கள் அறிவித்தனர்.

தற்போது வந்தேமாதரம் பாடாத குழந்தைகள் தேசவிரோதிகள் என்று அறிவித்திருக்கின்றனர். ஆஹா! சுதந்திர இந்தியாவில் தேசப்பற்றாளர்களாகவும் தேசவிரோதிகளாகவும் ஆவது எத்தனை எளிது. ஏதாவதொரு பாட்டு பாடவோ அல்லது பாடாமல் இருந்தாலோ போதுமானது. அதன் பிறகு நிம்மதியாக இருந்து என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். கறுப்புப்பணத்தை பெட்டி பெட்டியாக பதுக்கி வைக்கலாம், வெளிநாட்டு சக்திகளுக்கு கைக்கூலிகளாகலாம், உளவுப்பணி பார்க்கலாம். ஆனால் ஒரு காரியம் மட்டும் சரியாக செய்திருக்க வேண்டும்; நர்சரிப் பாட்டு பாடக்கூடாது; வந்தே மாதரம் பாடியிருக்க வேண்டும். இவை எல்லாம் செய்வது துர்கா தாயை வணங்கி பாடிய பிறகுதானே. ஒருவேளை தாய் இதையெல்லாம் மன்னித்து விடுவாள் போலும்.

நன்றி: கண்ணன், தேஜஸ்.

தகவல்: இப்னு ஜமால்