நாசிக் அருகே உள்ள நகரில் மசூதியில் குண்டு வெடிப்பு

{mosimage}நாசிக் – மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மதியம் இந்திய நேரம் 1355 அளவில் மூன்று சக்தி வாய்ந்த குண்டுகள் மலேகான் நகரப்பள்ளிவாயில் ஒன்றில் வெடித்தது. இதில் இதுவரை கிடைத்த அரசுத் தகவல்களின் படி 45 பேர் இறந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது, அப்பாவிப் பொதுமக்களை அதிலும் குறிப்பாக வெள்ளி சிறப்புத் தொழுகையான ஜும்ஆ தொழவரும் முஸ்லிம்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அவர்கள் இந்தக் குண்டுவெடிப்பைக் கண்டிப்பதாகவும், இதுமத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவே செய்யப் பட்ட கொடுஞ்செயல் என்றும் தெரிவித்தார்.
இந்நகரம் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றதாகும். இந்நகரில் வசிப்போரில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள் ஆவர்.
மஹாராஷ்டிரத் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான ஆர் ஆர் பாட்டீல் மலேகானுக்கு நாளை செல்வார் எனத் தெரிகிறது.
இதற்கிடையில் பிரதமர் மன்மோகன்சிங் மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் மத நல்லிணக்கத்தைக் குலைக்க நடைபெறும் இது போன்ற நடவடிக்கைகளை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்

பொதுமக்கள் மீது தொடுக்கப்படும் குண்டுவெடிப்பு போன்ற கொடுமைகளுக்கு அதை செய்தவர்கள் மீது நடைபெறும் விசாரணை காலத்தாழ்வுகளும் இதுபோன்ற செயல்களை மென்மேலும் செய்வதற்கு சமூகவிரோத சக்திகளை ஊக்குவிக்கின்றன என்பதை மறுக்கவியலாது.

விரைவான விசாரிப்புகளும் குற்றம் நிரூபணமானபின் பொதுவில் நிறைவேற்றப்படும் கடும் தண்டனைகளுமே இம்மாதிரி கொடுஞ்செயல் செய்வோரைத் தடுத்து நிறுத்தும்.

இக்கொடூர தாக்குதலில் தம் குடும்பத்தில் ஒருவரையோ இருவரையோ பலரையோ இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை அக்குடும்பத்தினருக்கு வழங்குமாறு இறைவனை இறைஞ்சுகிறோம்.

அப்பாவி மக்களின் மீது இந்தக் கொடுமையைக் கட்டவிழ்த்து விட்ட  கொடியவர்கள் இரக்கமில்லா அரக்கர்கள் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது. இந்த மாபாதகச் செயலை எவர் செய்திருந்தாலும் என்ன காரணத்திற்காகச் செய்திருந்தாலும் அவர காலம் தாழ்த்தப்படாமல் தண்டிக்கப்படவேண்டும்.