சென்னையில் ராக்கெட் ஏவுகருவிகள் தயாரிப்பா?

பெங்களூருடன் தகவல் தொழில்நுட்பத்தில் போட்டி போடும் சென்னை இப்போது அரசுக்கு கவலை அளிக்கும் ஒரு விஷயத்தில் முன்னணியில் இருக்கிறது, அதுவும் அரசுக்குத் தெரியாமலேயே.

ஆந்திராவில் அதிக சக்தி கொண்ட 875 ராக்கெட் குண்டுகளும் 27 ஏவுகருவிகளும் பிடிபட்டது பலருக்குத் தெரிந்திருக்கலாம். பயங்கரவாதிகள் பயன்படுத்தும் இந்த அதி பயங்கர ராக்கெட் குண்டுகள் சென்னையிலேயே தயாராவதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ராக்கெட் குண்டுகளையும் அவற்றின் ஏவுகருவிகளையும் தயாரித்துக் கொடுக்கும் திருட்டுத் தொழிற்சாலைகள் சென்னை அம்பத்தூர், பிராட்வே, கொருக்குப்பேட்டை பகுதிகளில் செயல்படும் பட்டறைகள் எனத் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதம் தலை விரித்தாடும் மாநிலங்களிலும், இந்திய இறையாண்மையைக் கேள்விக்குள்லாக்கும் பிரிவினைவாத சக்திகள் நிறைந்த வடகிழக்கு மாநிலங்களிலும்  இல்லாத அளவுக்கு திருட்டுத் தனமாக ராக்கெட் குண்டுகளும், ஏவுகருவிகளும் தயாரிக்கும் அளவுக்கு சென்னை ஆகிவிட்டது. இதனை முன்னேற்றம் என்று எண்ணி பூரிக்க முடியுமா?

சென்னையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறியதும் பெரியதுமாய் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், என்ன தயாரிக்கிறார்கள் என்பது அரசுக்குத் தெரியப் படுத்தி இருக்க வேண்டும். பெரும்பாலும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பதாக சொல்லிக் கொண்டு, எதை வேண்டுமானாலும் பணத்துக்காக தயாரித்துக் கொடுக்கும் பட்டறைகள் அதிகமாகிவிட்டன. எந்த அச்சு கொடுத்தாலும், அதே போல இரும்புகளை உருக்கி, வடித்து செய்து தரும் திறமைப் படைத்த குடைவு பட்டறைகள் உருவாகிவிட்டன.

இது போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களை தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தும் ஆய்வாளர்களோ அல்லது சட்டம் ஒழுங்கை கட்டிப் காப்பாற்றும் காவல்துறையினரோ கண்காணித்தார்களா என்றால், அதற்கு அரசுதான் பதிலிறுக்க வேண்டும்.

இரண்டு டன் எடை கொண்ட ராக்கெட் குண்டுகளும், ஏவுகருவிகளும் தயாரிக்கப்பட்டு, வெளி மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதை சென்னை போலீசார் எப்படித் தெரியாமல் மெத்தனமாக இருந்துவிட்டார்கள் என்பது இன்னும் புரியவில்லை. நாட்டு வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள் போன்றவற்றை பயங்கரவாதிகள் உள்ளூரிலேயே செய்வார்கள். அவை பெரும் ஆபத்தை ஏற்படுத்தாது. ராணுவ ஆயுத தொழிற்கூடத்தில்தான் ராக்கெட் குண்டுகளை தயாரிக்க முடியும். ஒன்று முதல் பத்து கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இந்த குண்டுகள் தாக்கும். தோளில் இவற்றைச் சுமந்த படி இந்த குண்டுகளை ஏவ முடியும். மிகப்பெரிய கட்டடங்கள், அணு உலைகள் போன்றவற்றை இதன் மூலம் தகர்க்க முடியும். இது தற்போது உள்நாட்டிலேயே அதுவும் சென்னையிலேயே தயாரான தகவல் மாநில, மத்திய உளவுத் துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தீவிரவாதம், பயங்கரவாதம் என்றாலே முஸ்லிம்களைத் தொடர்பு படுத்தும் சில சக்திகள் இது போன்ற தேச நலனுக்கு பெருத்த ஊறு விளைவிக்கும் செய்திகளில் அமைதி காப்பது கேள்விக்குரியது.

தகவல்: அபூ இப்ராஹிம்