முஸ்லிம்கள் வலிமையுடன் ஒன்றுபட வலியுறுத்தல்

ஜித்தா: முஸ்லிம்களுக்கு வலிமை உள்ளவரை அவர்களை வெல்ல யாராலும் முடியாது என்றும் அதனால் இயன்ற அளவு வலிமை பெற இஸ்லாமிய நாடுகள் முயற்சிக்க வேண்டும் எனவும் மக்காவிலிருக்கும் புனித மஸ்ஜித் அல் ஹராம் பள்ளியின் இமாம் முனைவர். ஸாலிஹ் பின் ஹுமய்த் அவர்கள் உலக முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தார்.

உலக அமைதிக்காகவும் அநியாயம் இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் முஸ்லிம்களின் உரிமைகளைக் காப்பதற்கும் அவர்கள் வலிமை பெற வேண்டியது அவசியமாகும். வலிமை என்பது ஒருபோதும் அமைதிக்கு ஊறு விளைவிக்காது. அது அமைதியை ஏற்படுத்தவே செய்யும். வலிமை பொருந்திய நாட்டை எவரும் இடையூறு செய்ய மாட்டார்கள் என்று அவர் கூறினார். மக்காவிலிருக்கும் புனிதமிகுப் பெரும்பள்ளி மஸ்ஜிதுல் ஹராமில் கடந்த வெள்ளியன்று நடந்த ஜும்ஆ சிறப்புப் பேருரையில் இஸ்லாமிய நாடுகள் தங்களது இராணுபலத்தை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்து அவர் வலியுறுத்தினார்.  

இஸ்லாத்தைக் குறித்த தவறான எண்ணங்களை கொண்ட சில தீயசக்திகள் மத்திய ஆசியாவில் நடத்தும் தவறான அணுகுமுறையும் தீய திட்டங்களுமே இங்கு தீவிரவாதம் உருவாக காரணமாகின்றது என்றும் முனைவர் ஸாலிஹ் கூறினார். அவர்களின் செயல்பாடுகள் வெறுப்பை விதைப்பதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சி அவசியமானதாகும். இஸ்லாமிய நாடுகள் இறைநம்பிக்கையுடன் இணைந்த ஒற்றுமையுடன் வலிமையும் பெற்றால் உலகில் அமைதியைத் தோற்றுவிக்க முஸ்லிம்களால் முடியும். அடக்குமுறை மற்றும் அநீதியுடனான பலம் நிச்சயம் தோல்வியை சந்திக்கும். இவ்வழியில் செல்லும் தீயசக்திகளுக்கு இறைநம்பிக்கையில் உறுதியுடையவர்களை தோற்கடிக்க இயலாது. தீய அடக்குமுறைகள் மக்களை அவர்கள் கொண்டுள்ள கொள்கையில் உறுதியுடையவர்களாக்கும். அடக்குமுறைகளை நெஞ்சுறுதியுடன் சந்திக்கும் துணிவை முஸ்லிம் நாடுகள் பெறவேண்டும். இஸ்ரேலுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் வெற்றியின் மூலம் அரபு உலகம் கூடுதல் மனநம்பிக்கை பெற்றுள்ளது எனவும் இமாம் கூறினார். ஆட்பலமும் பொருளாதார வலிமையும் உள்ளதோடு ஆயுத வலிமையையுயும் இஸ்லாமிய நாடுகள் பெறவேண்டும் எனவும் புதிய ஒரு மத்திய ஆசியாவிற்கு ஹிஸ்புல்லா துவக்கம் குறித்ததாகவும் அவர் அறிவித்தார்.

முஸ்லிம்களுக்கிடையில் ஷியா, சுன்னி என சர்வதேச அளவில் பிளவுண்டு காலம்காலமாக அடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஷியா பிரிவினரின் ஆதரவிற்குரியவர்கள் எனக் கருதப்படும் ஹிஸ்புல்லாவைக் குறித்த மக்கா இமாமின் கூற்று முஸ்லிம்களின் இப்பிளவை வைத்து குளிர்காய்ந்து கொண்டிருக்கும் தீய சக்திகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளதும் முஸ்லிம்களுக்கிடையில் இவ்வேறுபாடு மறைந்து ஒற்றுமை ஏற்பட காரணமாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. முனைவர் ஸாலிஹ் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமின் முக்கிய இமாம் பதவியோடு சவூதி அரசருக்கு ஆலோசனை வழங்கும் நாடாளுமன்ற அந்தஸ்து உள்ள ஷூரா குழுவின் தலைவர் பதவியும் வகித்து வருபவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கிடையில் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ள ஈரானின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மத் கத்தமி அவர்கள் அங்கு ஒரு முஸ்லிம் மாநாட்டில் பேசும் பொழுது அமெரிக்காவைக் குறித்த மக்கா இமாமின் கூற்றுகளை ஒத்த கருத்துக்களை தெரிவித்தார்.