அடுத்த போருக்குத் தயாராகும் இஸ்ரேல்!

இஸ்ரேல் ராணுவம் அடுத்த இரண்டு வருடங்களில் அது எதிர்நோக்கும் அடுத்த போருக்கு ஆயத்தமாக, அதன் வழக்கமாக ஒதுக்கப்படும் நிதிக்கு மேல் 7 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என அறிவித்திருக்கிறது. ஹிஸ்புல்லா இயக்கம், சிரியா, ஈரான் இவற்றில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடனான போரை இஸ்ரேல் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.

தற்போது நடந்து முடிந்த போரில் ஹிஸ்புல்லா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, கனரக பீரங்கி வாகனங்களை (Tanks) குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது.  இத்தாக்குதலில் இஸ்ரேலியப் பீரங்கி வாகனங்கள் பெருமளவில் சேதமடைந்ததாகத் தெரிகிறது.  அடுத்த போரில் இத்தாக்குதலைச் சமாளிப்பதற்காக இவ்வாகனங்களின் தற்காப்பிற்கான சாதனங்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் பெருமளவில் செலவிட இஸ்ரேலிய ராணுவம் விரும்புகிறது. 

இது தவிர, ஏவுகணைகளைத் தாக்கக்கூடிய லேசர் துப்பாக்கிகள் தயாரிக்கவும், மற்றைய ராணுவ தளவாடங்கள்  சேகரிக்கவும், ராணுவத்தினரின் மறுபயிற்சிக்காகவும் இஸ்ரேல் ராணுவம் இந்தப் பெருந்தொகையை நிதி அமைச்சகத்திடம் கேட்டிருக்கிறது.

ஹிஸ்புல்லாவுடனான போரைச் சந்தித்த போது, இஸ்ரேலிடம் இந்த வருட ராணுவ பட்ஜெட் 7.7 பில்லியன் அமெரிக்க டாலரும், வருடாந்திர அமெரிக்க ராணுவ உதவியாக 2.2 பில்லியன் டாலரும் இருந்தது. அது போக நிதிநிலை உபரித் தொகையாக 2 பில்லியன் டாலரும் கைவசம் இருந்தது.  இந்த போருக்கான நேரடிச் செலவு 5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இஸ்ரேலின் இந்த ஆண்டிற்கான பொருளியல் வளர்ச்சி 5.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  போருக்குப் பின் இந்த மதிப்பீடு 4 சதவிகிதமாக குறைக்கப் பட்டுள்ளது.  ஆக, இந்தப் போரினால் இஸ்ரேல் பொருளாதார அளவில் பெரும் பாதிப்பு அடையவில்லை.

ஆனால், தற்போது இஸ்ரேல் ராணுவம் கேட்கும், வழக்கமான நிதி ஒதுக்கீட்டிற்கு மேலதிகமான 7 பில்லியன் டாலர்கள் தொகையைப் பார்த்து நிதி அமைச்சகம் அதிர்ந்து போயிருக்கிறது.  இந்த பட்ஜெட் ஒப்புக் கொள்ளப்பட்டால், அது இஸ்ரேலை பொருளாதார ரீதியில் 20 அல்லது 30 வருடங்களுக்கு முந்தைய நிலைக்கு கொண்டு சென்று விடும் என்றும் அதனால் இஸ்ரேலியர்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக பாதிக்கப்படும் எனவும் இஸ்ரேலிய பொருளாதார வல்லுனர்கள் அஞ்சுகின்றனர்.
ராணுவத்தின் இந்த வேண்டுகோளை இஸ்ரேல் அரசு அடுத்த வாரம் அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.   

செய்திக்குறிப்பு: இப்னு பஷீர்