RSS பிரமுகரின் அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புக்கெதிரான போராட்டம் வலுக்கிறது

வாஷிங்டன் DC: இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர், சீக்கியர்  முதலான சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தி அதற்காக ஆட்களைச் சேர்த்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கி ஆயத்தப் படுத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளை அங்கீகரிக்கக் கூடாது என டென்வர் நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் தலித் விடுதலைக் கூட்டமைப்பு (Dalit Freedom Network) அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்துத்துவ இயக்கங்களின் செயல்பாடுகள் அமெரிக்க அரசால் நிச்சயம்  ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல என்று வெளிப்படையாக அமெரிக்க அரசு அறிவிக்க வேண்டும் என  வெளியுறவு அமைச்சகம் (State Department), அமெரிக்க நாடாளுமன்றம் (US Congress), வெள்ளை மாளிகை (White House) போன்றவைகளுக்கு இவ்வமைப்பு அளித்துள்ள மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்த ஆர்.எஸ்.எஸின் செய்தித் தொடர்பாளரான ராம் மாதவ் அமெரிக்கா சென்றார். இந்துத்துவ இயக்கங்களை அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இவர் அமெரிக்கா சென்றுள்ளதாகக் கருதப்படுகிறது. இவரின் அமெரிக்கப் பயணத்தை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச செயல்பாடுகளை அமெரிக்க அரசு கண்டனம் செய்யக் கோரியும் மேற்கண்ட தலித் அமைப்பு உள்பட பல சிறுபான்மை அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

தங்களின் பிரமுகர் தற்போது அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்த அமெரிக்கப் பிரயாணத்தில் உள்ளதை ஆர்.எஸ்.எஸ் ஒப்புக் கொண்டதாக சிஃபி.காம் செய்தி கூறுகிறது.

மேலும் அத்தளம், "திரு. மாதவ் தனிப்பட்ட முறையிலும், இயக்க அவசியங்களுக்காகவும் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் செப்டம்பர் 10 அன்று இந்தியா திரும்புகிறார்" என்று ராம் மாதவின் நெருங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறுகிறது.

சங் பரிவாரின் பாசிச செயல்பாடுகளுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தைப் பெறுவது தான் இந்த அமெரிக்க அதிகாரிகளுடனான ரகசிய ஆலோசனையின் உள்நோக்கம் என்று கூறி இந்த ரகசிய ஆலோசனையை எதிர்த்து அமெரிக்க தலித்-முஸ்லிம் அமைப்புகள் போராடக் களமிறங்கிய பின்னரே திரு. ராம் மாதவின் இந்த அமெரிக்கப் பயணம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த ரகசிய ஆலோசனைக்கு எதிராக அமெரிக்காவில் இந்திய முஸ்லிம் குழுவும் (Indian Muslim Council) களமிறங்கியுள்ளது. சர்வதேச மனித உரிமைக் கழகத்தினரின் பல அறிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளைத் தீவிரவாதச் செயல்பாடுகளாகக் குறிப்பிட்ட அமெரிக்க வெளியுறவுத் துறையின் நிலைப்பாட்டை மாற்றக்கூடாது எனவும் இவ்வமைப்பு கோரியுள்ளது.

2002 குஜராத் கலவரங்களின் போது திட்டமிட்டுச் சிறுபான்மையினரக் குறிவைத்து நடத்தப்பட்ட இன அழிப்பில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர்களுக்கும், பெண்களைக் கூட்டமாக மானபங்கம் செய்தவர்களுக்கும் தலைமை தாங்கி உற்சாகம் தந்து ஊக்குவித்த இயக்கம் தான் இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம். 1925ல் அதனைத் தொடங்கியது முதல் சிறுபான்மை மக்களுக்கு எதிரான கூட்டு ஆக்ரமிப்பிற்கும், வன்முறைகளுக்கும், அநியாயங்களுக்கும் இது ஆணிவேராக இருந்து செயல்படுவதாகவும் இந்திய முஸ்லிம் குழு வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்பு தெரிவிக்கின்றது.

குஜராத் இன அழிப்பு சம்பவத்திற்குத் துணைபுரிந்ததன் காரணமாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா செல்வதற்கான புகல் அனுமதியை (Visa) 2005ல் அமெரிக்கா வழங்க மறுத்தது.

நியூஜெர்ஸியில் நடக்கும் உலக குஜராத்திகள் மாநாட்டில் பங்கெடுப்பதற்காக இந்தியாவிலிருந்து கிளம்பத் தயாரான 75 உறுப்பினர்கள் கொண்ட ஒரு சங்கத்திற்கும் அமெரிக்கா புகல் அனுமதி தர மறுத்திருந்தது. இந்த சங்கத்தில் மோடியின் அரசில் பங்கு வகிக்கும் பாஜக அமைச்சர்களும் மோடியின் கையாள் என அழைக்கப்படும் புருஷோத்தம் ரூபாலும் அடங்கியிருந்தனர்.

தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்ஸால் பயிற்றுவிக்கப்பட்ட தேசிய தலைவர்களுக்கு அமெரிக்கா புகல் அனுமதி வழங்க மறுத்து அவர்களின் தீவிரவாத முகம் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படுவதை நிறுத்துவதற்காகவும், தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்பாடுகளுக்கு அமெரிக்காவின் துணையை உறுதி செய்து கொள்வதற்காகவும் தான் தற்போதைய ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவின் அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் என்ற ஐயம் உறுதியாக எழுந்துள்ளது.