பன்னிரண்டு வயது ஆச்சரியம் லுத்ஃபுல்லாஹ்!

குட்டிப் பையா! என்று எவரும் அழைக்கும்படியான சிறிய உருவம்! அழுத்தம் திருத்தமாக ஆணியடித்தார் போன்று முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பளிச்சென்ற புன்முறுவல்! பன்னிரண்டு வயதுப் புயல் லுத்ஃபுல்லாஹ் காலிகவ் இன்றைய தேதிக்கு உலகத்தையே தன் வசம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.

மனிதனுடைய நினைவாற்றல் எத்தனை மகத்தானது என்பது மற்றுமொரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

இறை வசன எண்களை ஒருவர் சொன்ன மாத்திரத்தில், மிகத் துல்லியமாக அந்த எண்களுக்குரிய வசனங்களை ஓத ஆரம்பிக்கிறார் லுத்ஃபுல்லாஹ்! அடடே! எனும் புருவ உயர்த்தல் வியப்பு மாறாமல் கேள்வியைத் திருப்பிப் போட்டு கேட்போமே என்று ஏதேனும் சில வசனங்களைச் சொன்னால், அவ் வசனங்களுக்குரிய எண்களையும் சடாரெனக் குறிப்பிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். கொசுறாக, அந்த இறை வசனங்கள் இறங்கிய வரலாறு, இடம் பெற்றுள்ள பக்க எண், துவங்கும் இடம், முடிவடையும் இடம் என்பதை எல்லாம் பிசிறு இன்றிச் சொல்லி முடிக்கிறார்.

{youtube}KKXxy9vJgKM{/youtube}

16வது ஆண்டாக‌ துபையில் தற்போது நடைபெற்று வரும் ச‌ர்வ‌தேச‌த் திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியையொட்டி ச‌ர்வதேச‌ அள‌விலான‌ திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. கலந்து கொண்ட பார்வையாளர்கள், நடுவர்கள் உட்பட ஒளிபரப்பினை கண்டு களித்து வரும் சர்வதேச பார்வையாளர்களையும் ஒரு சேர வியப்பில் ஆழ்த்தியிருக்கும் லுத்ஃபுல்லாஹ், தஜகிஸ்தானின் பிரபலமான இமாம் சையது முகர்ரம் அப்துல் காதிர் அவர்களின் மகன்.

இவரது சிறப்பான இம்மை மற்றும் மறுமை வாழ்க்கைக்காக சத்தியமார்க்கம்.காம் குழு தமது வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறது.


சில கூடுதல் தகவல்கள்:

ர்வதேச அளவிலான இப்போட்டியில் ஐரோப்பா, பங்களாதேஷ், ஜோர்டான், இலங்கை, மாலி, டென்மார்க், உகாண்டா, இத்தாலி, இராக், பாகிஸ்தான், பஹ்ரைன், ஃபிலிப்பைன்ஸ், நைஜீரியா, நெதர்லாந்து, தாய்லாந்து மற்றும் தான்சேனியா ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன. போட்டி நடைபெறுவது ரமளான் மாதம் என்பதால் தினசரி இரவு 10.30 மணிக்கு துவங்கும் இப்போட்டி ரமளான் 20 வரை தெய்ரா – துபையில் தொடர்ச்சியாக நடக்கவுள்ளது.

இதில், கஜகஸ்தானிலிருந்து கலந்து கொண்ட ஒன்பது வயது சிறுவன் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த கண் பார்வை இழந்தவர் உட்பட பல்வேறு நாட்டிலிருந்து போட்டியாளர்கள் ஆர்வமுடன் தினசரி பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

{youtube}oud_T4GniWo{/youtube}


முதல் நிலையை அடையும் வெற்றியாளர் இந்திய ரூபாய் மதிப்பில் 30 இலட்ச ரூபாய்களை பரிசுத் தொகையை வெல்வார். தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் போட்டியாளர்களுக்குப் பல லட்ச ரூபாய்களில் பல்வேறு பரிசுத் தொகைகள் காத்திருக்கின்றன.


{youtube}YTkQ5mlJneM{/youtube}


“திருக்குர்ஆனின் சிறப்புகள் மற்றும் குர்ஆனை மனனம் செய்து அழகிய முறையில் ஓதக்கூடிய திறமையை வெளிக் கொண்டு வரும் முகமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ள வாசகர்கள், குர்ஆன் போட்டி நடைபெறும் இணைய தளத்தையோ (www.quran.gov.ae) மின் முகவரியையோ (quran@eim.ae) அல்லது தொலைபேசியையோ  (+971-04-2610666) அணுகலாம்.