மூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா?

ஐயம்:-

ரமளானில் ஒவ்வொரு பத்துக்கும் தனித்தனி துஆக்கள் இருக்கின்றனவா இல்லையா? அது சஹீஹான ஹதீஸா? விரிவாக விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

– asee

தெளிவு:-

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …

ரமளான் மாதத்தின் ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் தனித்தனி துஆக்கள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் ஸஹீஹான ஹதீஸ் இருப்பதாக காணமுடியவில்லை. ஆனால், முதல்பத்து நடுப்பத்து, கடைசிப்பத்து எனக் குறிப்பிடும் ஸஹீஹான அறிவிப்புகள் உள்ளன. அவற்றைச் சார்ந்து இப்னு குஸைமா எனும் நூலில் பலவீனமான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் பார்ப்பதற்குமுன், ரமளான் மாதத்தின் முதல்பத்து, நடுப்பத்து, இறுதிப்பத்து என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளை அறிந்துகொள்வோம்!

நான் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களிடம் சென்றேன். எங்களுடன் தாங்கள் பேரீச்ச மரத்தோட்டத்திற்கு வந்தால் நாம் பேசிக் கொண்டிருக்கலாமே என்று கேட்டேன். அவர்களும் புறப்பட்டனர். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்!” என்று கேட்டேன்.

அப்போது அபூ ஸயீத்(ரலி), “நபி(ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாட்களிலுள்ளது)‘ என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாட்களிலுள்ளது)‘ என்றார்கள்.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றையான நாளிலுள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது. வானத்தில் (மழைக்கான) எந்த அறிகுறியும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் திரண்டு மழை பொழிந்தது. அப்போது எங்களுக்கு நபி(ஸல்) வர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றி மீதும் மூக்கு மீதும் களிமண், தண்ணீரின் அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை மெய்ப்பிப்பதாக இது அமைந்தது’ என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர் அபூ ஸலாமா (ரஹ்) (நூல்கள் – புகாரி 813, முஸ்லிம் 2170, அபூதாவூத், அஹ்மத்)

அல்லாஹ்வின் அருள் வளம் நிறைந்த ரமளான் மாதத்தை முதல்பத்து, இரண்டாம் பத்து அல்லது நடுப்பத்து, இறுதிப்பத்து என ரமளான் மாதத்தின் முப்பது நாட்களையும் மூன்று பகுதிகளாகப் பிரித்து அவற்றில் இறுதிப்பகுதியில் லைலத்துல் கத்ரு என்கிற கண்ணியமிக்க இரவைக் கூடுதல் வணக்க வழிபாடுகள் மூலம் நெருங்கி, அல்லாஹ்வின் அருளை இன்னும் அதிகம் பெற்றிட மேற்கண்ட ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளைப்போல் மேலும், சில நபிவழித் தொகுப்பு நூல்களில் இன்னும் பல ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இவை மட்டுமல்லாது ரமளான் மாதத்தின் மொத்தச் சிறப்புகளையும் ரமளானில் செய்ய வேண்டிய செயல்களின் சிறப்புகளையும் வலியுறுத்தி அநேக ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளும் நபிவழித் தொகுப்பு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,

ரமளான் மாதத்தைச் சிறப்பிக்கின்றோம் என்று ஒவ்வொரு ஷாஃபான் மாத இறுதியிலும், ரமளான் மாதத் துவக்கத்திலும், பல மார்க்க அறிஞர்களாலும் மற்றும் முஸ்லிம் பேச்சாளர்களாலும் மேடையில் பேசியும், இணையதளங்களில் எழுதியும் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டு வரும் ஒரு பலவீனமான நபிமொழி:

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ‘ரஹ்மத்’ எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து ‘நஜாத்’ மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதார நூல் இப்னு குஜைமா பாகம் 3 எண் 191

முதல் பத்து, நடுப்பத்து, கடைசிப்பத்து என ரமளான் மாதத்தை சிறப்பித்து ஸஹீஹான ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப்போல் காணப்படும், ”முதல் பத்து ரஹ்மத்து, நடுப்பத்து மக்ஃபிரத்து, கடைசிப் பத்து நரக மீட்சி” என்னும் கருத்தில் இப்னு குஸைமா நூலில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட செய்தியில் இடம்பெறும் இப்னு ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். எனவே, இது பலவீனமான ஹதீஸாகும்.

மேலும்,

“லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி 1901, முஸ்லிம் 1393, திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், தாரிமீ)

ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) (நூல்கள் – புகாரி 3277, முஸ்லிம் 1956-1957, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத், முவத்தா மாலிக், தாரமீ)

”ரமளான் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன” என்று முஸ்லிம் நூலின் 1957வது ஹதீஸில் காணப்படுகிறது.

நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நோன்பு நோற்பவருக்கும், ரமளானின் இறுதிப் பத்தில் ஒற்றையான இரவிலுள்ள லைலத்துல் கத்ரு என்னும் கண்ணியமிக்க இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் வணக்கத்தில் ஈடுபடுவோருக்கும் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் கூறுகின்றன. ரமளான் மாதம் முழுவதுமே அல்லாஹ்வின் அருள் வாசல் திறந்து வைக்கப்படுகின்றன.  இன்னும் இதுபோன்று ரமளான் மாதத்தைச் சிறப்பித்தும் ரமளான் மாதத்தில் செய்யவேண்டிய அமல்களைக் குறிப்பிட்டு, ஆர்வமூட்டியும் ஏராளமான ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் காணப்படுகின்றன. அவற்றை ஏற்றுச் செயல்பட்டு, பலவீனமான ஹதீஸ்களிலிருந்து விலகிக்கொள்வதே சிறந்தது.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

வல்லோன் ரப்புல் ஆலமீன் அனைவரின் பாவங்களையும் மன்னித்து அருள்புரிவானாக!