{mosimage}ஒவ்வோர் ஆண்டு ஹஜ் கிரியைகளின் போதும் மிகக் கவலையுடனும் எச்சரிக்கையுடனும் எதிர்கொள்ளும் நிகழ்வாகிய 'ஜமராத்தில் கல்லெறிதல்' நிகழ்ச்சி இவ்வாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாமல் கழிந்துள்ளது. ஜமராத்தில் கல்லெறியும் நிகழ்ச்சியில் 2006 ஆம் ஆண்டு ஜனவரியில் 365 ஹாஜிகள் நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து சவூதி அரசு ஏற்கனவே இருந்த பாலத்தை இடித்து விட்டு நான்கு அடுக்குகளில் புதிய பாலத்தைக் கட்டத் தொடங்கியது. 4.2 பில்லியன் சவூதி ரியால் செலவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது தரைத்தளம், முதல் தளம், மற்றும் இரண்டாம் தளம் நிறைவு பெற்று ஹாஜிகள் பயன்படுத்தினர்.
சென்ற ஆண்டுகளின் ஹஜ் நெரிசலுக்கு முக்கியக் காரணிகளாகக் கீழ்க்கண்ட நான்கும் கண்டறியப்பட்டன:
1. ஹாஜிகள் ஒரே திசையில் செல்லாமல் பல திசைகளிலும் எதிரெதிராகவும் நகருதல்.
2. ஒரே நேரத்தில் கல்லெறிதல் நிகழ்ச்சியைப் பலரும் முடித்துவிட முனைதல்.
3. குறுகிய இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கல்லெறிய முனைதல்.
4. தங்களோடு சுமைகளை எடுத்துச் செல்லுதல்.
இரண்டாம் மூன்றாம் குறைகளைக் களைய ஜமராத் தூண்களை பெரும் சுவர் போல 2005-ல் சவூதி அரசு மாற்றிக் கட்டியது. இதனால் ஒரே இடத்தில் ஹாஜிகள் கூட்டமாகக் குழுமாமல் கல்லெறிய முடிந்தது. ஒரே திசையில் நகருவதற்காக அகலமான பாலங்கள் கட்டப்பட்டு பல சமிக்ஞைகள் நிறுவப்பட்டன. இருப்பினும் 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற துயர சம்பவத்திற்கு ஹாஜிகளில் சிலர் தங்களோடு சுமைகளை எடுத்துச் செல்வதே காரணியாகக் கண்டறியப்பட்டது.
இந்த ஆண்டு மூன்று தளங்களிலும் ஹாஜிகள், எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட்டனர். ஹாஜிகளுக்குச் சுமையைத் தம்முடன் எடுத்துச் செல்வது கண்டிப்புடன் மறுக்கப்பட்டது. பெரும்பாலும் முறையான அனுமதி இல்லாமல் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களே தம்முடன் சுமைகளைச் சுமந்து செல்வது வழக்கம். எக்காரணம் கொண்டும் ஜமராத் கல்லெறியும் நிகழ்ச்சியின் போது சுமைகள் அனுமதிக்கப்படவே இல்லை.
இவ்வாண்டு முறையான அனுமதியுடன் 25 லட்சம் ஹாஜிகள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இவர்களில் 17 லட்சம் ஹாஜிகள் சவூதிக்கு வெளியிலிருந்தும் 8 லட்சம் ஹாஜிகள் சவூதியிலிருந்தும் ஹஜ் செய்தனர். இவர்கள் தவிர உம்ரா பயண அனுமதி மூலம் சவூதிக்குள் வந்தவர்களும், முறையான அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய வந்தவர்களுமாக 5 லட்சம் பேர் ஹஜ் செய்தனர் என சவூதி ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு மணிநேரத்தில் மூன்றரை லட்சம் ஹாஜிகள் நடமாட்டத்தைத் தாங்கவல்ல இப்புதிய பாலங்களில் அதிகபட்சமாக 2.2 லட்சம் ஹாஜிகளே கல்லெறிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் வெகுவாகத் தவிர்க்கப்பட்டது.
"மிகவும் பாராட்டத் தக்கவகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த சவூதி அரசுக்கு எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம்" என ஜெத்தா இந்தியத் துணைத்தூதரகக் கான்ஸல் ஜெனரல் டாக்டர் ஸயீத் தெரிவித்தார்.