ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்!

Share this:

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சிறப்புப் பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்!

முன்னுரை:

... இந்த மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்; பிரிந்து விடாதீர்கள் …” (அல்குர்ஆன் 42:13). அல் குர்ஆன் மார்க்கத்தை – இஸ்லாத்தை நிலைநிறுத்துமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறது. அவர்களின் அன்றாட வாழ்வில், பொருளாதாரத் தேடலில், சமூகப் பங்களிப்புகளில், ஒழுக்கவியலில் இஸ்லாமியக் கோட்பாடுகள் மிளிர வேண்டும். நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சத்திய சஹாபாக்கள் – நபித் தோழர்கள், இஸ்லாத்தை எவ்வளவு உறுதியாக நிலைநிறுத்தினார்களோ, பின்பற்றினார்களோ, தங்கள் குருதியில் இரண்டற கலந்திட்ட உயிர்ப் பொருளாகக் கருதினார்களோ அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையுடனமைந்த சிந்தனையுடைய ஒன்றுபட்ட முஸ்லிம்களாக இந்தச் சமுதாயம் வாழ வேண்டும்.

இஸ்லாமின் தேக்கம்:

ஒரு காலத்தில் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய ஓரிறைக் கொள்கை என்னும் தவ்ஹீத் சிந்தனையும், அவர்கள் செயல்படுத்திய சுன்னத்தான நடைமுறைகளும் கற்றுத் தந்த நல்லொழுக்கங்களும் தமிழக முஸ்லிம் மக்களிடையே அரிதாகி விட்டிருந்தது. பெயர் தாங்கி முஸ்லிம்களாக எந்த விதக் கொள்கை பிடிப்பும் ஈமானிய உறுதியும் இஸ்லாமியச் செயல்பாடும் அற்று தமிழக முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது.

‘குப்ர்’ :

இறை நிராகரிப்பின் பிடியில் வாழ்வதை உணராமலே முஸ்லிம்கள் தர்காக்களை வலம் வந்தனர். நேர்ச்சை என்ற பெயரில் அல்லாஹ் தஆலாவிற்குச் செலுத்த வேண்டிய வணக்கத்தை, இறைநேசர்கள் என்று தாம் நம்பிய மனிதர்களுக்கெல்லாம் செய்தனர்.

“அல்லாஹ்வையன்றி எந்தத் தீமையையோ, நன்மையையோ செய்ய அதிகாரம் இல்லாதவற்றையும் நீங்கள் வணங்குகிறீர்களா?” (5:76) என்று திருக்குர்ஆன் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. முஹம்மது(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டிய முஸ்லிம்கள், தமது மூதாதையர்கள் கொண்டு வந்த பிற மதச் சடங்கு, சம்பிரதாயங்களை ஏற்று அவர்களைப் பின்பற்றி நடந்தனர். அவர்களிடையே ஒற்றுமையின்மையும் காணப்பட்டது. கல்வியிலும் சமுதாயத்திலும் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருந்தார்கள்.

மன இச்சை:

அக்காலங்களில் சில இயக்கங்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் பெயரளவில் மட்டுமே அவை இஸ்லாமைத் தாங்கி நின்றன. செயல்பாடுகளில் தலைவர்களின் மன இச்சையை அவ்வியக்கங்கள் பின்பற்றின. முஸ்லிம்களின் வாழ்வைப் பற்றிய அக்கரையோ, அவர்தம் மார்க்கம் நெறிபட வேண்டும் என்ற எண்ணமோ கிஞ்சிற்றும் இல்லாமல் சுயநலப் போக்கை அவை கையாண்டன. மார்க்கத்தைப் பரப்ப வேண்டிய மார்க்க அறிஞர்கள் ஃபாத்திஹா, மௌலிது, கந்தூரிகளில் மூழ்கிக் கிடந்தனர். தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தை வியாபாரம் ஆக்கினர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மனிதர்களின் கோபத்திலும் அல்லாஹ்வின் திருப்தியைத் தேர்ந்தெடுப்பவருக்கு மனிதர்களால் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்க அல்லாஹ் போதுமானவன். அல்லாஹ்வின் கோபத்திலும் மனிதர்களின் திருப்தியைத் தேர்ந்தெடுப்பவரை அல்லாஹ் மனிதர்களின்பால் சாட்டி விடுகிறான்.” (திர்மிதி).

அத்தகையவர்கள், தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு, “அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களிடம் கையேந்துவது இணை வைப்பு” என்ற உண்மையை மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சமாக்க, அதை விட்டு அறவே நீங்கி, ஓரிறைக் கொள்கையைப் பின்பற்றி ஒற்றுமை பாராட்டி வாழ அல்லாஹ் வழி செய்வானாக !

பொறுப்பு:

முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் இஸ்லாம் விதிக்கும் சில அடிப்படைப் பொறுப்புகள் உள்ளன. அவற்றில் தலையாயது, மனிதர்களைத் தொழுகையின் பக்கம் அழைப்பதோடு, நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதாகும்.

“உங்களில் ஒருவர் வெறுக்கத் தக்கதைக் கண்டால் அதைத் தனது கரத்தால் மாற்றட்டும்; அதற்குச் சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும்; அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து ஒதுக்கட்டும். இதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும்” என நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (அபூஸயீத் அல் குத்ரி (ரலி), முஸ்லிம்).

ஒவ்வொரு முஸ்லிமும் தன் குடும்பத்தைப் பராமரிக்க வேண்டியவனாவான். குடும்பத்தைப் பிரிந்து விட்டு மார்க்கத்திற்காக மாதங்கள் பல, ஊர் ஊராகச் செல்பவர்களும் தவறு சுட்டிக்காட்டப்படும் போது, அதைத் திருத்திக் கொண்டு, நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி வாழவேண்டும். மார்க்கத்தின் பெயரைச் சொல்லி, குடும்பப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது.

“ஒவ்வொருவரும் தனது பொறுப்பைக் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவர்…” (அனஸ்(ரலி), இப்னு ஹிப்பான்).

முஸ்லிம்கள் அனைவரும் நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் மக்களாக ஒன்றுபட வேண்டும். முஸ்லிம்களின் நலனை அல்லாஹ் தஆலா விதித்தச் சட்டங்களின்படி பேணி, தூய இஸ்லாத்தைக் கடைப் பிடிக்க முயல வேண்டும்.

சகோதரத்துவம் மலர்ந்தது:

பல்வேறு ஆரம்பகாலச் சோதனைகளுக்குப் பின் முதல் இஸ்லாமிய அரசு மதீனாவில் அமைந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர்களை இரண்டிரண்டாக இணைத்து சகோதரச் சிந்தனையை விதைத்தார்கள். மதீனத்து அன்சாரிகளுடன் மக்கத்து முஹாஜிர்கள் இவ்வாறு இணைக்கப்பட்ட உடனேயே, அன்சாரிகளின் சொத்தில், குடும்பத்தில் உடன் பிறந்த சொந்தச் சகோதரர்போல் முஹாஜிர்கள் நேசிக்கப் பட்டனர். வெவ்வேறு ஊரைச் சேர்ந்த, வெவ்வேறு பழக்க வழக்கங்களை உடைய மனிதர்களை இஸ்லாம் உடன்பிறவாச் சகோதர்களாக நேசிக்க வைத்தது. ஒற்றுமையை விதைத்தது. “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற கலிமா முஸ்லிம்களைச் சகோதரத்துவத்தால் பிணைத்தது.

நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய ஆரம்பகால இஸ்லாமியச் செயல்வீரர்களைப் போன்ற மக்களைக் கொண்டச் சமுதாயத்தைத் தமிழகத்தில் மலர வைத்திடச் சில நல்லவர்கள் முயற்சி மேற்கொண்டனர். முஸ்லிம்களைக் குப்ரிலிருந்து மீட்டெடுக்க, ஒற்றுமையாக, உறுதியாக உழைக்க வைக்க ஓரிறைச் சிந்தனையாளர்கள் சிலர் தலைப்பட்டனர்.

கூட்டு முயற்சி:

“ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்குக் கட்டிடத்தைப் போன்றவர் ஆவார். அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது.” (அபூமூஸா(ரலி), ஸஹீஹ் புகாரி)

என்ற நபியவர்களின் பொன்மொழிக்கிணங்க கூட்டாகச் சேர்ந்து சமூக உயர்வுக்கு, முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்குப் பாடுபடும்போது, அதில் உள்ள பலம் பெரியது. சமூகத்தைப் பலனடையச் செய்ய ஒற்றுமையாய் செயல்பட வேண்டியது மிக முக்கியம். எப்படி, நபி(ஸல்) அவர்கள் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் இணைத்து, சகோதரத்துவம் என்ற சிமெண்டால் உறுதியான கட்டடத்தை எழுப்பினார்களோ, அப்படிபட்ட ஒன்றுபட்ட சமூகம் அதற்கு மிக அவசியமானது.

போராட்டக் காலம்:

ஓரிறைக் கொள்கை என்ற தவ்ஹீதுச் சிந்தனைத்துளி தமிழகத்தில் விதைக்கப் பட்டபோது, கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. கொஞ்ச நஞ்சமல்ல; அடிபட்டு, மிதிபட்டு, வெட்டுப்பட்டு, குத்துப்பட்டு, சிலராயிருந்த சகோதரர்கள் தம் சகோதர முஸ்லிம்களுக்காகப் போராடினார்கள். அன்றைக்கு இருந்தது அழகியதோர் ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துணர்வும். என்றைக்குச் சிறுசெடிகள், வேர் ஊன்றி மரமானதோ, அத்தோடு அது தோப்பாகாமல் தனி மரமானது.

குஃப்ரை வளர்த்த எதிரணியினர் பெருங்கூட்டத்தினராக இருந்தவரை, சத்தியப்பாதைக்கு அழைப்பு விடுத்த இவர்களின் உறுதியான ஒற்றுமை குலையாமல் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து ஓரிறைச் சிந்தனை தமிழகத்தில் வளர்ந்தவுடன், முஸ்லிம் சமூகத்திடம் நம்பிக்கை வேர் விட்டது. சமுதாயம் எழுச்சியுடன் முன்னேறுவதற்கானத் தருணம் வந்ததாகப் பூரித்தார்கள். ஆனால் களையத் தக்க அற்பக் கருத்து வேறுபாடுகள், முஸ்லிம்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை விடுத்து, வலிய ஓர் ஆயுதமாக மாறி, ஒற்றுமையின் ஆணிவேரை அறுத்தது.

“இதில் பிரிந்து விடாதீர்கள்”:

ஈமானியச் சிந்தனையுடைய ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகத்தை வளர்த்தெடுக்கத் தலைப்பட்டவர்கள், திருமறை குர்ஆனின் கட்டளையைச் செயல்படுத்திட முனைந்தச் சகோதரர்கள்,

“(நபியே!) நிச்சயமாக, தங்கள் மார்க்கத்தை(ப் பலவாறாக)ப் பிரித்து, பல பிரிவினர்களாகி விட்டவர்களின் எந்த ஒரு செயலிலும் உமக்குத் தொடர்பில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றது…” (அல்குர்ஆன் 6:159)

என்ற சத்திய வேதத்தின் எச்சரிக்கையைச் சடுதியில் மறந்தனரோ?

வேற்றுமைக்குள் ஒற்றுமை:

இஸ்லாத்தினுடைய விஷயத்தில் ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கும்போது கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். இத்தகைய கருத்து வேறுபாடுகள் அல்குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் விளங்கி ஆய்வு செய்து மார்க்க விஷயங்களில் தீர்ப்புகள் சொல்ல விழையும்போது ஏற்படலாம். இது இயற்கையானது. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகள் பிளவுகளை ஏற்படுத்தாது. சகோதரத்துவச் சிந்தனையைக் குலைக்காது.

பிரிவினைகளுக்கு இத்தகையக் கருத்து வேறுபாடுகள் காரணிகளாக அமைந்திடக் கூடாது. உதாரணத்திற்கு தமத்துஉ, கிரான் ஆகிய இரண்டு விதமான ஹஜ் வழிமுறைகளையும் உஸ்மான்(ரலி) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் அலி(ரலி) அவர்கள் “யாருடைய சொல்லிற்காகவும் நபியுடைய வழிமுறையை விட்டு விட மாட்டேன்” என்றுக் கூறி தமத்து முறையில் ஹஜ் செய்தார்கள். கருத்தில் அவர்கள் வேறுபட்டாலும், தங்களிடையே ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பேணினார்கள். அவர்கள் தங்களுக்குள் விவாதப்போர் நடத்திக் கொண்டிருக்கவில்லை; ஒருவருக்கொருவர் பேசாமல், பார்க்காமல், ஸலாம் கூறாமல் இருக்கவில்லை. பரஸ்பரம் தூற்றிப்பேசித் தங்கள் ஈமானைக் குறைத்துக் கொள்ளவில்லை; ஒருவர் மற்றவரை “வழிகேடர்”, “யூதக் கூட்டத்தினர்” என்று பழித்துரைக்கவில்லை; தனிப் பள்ளிவாயில்களை அமைத்துக் கொள்ளவில்லை; பள்ளிவாயிலில் தொழுகையின் போது இடையூறு செய்யவில்லை; முகம் திருப்பிக் கொண்டு போகவில்லை.

நபி(ஸல்) அவர்களால் பண்படுத்தப்பட்ட, சீர்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட உத்தம சஹாபாக்கள் அவ்வாறெல்லாம் செய்யவில்லையே! இவ்வுண்மைகளை ஊன்றி உணர விடாமல் சமுதாய மேம்பாட்டுக்காக இயங்க வேண்டியவர்களை இயக்க வெறி தடை செய்கிறதே.

“நிச்சயமாக, விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே!…” ( அல்குர்ஆன் 49:10). என்ற சத்திய வேதத்தின் வாக்குகளை உண்மைப் படுத்தி வாழ்ந்தச் சத்திய சஹாபாக்களைப் போல் வேற்றுமைக்குள் ஒற்றுமை காண வேண்டும். குர்ஆனின் கட்டளைகளை சிரமேற் கொண்டு செயலாற்ற வேண்டும்.

இஸ்லாம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது. “லாஇலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று கூறிய மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பிளவு, இஸ்லாம் கற்றுத் தராததாகும். பிளவை எப்படி சரிப்படுத்தி நேர் காண்பது என்பதே இன்றைய தலையாயப் பிரச்சனை. சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவே ஓரிறைக் கொள்கையை ஊன்றிப் பிடித்தத் தவ்ஹீத்வாதிகள் ஒன்றுகூடி இயக்கங்களாக உருவெடுத்தனர். இப்போது இயக்கங்களின் ஒற்றுமையே தலையாயப் பிரச்சனையாகி விட்டிருக்கிறது. மார்க்கம் அல்லாஹ்வின் அருள்! அதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இயக்கங்களிலிருந்து சமுதாயத்திற்கு நன்மைகள்தாம் விளைய வேண்டும்.

குறைகளும் நிறைகளும்:

சமூகத்தில் இஸ்லாம் ஓங்கப் பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை நிலை நிறுத்தியவர்கள், இஸ்லாமிய அகீதாவைப் சரிவரப் பின்பற்ற முஸ்லிம்களை வற்புறுத்தியவர்கள்,

“…நீங்கள் ஒருவரை ஒருவர் துருவி ஆராயாதீர்கள்…” (அல்குர்ஆன் 49:12) என்று குர்ஆன் கட்டளையிடுவதை மறந்து, “பிற இயக்கங்களின் குறைகளை அம்பலப்படுத்துவதும் அறிக்கைகள் விடுவதும் தரக் குறைவாக விமர்சிப்பதும் அடுத்த இயக்கங்களின் எண்ண ஓட்டத்தைக் கண்டறியத் துப்பு துலக்குவதும்” என்று தங்களின் நேரத்தை – தஃவாவிலும் சமுதாயப் பணிகளிலும் கழிக்க வேண்டியப் பொன்னான நேரத்தை – வீண் ஆராய்ச்சிகளில் கழிக்கின்ற நிலைக்கு இன்று கீழிறங்கி விட்டனர். அல்லாஹ் தஆலா கொடுத்திருக்கும் நிஃமத்-பேரருள், ஓரிறைக் கொள்கையை எத்தி வைக்கப்பயன்பட வேண்டியப் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அறிவாற்றலும் வீணாகச் செலவழிக்கப்படுவது மனதிற்கு வேதனை அளிக்கிறது!

சுவனத்தில் இடம் பிடிக்க, சுவனத்தில் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆசை காட்ட வேண்டிய அழைப்பாளர்கள், உலகத்தில் மார்க்கத்தைப் பரப்பும் சகோதரர்கள், ஒருவர் மற்றவர் மேல் பழி சுமத்தி, சவால் விட்டு, கண்ணியமில்லாத முறையில் கீழ்த்தரமாக ஒருவர் மீது ஒருவர் கோபம் காட்டுவது வருத்தப்பட வைக்கிறது!

உழைத்துச் சம்பாதிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், இஸ்லாமியச் சமூகம் ஆன்மீகத்திலும் வாழ்வியலிலும் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தங்கள் வியர்வைகளால் சமுதாய இயக்கங்களின் கஜானாக்களை நிரப்புகிறார்கள். அறிக்கையாகவும், பிறர் குறைகளை வெளிப்படுத்தத் தயாரிக்கப்படும் குறுந்தகடாகவும் உருமாறும் இந்த வியர்வைத் துளிகள் கணக்குக் காட்ட வேண்டிய இடத்திற்கு வந்து சந்தி சிரிக்கிறது. அல்லாஹ்விடத்தில் கணக்குக் காட்ட வேண்டிய அமானிதமாக மாறி விடுகிறது. இதைப் பற்றி யாராவது கேட்டால், “நாங்கள் சமூகத்தின் சீரழிவுக்குக் காரணமானவர்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறோம்” என்று பதிலளிக்கின்றனர்.

சீரழிவிலிருந்து இஸ்லாமியச் சமூகத்தைக் காப்பாற்றத்தானே “லா இலாஹா இல்லல்லாஹ்” -வை அடித்தளமாகக் கொண்டு மேம்பட்ட இஸ்லாமியக் கட்டடத்தை எழுப்பிட முயன்றார்கள்?. இன்றையச் சமூகத்தின் ஒற்றுமையில்லாதச் சீரழிந்தப் போக்கை மாற்றுவது யார்?. அதற்காக உழைக்க முன்வருவது யார்?. “இவர்கள் செய்யத் தவறும் பொழுது இவர்களை அழித்து விட்டு வேறோர் உன்னத, நடுநிலையான சமூகத்தைக் கொண்டுவருவதாகக்” கூறும் இறை வசனம் உண்மையாகக் காத்திருக்கிறார்களா?. இயக்கவெறி இஸ்லாத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

அழகிய பண்புகள்:

எந்தச் சகோதரர்கள் மூலம் வல்ல நாயன் இஸ்லாத்தின் உயிர் மூச்சான ஓரிறைக் கொள்கையைத் தமிழக முஸ்லிம்களில் பலருக்கும் உறுதிபடப் பின்பற்ற வழி வகுத்தானோ,

எந்தச் சகோதரர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் மூலம் பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, மன்னித்தல், கோபம் தவிர்த்தல் ஆகிய இஸ்லாத்தின் அறிவுரையை ஆழப்பதித்தானோ,

திருமறைக் குர்ஆனின் உன்னதத்தையும் அதை ஊன்றிப் படிக்க வேண்டிய அவசியத்தையும் ஆசையையும் மனதில் விதைத்தானோ,

அந்தச் சகோதரர்களிடம் இந்தச் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் மனப்பாங்கும் ஒற்றுமையும் ஏற்படாதது ஏன்?. சகோதர முஸ்லிமுடன் உறவாடாமல், பகைமை மனப்பான்மையினால் – இயக்க வெறியினால், ஒன்றுபட்டுச் செயாலாற்றாமல், முகம் பார்த்துப் பேசாமல், ஏன் – ஸலாமுக்குக் கூட மறுமொழி கூறாமல் வெறுப்பு காட்டுவது இஸ்லாம் கற்றுத் தந்ததா?

“முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க இன்னொரு முஃமினுக்கு அனுமதி இல்லை”(அபூஹுரைரா(ரலி), அல் அதபுல் முஃப்ரத்) என்ற நபிமொழிகள் காற்றோடு போனதோ?. அல்லது அவை மற்றவர்களுக்கு மட்டும் தானோ?.

“அவர்களுக்கிடையே வெறுப்பும் முரண்பாடும் தொடர்கதையானால், பாவமும் குற்றமும் அதிகரித்துக் கொண்டே செல்லும்” என்பது அறியாத விஷயமா?.

நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை:

“ஒருவர் தனது சகோதரனை ஒரு வருடம் வெறுத்திருந்தால், அவர் அந்தச் சகோதரனின் இரத்தத்தை சிந்தியவர் போலாவார்”. (அல் அதபுல் முஃப்ரத்; அபூ ஹிராஷ் ஹத்ர் பின் அபீ ஹத்ரத் அல் அஸ்லமீ (ரலி), அபூதாவூத்). இந்தத் துவேஷம் மாபெரும் பாவமான கொலைக்கு ஈடாகக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பதைச் சகோதரர்களிடையே துவேஷம் பாராட்டுபவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

“தனது சகோதர முஸ்லிமை இழிவுபடுத்துவதே ஒருவர் மோசமானவர் என்பதற்குப் போதிய சான்றாகும்” (அபூஹுரைரா( ரலி), புகாரி). ஆக, எந்த முஸ்லிமையும் இன்னொரு முஸ்லிம் இழிவாகக் கருதக்கூடாது; கருதக் கூடாது என்பது மட்டுமல்ல மற்றவர்கள் முன் அவ்வாறு இழிவுபடுத்தும் வகையில் எவ்வித நடவடிக்கையும் கூட மேற்கொண்டு விடக்கூடாது. எத்தனையோ ஹதீஸுகளை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்களுக்கு இந்த ஹதீஸும் தெரியும். பயான்கள் பேசப்படுவதற்கு அல்ல; பின்பற்றபடுவதற்காகதானே?. கற்றதையும் மற்றவர்களுக்குப் போதிப்பதையும் செயல்பாட்டில் கொண்டு வந்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும்! மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றவும் தூண்டுகோலாக அமையும்! தீய குணங்கள் நற்குணங்களை அழிக்க வல்லவை. நற்குணங்கள் மறுமையில் நபி(ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களாக ஆகும் பெரும் பேறைத் தர வல்லவை.

நேசம் கொள்ளுதல்:

உமர்(ரலி) அவர்கள், அபு லுஃலூ ஃபரோஸ் என்ற நெருப்பு வணங்கியால், பஜ்ர் தொழுகையில் முதுகில் குத்துப்பட்டு சுருண்டார்கள். தன்னைக் குத்தியது யார் என்றறிந்தவுடன், உமர்(ரலி) அவர்கள் மகிழ்ச்சியுடன், “அல்ஹம்துலில்லாஹ், அவன் ஒரு முஸ்லிம் அல்லன்” என்றார்கள். (அம்ர் பின் மைமூன் (ரஹ்), புகாரீ 3700).

சுபஹானல்லாஹ்!!!

எந்த அளவிற்கு ஒவ்வொரு நபித்தோழரும் முஸ்லிம்களை நேசித்திருக்கிறார்கள்! எந்த ஒரு முஸ்லிமும், அத்தகைய பெரும்பாவமான செயலைச் செய்து நரகில் விழுந்து விடக் கூடாது என்றுதான் ஒரு மனிதனால் தான் தாக்கப்பட்ட போது கூட உமர்(ரலி) விரும்பினார்கள். நம்மை ஒருவர் குறை சொல்லிவிட்டால் எப்படி எல்லாம் கொதித்துப் போகிறோம். ஒருவர் மற்றவர் மீது பழி சுமத்தும் போது, மறுமையில் அல்லாஹ்விடத்தில் நீதி கேட்க சந்தர்ப்பம் இருந்தும், “உங்களை மன்னித்து விடுகிறேன்” என்று ஈமான் உறுதியோடு, முஸ்லிம்களின் மீதுள்ள பற்றால் மன்னிப்பை வழங்கி, அவர்களுக்காகவும் மன்னிப்பைத் தேடுகிறோமா சகோதரர்களே?. அழைப்பாளர்களின் பண்பு இதுவல்லவா?.

“…அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றத்தை மன்னித்தும் விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்.” (அல்குர்ஆன் 3:134).

மறப்போம் மன்னிபோம்:

பிரிந்து நிற்கும் சகோதரர்கள் தங்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை மறந்து விட்டு, சமுதாயப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சீரமைக்கப்பட வேண்டிய முஸ்லிம் மக்களின் வாழ்க்கைக்காக ஒருங்கிணைந்து பாடுபட முன்வர வேண்டும். மன்னிப்பதும், மறப்பதும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருக்க வேண்டிய பண்பாகும்.

அபூபக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் ஒருமுறை ஏதோ பிணக்கு ஏற்பட்டுப் பிரிந்து சென்றார்கள். வீட்டுக்குக் கூடப் போய் சேரவில்லை, இருவரும் ஒருவரை ஒருவர் தேடிச் சென்று, உடனே ஸலாம் சொல்லி முந்திக் கொண்டார்கள். (அபுத்தர்தா (ரலி), புகாரீ 3661).

அல்ஹம்துலில்லாஹ்!

என்னே ஒரு சகோதரத்துவ வாஞ்சை!!. தமிழக ஓரிறைக் கொள்கைச் சகோதரர்கள் எந்தச் சகோதரத்துவத்தை ஏற்படுத்த பாடுபட்டார்களோ, அதை அவர்களே தொலைத்து விட்டார்களே!. யா அல்லாஹ், இந்தச் சகோதரர்களுக்கு அருள்புரிவாயாக!

பிரச்சனை வளராமல் தடுக்க வேண்டிய கடமை இவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவரவர் ஆய்வுகளினால் எடுக்கும் முடிவுகளுக்கு அல்லாஹ்விடம் ஒன்று அல்லது இரண்டு மடங்கு நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள். சாதாரண முஸ்லிம் மாறுபட்டக் கருத்துக்களை உடைய விஷயங்களில் ஆலிம்களின் ஆய்வினால் பெறப்பட்டதில், தன்னுடைய அறிவைக் கொண்டு முடிவு செய்து தனக்கு சரி என்றுபடும் ஆய்வின் முடிவை செயல்படுத்தட்டுமே!

மனிதன் தவறு செய்யக் கூடியவன். மனிதனுக்கு மிக சொற்ப அறிவே கொடுக்கப் பட்டுள்ளது . கருத்து வேறுபாடுடைய விஷயங்களில் “என்னுடைய ஆய்வின் முடிவே சரி; மற்றவர்களின் ஆய்வு தவறு” என்று மற்றவர்களை ஒதுக்கி, தூற்றி வசைபாடக் கூடாது. எல்லாருடைய தவறுகளையும் வல்ல ரஹ்மான் மன்னிக்க பிராத்தனை புரிதல், இதயத்தின் சாந்திக்கும், ஈமானின் மேன்மைக்கும் நல்லது.

முஸ்லிம்:

“அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, நற்செயல்களைச் செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களைச் சேர்ந்தவன் என்று கூறுகின்றவரை விட சொல்லால் அழகியவர் யார்?” (குர்ஆன் 41:33) என்று ரப்புல் ஆலமீன் கேட்கிறான். ஆக ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவனுக்கு அல்லாஹ் தஆலா சூட்டியிருக்கும் “முஸ்லிம்” என்ற பெயர் கொண்டு மட்டும்தான் ஒவ்வொருவரும் அறியப்பட வேண்டும்.

யார்? என்ற கேள்விக்கு “நான் தவ்ஹீத்வாதி”, “நான் ஷாஃபி”, “நான் ஹனஃபி” என அறிமுகப் படுத்தப்படுவதைவிட “நான் முஸ்லிம்” என்றே தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும். மரியாதைக்குரிய இமாம்கள் வெளியிட்டக் கருத்துகள் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமில்லாத பட்சத்தில் அவற்றை எடுத்துச் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் அதற்காக ஹனபி, ஷாஃபி எனத் தன்னை அடையாளப்படுத்துவது கூடாது. அல்லாஹ் பெயர் சூட்டிய பிறகு அதனை அமல்படுத்துவதில் முதலிடம் தந்து அவ்வாறு அழைப்பதில் விருப்பம் காட்ட வேண்டும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ஏனைய ஆட்சியாளர்களுக்குத் தபால் மூலம் அழைப்பு விடுக்கும் போதெல்லாம் “…நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சியாளர்களாக இருங்கள்”(குர்ஆன் 3:64) என்ற வசனத்தைக் குறிப்பிட்டு தபால் அனுப்பி வைப்பார்கள். மாநபி(ஸல்) அவர்கள் தன்னை அறிமுகப்படுத்திய விதத்தையே ஓரிறைக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.

முதுகில் சுமை:

ஒரு முஸ்லிம் தன்னை சமூகத்துடன் ஒப்பீடு செய்து, தான் சிறந்து விளங்குகிறோம் என்று குதூகலிப்பதை விட, தன் சகோதர முஸ்லிம்களுக்குத் தான் செய்ய வேண்டியிருக்கும் – தன் மீது சுமத்தபட்டு இருக்கும் பொறுப்பினை எண்ணிப் பார்க்க வேண்டும்.

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள் …” (3:110). நன்மையைக் கொண்டு தீமையைத் தடுக்கிறீர்கள்; அதானாலே சிறந்த சமுதாயம் என்று குர்ஆன் கூறுகிறது. நபி( ஸல்) அவர்கள் தங்கள் உம்மத்தைப் பற்றிக் கவலை அடைந்ததைப்போல், அறியாமையில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றிய கவலை, ஒவ்வொரு முஸ்லிம்களுக்குள்ளும் இருக்கவேண்டும். “ஆகா! நான் நேர்வழி பெற்று விட்டேன்” என்று பெருமை பாராட்டி மற்றவரை இகழ்வாகக் கருதுதல் கூடாது. இறுதி மூச்சின் நிலையை எவரும் அறியார்.

இணைவோம் இதயத்தால்:

“தவறான கருத்துக்களால் இஸ்லாத்தைச் சரிவரப் புரியாத முஸ்லிம்களிடம் ஏற்பட்ட தீமைகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும் முன், அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, மக்கள் மன்றத்தில் மார்க்கத்தில் தவறாகச் சொல்லிய விஷயங்களை ஒவ்வொரு இயக்கத்தாரும் சுய பரிசோதனை செய்து தெளிவு படுத்திட வேண்டும். தங்கள் தவறான சிலக் கருத்துக்களும் சகோதரர்களுக்கு, சகோதர இயக்கங்களுக்கு எதிராகச் செய்த சிலச் செயல்களும் குர்ஆன், சுன்னாவிற்கு மாற்றமானது எனப் புரிந்து அவற்றை விட்டு விலகி அல்லாஹ்வின் அதிருப்தியை பெறுவதை விட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

“…ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்; (இதில்) அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். (இதன் காரணமாக ) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள்.” (அல்குர்ஆன் 49:10). நண்பர்கள் பிரிந்தாலோ, கணவன் மனைவி பிரிந்தாலோ, சொந்தங்கள் வேறுபட்டு பிளவுபட்டாலோ, அதில் சமாதானமும், இணைப்பும் ஏற்படுத்த முனைப்பு காட்டும் பலர் சமுதாயப் பிளவு விஷயத்தில் மட்டும் ஏனோ தானோ என்று இருக்கின்றனர். பிளவைக் கண்டு மனம் வெறுத்து இயக்கம் வேண்டாம் என்று ஒதுங்கிப் போவோர் அதனை விடுத்து, ஆக்கபூர்வமாக ஏதாவது செய்து ஒற்றுமைக்குப் படி அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு இயக்கமும் மற்ற இயக்கங்களுடனான நல்லுறவை வளர்க்கவும் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் செயல்படத் தங்களுக்குள் மாதாந்திரக் கூட்டங்கள் நடத்திக் கொள்ளலாம்; கலந்தாலோசனைகள் மூலம் சமூகத்தின் பொதுப் பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்துப் பாடுபடலாம்; இணைந்து போராடலாம்; ஒருவர் மற்றவர்கள் பணிகளைப் பாராட்டி, ஊக்குவிக்கலாம்; தவறுகள் இருந்தால் கண்ணியமான முறையில், மனதை நோகடிக்காமல் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டலாம்.

இஸ்லாத்திற்காகப் பாடுபடுவது சுவனத்திற்குக் கொண்டு சேர்க்கும் உயரிய பாதை அல்லவா? அதில் ஏன் சகோதரர்களிடையே கடினத்தன்மை?. “எவர் மென்மையை இழந்தாரோ, அவர் நன்மையை இழந்தார்.” (ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி), முஸ்லிம்). இஸ்லாமியப் பாலர் பாடங்களை ஆசிரியர்களுக்கு நினைவு படுத்த வேண்டியுள்ளதே என்று மனம் சங்கடப்படுகிறது! தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது யாரையும் ஏளனமாகக் கிண்டல், கேலி செய்யாமல், குத்திக் காட்டாமல் மென்மையான முறையில் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் எத்தனை அழகாக இருக்கும்!.

மாநபி(ஸல்) அவர்களது பள்ளியில் ஓர் அரபி சிறுநீர் கழித்தபோது எப்படி நடத்தினார்கள்?. மூக்குச்சளியைக் கிப்லா திசையில் சுவரில் கண்டபோது, எப்படித் திருத்தினார்கள்?. தவறுகளைத் திருத்த முயலும் பொழுது அதனை வெளிச்சமிட்டுக் காட்டி தங்களின் மேலாண்மையை நிரூபிக்க முயல்வதை விடுத்துத் தவறு செய்தவர் அதனை விட்டு விலக வேண்டும் என்ற உண்மையான கவலையுடன் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

“… நன்மைக்கும், பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திலும் வரம்பு மீறுதலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்.” (அல்குர்ஆன் 5:2).

பிரிந்து நிற்கும் சகோதரர்கள் பெருநாட்களில் வாழ்த்து பரிமாறிக் கொள்ளலாம்; நலம் விசாரிக்கலாம்; சகோதரத்துவத்தை நிலைநிறுத்தலாம்; ஒரே மாதிரியான சமுதாயக் களப்பணிகளில் ஒன்றுபடலாம். உலகில் மனிதர்களது பாராட்டை விட, மறுமையில் கிடைக்கப் போகும் அல்லாஹ் தஆலாவின் உவப்பை ஆசை வைக்க வேண்டும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற எண்ணத்துடன் கூட்டுச் சேராமல், சமுதாயப் பணிகளுக்காக ஒருவருக்கொருவர் கைகோர்க்க வேண்டும். “அல்லாஹ் தஆலா உங்கள் உடலையோ, தோற்றத்தையோ பார்ப்பதில்லை. மாறாக உங்களது உள்ளங்களையும் செயற்பாடுகளையும் பார்க்கிறான்” (அபூஹுரைரா (ரலி), புகாரி).

“மேலும் நீங்கள் யாவரும் ( ஒன்று சேர்ந்து,)அல்லாஹ்வுடைய ( வேதமாகிய) கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; (உங்களுக்குள் கருத்து வேறுபட்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம்…” (3:103) அல்லாஹ் தஆலாவின் பொருத்தத்தைப் பெற்ற முஸ்லிம்களாக அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக. திருமறைக் குர்ஆனின் கட்டளையை எடுத்து நடப்பவர்களாக, ஒற்றுமை எனும் கயிற்றால் பிணைக்கப்பட்டவர்களாக, நமது நபி முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றியவர்களாக, ஈமானால் பூரணமானவர்களாக வல்ல ரஹ்மான் ஆக்கி அருள் புரிவானாக!.

முடிவுரை:

யாரையும் காயப்படுத்த எழுதப்பட்டதல்ல இக்கட்டுரை. ஒன்றுபடாமல் இஸ்லாமியச் சமூகம் சிதறுண்டுப் போவதைத் தாங்க முடியாத அல்லாஹ்வின் ஓர் அடியாளின் மன வேதனை மட்டுமே இது! பிற சமூகங்களுக்கு எப்போதும் இஸ்லாம் முன்மாதிரிதான். அது பண்புகளால் மட்டுமல்ல, ஒன்றுபடலிலும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் அல்லவா?. எனவே, நன்மையில் முந்துவதற்கு ஓடி வந்து முந்திக் கொள்ளுங்கள்!.

“தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுகளில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்” (திருக்குர்ஆன் 4:114).

ஆக்கம்: சகோதரி. ஜியா ஸித்தாரா (உம்மு ஹிபா)

2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.