IIT நுழைவுத் தேர்வு குறித்த விபரம்!

Share this:

IIT நுட்பக்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கு ஜனவரி 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 
இந்தியாவில் சென்னை, மும்பை, தில்லி, கவுஹாத்தி, கான்பூர், கரக்பூர், ரூர்கீ ஆகிய 7 இடங்களில் IIT நுட்பக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. Indian Institute of Technology என்று அழைக்கப்படும் இந்த கல்வி நிலையங்களில் கல்விபயில மாணவரிடையே கடும் போட்டி இருக்கும்.

இதற்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு(Joint Entrance Exam-JEE) இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மாணவ- மாணவியர் எழுதுவர். IIT கல்வி நிறுவனங்களில் B.Tech, B.Arch படிப்புகளில் சேருவதற்கும், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் IT படிப்பு படிப்பதற்கும், தன்பாத்தில் அமைந்துள்ள இந்திய சுரங்கவியல் கல்லூரி(Indian School of Mines)யில் சுரங்கத் தொழில்நுட்பம் படிக்கவும் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

 

IITக்களில் 2008-2009-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கு வருகிற ஏப்ரல் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) JEE நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த மாணவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக்கொண்டிருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சத் தகுதியாக 60 விழுக்காடு மதிப்பெண் தேவை.
 

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கு 55 சதவீத மதிப்பெண் போதுமானது. 2 தாள்களை கொண்ட இந்த நுழைவுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் இருந்து கொள்குறி வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் 3 மணிநேரம் வீதம் தேர்வு நடைபெறும்.
 
நுழைவுத்தேர்வில் மாணவர்களின் ஆராயும் திறன், சிந்தனை ஆற்றல், புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் கேள்விகள் இடம்பெற்றிருக்கும். நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை உள்பட அனைத்து IIT கல்வி நிறுவனங்களில் கிடைக்கும். குறிப்பிட்ட அரசு வங்கிகளின் கிளைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.1000 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 மட்டுமே. கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
 
தமிழ்நாட்டில் கனரா வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் அண்ணா நகர் கிழக்கு, அபிபுல்லா ரோடு மற்றும் பாரிமுனை தம்புசெட்டி தெரு, கோவையில் ஒப்பனைக்காரர் தெரு, மதுரையில் மேலப்பெருமாள் மேஸ்திரி தெரு, (ரயில் நிலையம் எதிரில்), சேலத்தில் அழகாபுரம், திருநெல்வேலியில் புறநகர்ச்சாலை, திருச்சியில் நந்தி கோயில் தெரு, வேலூரில் நகர மண்டபச் சாலை ஆகிய இடங்களில் இருக்கும் கனரா வங்கியின் கிளைகளில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப படிவங்களைத் தபால் மூலம் பெற விரும்புவோர் உரிய கட்டணத்தை "Chairman, JEE'' என்ற பெயரில் ஏதேனும் அரசு வங்கியில் பெறப்பட்ட கேட்புக் காசோலையுடன் சுயமுகவரி எழுதிய பெரிய அஞ்சல் உறைகளை, "Chairman, JEE, IIT, Chennai 600 036'' என்ற முகவரிக்கு அனுப்பியும் பெற்றுக்கொள்ளலாம்.
 
அஞ்சல் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளக் கடைசி நாள் டிசம்பர் 21-ந் தேதி ஆகும். விண்ணப்பங்களை வங்கிக்கிளைகளில் ஜனவரி மாதம் 4-ந் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஜனவரி 4-ந் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று JEE நுழைவுத்தேர்வுக் குழு அறிவித்து உள்ளது.

 

கல்வி வேலைவாய்ப்புகளில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் சமுதாயம் இது போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று சமுதாயத்தில் முன்னிலை அடைந்தாலே தான் சமுதாயத்தில் பிறருக்குப் பயன் விளைவிக்க இயலும் என்பதால் சமுதாய மாணவர்கள் இதனை முனைப்புடன் எதிர்கொண்டு வெற்றிபெற சத்தியமார்க்கம்.காம் இறைவனைப் பிரார்த்திக்கிறது.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.