பிரிட்டிஷ் சட்டங்களில் ஷரீஅத் சட்டக்கூறுகள் இடம்பெற வேண்டும்: ஆங்கிலிக்கன் பேராயர்!

{mosimage}இலண்டன்: பிரிட்டனில் நடைமுறையிலுள்ள சட்டங்களில் முஸ்லிம் ஷரீஅத் சட்டங்களுக்கும் இடமளிக்க வேண்டும் என ஆங்கிலிக்கன் திருச்சபைகளின் தலைவரான காண்டர்பரி பேராயர் (Arch Bishop) டாக்டர். ரொவான் வில்லியம்ஸ் அறிக்கை விடுத்துள்ளார். அவரது இந்த அறிக்கை பிரிட்டன் மட்டுமின்றி மேற்குலகம் முழுக்க மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பிரிட்டிஷ் மூலங்களின் அடிப்படையில் மட்டுமே பிரிட்டனில் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும்" என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனின் மக்கள் தொடர்பு அலுவலர் இதனைக் குறித்துக் கருத்து தெரிவித்தார்.

"மற்ற மதங்களின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டது போல் முஸ்லிம் சட்டங்களின் சில பகுதிகளையும் ஏற்று நடைமுறைபடுத்துவது தொடர்பாக பிரிட்டிஷ் அரசு ஆலோசிக்க வேண்டும்" என BBC வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பேராயர் வில்லியம்ஸ் கோரிக்கை விடுத்தார். அவர் மேலும், "சமூக ஒற்றுமை சாத்தியமாக வேண்டும் எனில் மத நம்பிக்கையாளர்களையும் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். அதற்குச் சில நேரங்களிலாவது ஷரீஅத் சட்டங்கள் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஒதுக்கித் தள்ள இயலாததாகும்" எனக் கூறினார்.

"இது நடைமுறைக்கு வரும் எனில் திருமணம் தொடர்பான குடும்பப் பிரச்சனைகளில் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்கள் செல்வதற்குப் பதில் ஷரீஅத் நீதிமன்றங்களை முஸ்லிம்கள் அணுக இயலும்" என அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அதே வேளளயில் ஷரீஅத்தின் சிலக் கடுமையான சட்டங்களுடன் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார். "ஷரீஅத்தைத் திறந்த மனதுடன் அணுகுவதற்கு பிரிட்டிஷ் மக்கள் தயாராக வேண்டும். சவூதி அரேபியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ காண்பது தான் ஷரீஅத் என்ற எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும்" என்றும் வில்லியம்ஸ் கேட்டுக் கொண்டார்.

பிரிட்டனில் சில பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகளும் பேராயர் வில்லியம்ஸின் இவ்வறிக்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் செய்த பொழுதும் முஸ்லிம்கள் வில்லியம்ஸின் இவ்வறிக்கையினை வரவேற்றுள்ளனர். உரிமையியல் சிக்கல்கள் அவரவரின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப தீர்க்கப்பட மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனில், அது சமூகங்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் என பிரிட்டனிலுள்ள ரமளான் ஃபவுண்டேஷன் தலைவர் முஹம்மது உமர் கூறினார்.

 

இன்னொரு முஸ்லிம் பிரமுகர், பேராயரின் இந்த ஆலோசனை செயல்படுத்தப்படுமாயின், பிரிட்டிஷ் முஸ்லிம்கள் முழுமையாக பிரிட்டிஷ் சமூகத்தில் இயைந்து கொள்ள இயலும் என்று தெரிவித்தார்.

 

பேராயரின் இந்த ஆலோசனை குறித்து பிரிட்டிஷ் நாளிதழ்களில் வந்த கடும் கண்டனங்களைக் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது,  தமது கூற்று சரியாக விளங்கப்படாததாலேயே இந்த அரைகுறை விமர்சனங்கள் எழுகின்றன என்றும், தமது கூற்றில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஏதோ மேம்போக்காகத் தான் இதனைச் சொல்லவில்லை; ஆழ்ந்த ஆய்வுக்குப் பின்னரே இதனைத் தான் சொல்லியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

"பேராயர் வில்லியம்ஸ் ஒரு சிறந்த கல்வியாளர்; அவரது கூற்றை பிரிட்டிஷ் அரசு முனைப்புடன் ஆராய வேண்டும். அவரது இந்தக் கூற்றைச் சரிவர ஆராயாமல் போகிற போக்கில் விமர்சிப்பது அறிவீனம்" என இன்னோர் ஆயர் (Bishop) ஸ்டீஃபன் லோவே தெரிவித்தார். பேராயரின் கருத்தைத் தானும் ஆதரிப்பதாக சவுத்வார்க் பகுதியின் ஆயர் டாம் பட்லர் தெரிவித்துள்ளார்.

 

2001-ல் எடுக்கப்பட்டக் கணக்குப்படி பிரிட்டனில் 16 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது பிரிட்டனின் மொத்த மக்கள் தொகையில் 2.7 விழுக்காடாகும்.