முஸ்லிம் வேட்டை, நீதிமன்றங்களில் ஆதாரமின்றித் திணறும் கேரளக் காவல்துறை.

தீவிரவாதி எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடிய வழக்குகளில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமல் காவல்துறை நீதிமன்றங்களில் திணறுகின்றது. கடந்த 12 ஆண்டுகளுக்கிடையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக ஊதிப் பெரிதாக்கியத் தீவிரவாத வழக்குகள் அனைத்திலும் காவல்துறையும் அரசு வழக்கறிஞர்களும் ஆதாரங்கள் இல்லாமல் நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் திணறுகின்றனர்.

கேரளாவில் கடந்த 1996 பிப்ரவரியிலிருந்து 2006 ஆகஸ்ட் வரையிலான 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் 27 முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதம், தேச விரோதம் போன்றக் குற்றங்கள் சுமத்திக் காவல்துறை கைது செய்துச் சிறையிலடைத்தது. இந்த இளைஞர்கள் அனைவரும் பல்வேறு வழக்குகளில் மொத்தம் 236 நாட்கள் ரிமாண்டில் இருந்தனர். பிணை கூடக் கிடைக்காத கடுமையான சட்டப்பிரிவுகள் மூலம் சிறையிலடைக்கப்பட்ட எந்த ஒரு வழக்கிலும் இந்த இளைஞர்களுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் ஒன்று கூடக் காவல்துறையினால் இதுவரை கண்டுபிடிக்கவோ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவோ முடியவில்லை.

கேரள முன்னாள் முதல்வர் மறைந்த E.K.நாயனார் கொலை முயற்சி, குமன்கல்லு குழாய் வெடிகுண்டு வழக்கு, கடைக்கல் குண்டுவெடிப்பு, பானாயிகுளம் சிமி வேட்டை, அஞ்சல் வெடிகுண்டு (Letter bomb) துவங்கி ஊடகங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகப் புனையப்பட்டு நிறைந்து நின்றப் பல வழக்குகளிலும் அவற்றைத் துவங்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் கூட இதுவரை எடுக்கப்படாமல் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. ஒரு சிறு ஆதாரம் கூடக் கிடைக்காமல் இவ்வழக்குகளின் விசாரணைகள் பாதியிலேயே நிற்கும் வேளையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தற்பொழுது காவல்துறை தேட ஆரம்பித்துள்ளது.

1996 -ல் பதிவு செய்யப்பட்ட குமன்கல்லு குழாய் வெடிகுண்டு வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்ட ஆதாரங்கள் எதுவுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதக் காரணத்தால் மலப்புரம் நீதிமன்றம் காவல்துறையை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தது. பொன்னானி வெளியங்கோட்டைச் சேர்ந்த P.K.M. முஹம்மது ஷரீப் முதலான 5 முஸ்லிம் இளைஞர்கள் குற்றம் சுமத்தப்பட்ட இவ்வழக்கில் இவர்கள், “ஈரானிலிருந்து ஆயுதப் பரிசீலனைப் பெற்றவர்கள் எனவும் பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு முதலானப் பயங்கர ஆயுதங்கள் இந்தியாவுக்குக் கடத்தியதாகவும்” காவல்துறை குற்றம் சுமத்தி இருந்தது. ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வெறுமனே குற்றச்சாட்டுகளை வாரி வீசியிருந்த அன்றைய மலப்புரம் வட்ட ஆய்வாளரின் (Circle Inspector) குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தது. “காவல்துறையின் பணி கதைகள் உருவாக்குவதல்ல” என நீதிமன்றம் அன்று கண்டித்தது. விசாரணை நிறைவடையவில்லை என்ற காவல்துறையின் நிலைப்பாடு காரணத்தால் இவ்வழக்கு 12 வருடங்கள் கடந்த பின்னரும் இன்றும் நீண்டுக் கொண்டே இருக்கின்றது.

8 முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக 1999 டிசம்பர் 12 அன்று கண்ணூர் நகர மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட E.K.நாயனார் கொலை முயற்சி வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர் கடந்த 8 வருடங்களாக நீதிமன்றத்தில் சாட்சியளிக்காமல் போக்குகாட்டிக் கொண்டிருக்கின்றார். அப்துல் நாசர் மஹ்தனி தலைமையிலான PDP-யைச் சேர்ந்த இவர்கள் கண்ணூரிலுள்ள பள்ளிக்குன்று என்னுமிடத்தில் ஒன்றுகூடி அன்றைய முதலமைச்சராக இருந்த E.K. நாயனாரைக் கொலை செய்வதற்காகத் திட்டம் தீட்டினர் என்பதே வழக்கு. வழக்கில் தொடர்புடைய ஒரு நபர் தலைமறைவானதால் விசாரணையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

அந்த ஒரு நபரை மட்டும் தனியாக மாற்றி வழக்கைப் பிரித்து நடவடிக்கைகளை உடனடியாக முடிக்க வேண்டும் என மூன்று மாதம் முன்பு கண்ணூர் இரண்டாம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். எனினும் இதுவரை காவல்துறை அவ்வுத்தரவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எதையுமே இதுவரை ஆரம்பிக்கவில்லை.

2006 ஆகஸ்டு 15 அன்று தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி ஆலுவாவிலுள்ள பானாயிகுளத்தில் 5 முஸ்லிம் இளைஞர்களைக் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்தது. இவ்வழக்கிலும் இன்றுவரை காவல்துறை நீதிமன்றத்தில் முறையான எந்த ஓர் ஆவணமும் தாக்கல் செய்யவில்லை. தீவிரவாதிகள் எனக்கூறி இவர்களைக் கைது செய்தக் காவல்துறை மொத்தம் 65 நாட்கள் அநியாயமாகச் சிறையிலடைத்திருந்தது. இவ்வழக்கில் பிரத்தியேக விசாரணைக் குழுவிற்குப் பானாயிகுளத்தில் உள்ள ஹிரா லைப்ரரியில் இருந்து ஒரு புத்தகம் அல்லாமல் வேறொன்றும் இதுவரை ஆதாரமாகக் கிடைக்கவில்லை.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் சமர்ப்பிக்கப்படாததால் இரு மாதங்களுக்குப் பின் நீதிமன்றம் இவர்களுக்குப் பிணை வழங்கியது. கடந்த இரு வருடங்களாக விசாரணை முடியவில்லை என்றக் காரணம் கூறி காவல்துறை இவ்வழக்கை இன்றுவரை நீட்டித்துக் கொண்டே செல்கின்றது.

2006 அக்டோபரில் கொல்லம் கடைக்கலில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டதாகக் கூறி கேம்பஸ்ஃப்ரண்டைச் சேர்ந்த 5 மாணவர்களைக் கைது செய்து சிறையிலடைத்த வழக்கிலும் காவல்துறைக்கு இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்வழக்கில் 6 ஆம் எதிரியாகச் சேர்க்கப்பட்டிருந்த மாணவன் ஷராபத் 6 நாட்களும் மற்ற நான்கு மாணவர்களும் மூன்று வாரமும் காவலில் சிறையில் இருந்தனர். DYFI-யின் நெருக்குதல் மூலம் இந்த 5 முஸ்லிம் மாணவர்கள் மீது தீவிரவாதக் குற்றம் சுமத்திக் காவல்துறை பொய்வழக்கு சுமத்தியதாகும். இவ்வழக்கும் விசாரணை முழுமையடையவில்லை என்றக் காரணம் கூறி நீட்டிக்கப்படுகின்றது.

2006 செப்டம்பர் 21 அன்று குடியரசுத் தலைவரின் கேரளச் சுற்றுப்பயண வேளையில் அஞ்சல் வெடிகுண்டு தொடர்பாகத் தீவிரவாதி எனக் காவல்துறைக் கண்டுபிடித்த திருவனந்தபுரம் மணக்காடைச் சேர்ந்த முஹ்ஸின் என்ற மாணவன், உண்மையான குற்றவாளி பிடிக்கப்பட்டுக் குற்றமற்றவர் எனத் தெளிவான பின்னரும் காவல்துறை இதுவரை முஹ்ஸினுக்கு எதிராகப் பதிவு செய்த வழக்கைத் திரும்பப்பெறவில்லை.

களக்கூட்டத்திலுள்ள மேனன்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த ராஜீவ் ஷர்மா எனும் நபர் தான் அஞ்சல் வெடிகுண்டு தயார் செய்து அதன் பின்னால் செயல்பட்டவர் எனப் பின்னர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இவையல்லாமல் காவல்துறையும் ஊடகங்களும் இணைந்து உருவாக்கப்பட்டத் தீவிரவாதக் கதைகளின் பெயரில் கடந்த 12 வருட காலத்தில் கேரளத்தில் வேட்டையாடப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 2000 க்கும் அதிகமாகும். பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இத்தகையத் தீவிரவாத வழக்குகளில் ஒன்று கூட இதுவரை நிரூபிக்கப்படவில்லை. என்றாலும் தீவிரவாதம், பயங்கரவாதம் எனக் கூறி முஸ்லிம் இளைஞர்களைச் சிறையிலடைக்கும் செயல்பாட்டைக் கேரள காவல்துறை இன்றும் தொடர்கிறது.

இதில் நேற்று காஸர்கோட்டில் தீவிரவாதிகள் எனக் கூறி கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்கள் காவல்துறையின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளின் புதிய இரைகள் என்றச் சந்தேகம் வலுபெறவே செய்கின்றது.

நன்றி: P.C. அப்துல்லாஹ்.(தேஜஸ் நாளிதழ் 11.02.2008.)

 

தொடர்புள்ள சுட்டி: இஸ்லாமோஃபோபியா கேரளம் நோக்கி…!