{mosimage}இராக்கிலிருக்கும் எண்ணெய்வளத்தைக் குறிவைத்தும், அண்டை நாடான ஈரானை அச்சுறுத்தவும் தான் அமெரிக்கா தனது படையை அங்கு நிலைகொள்ள வைத்துள்ளது என ஐநாவின் முன்னாள் முதன்மை ஆயுத ஆய்வாளர் ஹான்ஸ் பிளிக்ஸ் தெரிவித்துள்ளார். "எனது அச்சம் என்னவெனில் இராக்கில் அமெரிக்கா நிரந்தரமாகவே தங்கும் எண்ணம் கொண்டுள்ளதோ என்பது தான்" என்று 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்தார்.
"1991 வளைகுடாப்போரின் போது தனது படைகளை சவூதி அரேபியாவில் குவித்த அமெரிக்கா தற்போது அங்கிருந்து தனது படைகளைக் கிளப்ப வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளது. சவூதிக்கு அடுத்தபடியாக அதிக அளவு எண்ணெய் வளம் இராக்கில் இருப்பதால் அமெரிக்கா இராக்கைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது. அதோடு தனது எதிரியான ஈரானை அருகிருந்து கண்காணிக்கவும் இராக்கியப் பகுதியே மிகவும் வசதியானதாக அமெரிக்கா கருதுகிறது" என அவர் தெரிவித்தார்.
"வடகொரியா அணுஆயுதங்கள் தயாரிப்பதைப் பேச்சு வார்த்தைகள் மூலம் ஓரளவு மட்டுப்படுத்த முடிந்துள்ளது; அதே உத்தியை ஈரான் விஷயத்திலும் கையாள வேண்டும். அதைவிடுத்துப் போர் முரசு கொட்டினால், எதிர்மறை விளைவுகளே ஏற்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"இராக்கில் இல்லாதப் பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்காகவும், குடியரசை நிலைநிறுத்தவும் காரணம் கூறியே அமெரிக்கா இராக் மீது போர் தொடுத்தது; இல்லாதப் பேரழிவு ஆயுதங்கள் கிடைக்கப்போவதில்லை; முன்னர் இருந்ததைவிட மிக மோசமான நிலைக்கு இராக்கை அமெரிக்கா கொண்டு செல்கிறது" என்று அவர் கூறினார்.
140,000 படையினரையும், எண்ணிலடங்கா பிளாக்வாட்டர் போன்ற ஒப்பந்தக் காவல் படையினரையும் கொண்டுள்ள அமெரிக்காவுக்கு 2007 தான் இதுவரை மிக மோசமான இழப்புகளைச் சந்தித்த ஆண்டாகும்.
பிளிக்ஸ், 2003ஆம் ஆண்டு ஐநாவின் ஆயுத ஆய்வாளராக இராக்கில் பரிசோதனை செய்து பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் இல்லை எனச் சான்றளித்தார். இருப்பினும் அமெரிக்கா பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் இருப்பதாகக் கூறி தனது தாக்குதலைத் தொடங்கியது. இன்றுவரை அத்தகைய ஓர் ஆயுதம் கூட இராக்கில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
சதாமின் ஆட்சியில் இருந்ததைவிடப் பன்மடங்கு தற்போது இராக் பின்தங்கியுள்ளது. இராக்கில் நிலவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழலில் ஒவ்வொரு 10 இராக்கியரில் ஒருவர் அகதியாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார் என ஐநா அகதிகள் நல்வாழ்வுமையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.