புஷ்ஷுக்கு இஸ்ரேலிய யூத ரப்பிகள் விதித்த “ஃபத்வா”..!

அமெரிக்க அதிபர் புஷ் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பக் கொடுக்க மனதில் நினைத்தால் கூட கடவுளின் சாபம் அமெரிக்காவைத் தாக்கும் என இஸ்ரேலிய யூத ரப்பி மெய்ர் ட்ரக்மேன் (Meir Druckman) இஸ்ரேலிய வானொலியில் இன்று (5 நவம்பர், 2007) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"அமெரிக்க அதிபர் பைபிளை முழுமையாக நம்புபவர் எனத் தெரியும்; இருந்தும் யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இஸ்ரேலியப் பிரதேசத்திலிருந்து யூதர்களை அகற்ற நினைப்பது அமெரிக்காவின் மீது கடவுளின் சாபத்திற்கே வழிவகுக்கும்" என்று தெரிவித்த அவர், "சென்ற ஆண்டு கேட்ரினா புயல் தாக்கியதும், இந்த ஆண்டு கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ மூலம் அழிவு ஏற்பட்டதும் அமெரிக்காவின் மீதான கடவுளின் கோபத்தைத் தான் காட்டுகின்றன. இதிலிருந்தாவது அமெரிக்க அதிபர் புஷ் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்" என்று கூறினார்.

"இந்தக் காட்டுத்தீயை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, மத்திய கிழக்கு அமைதி முயற்சிகளை புஷ் கைவிடவேண்டும்; இதுகுறித்து பிரபல ரப்பிகள் குழு ஏற்கனவே புஷ்ஷுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் தற்போது மத்தியகிழக்கில் அமைதி முயற்சிகளை வலுப்படுத்த சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.