ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஆனால்…!

சகப் பள்ளி மாணவியைக் கற்பழித்துக் கொன்றதாக 14 வயதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் 48 வருடங்கள் கழிந்தபின்னர் தற்போது நிரபராதி என்று கூறி தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 1959ஆம் ஆண்டு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுச் சிறைத்தண்டனையை அனுபவித்து தற்போது 62 வயதாகும் ஸ்டீவன் ட்ரஸ்காட் என்ற பெயருடைய இந்த பள்ளி மாணவர்(?) மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு அநீதியானது என்று சமீபத்தில் நிரூபிக்கப்பட்டப் பின் இவர் மீது சுமத்தப்பட்டக் குற்றத்தை இரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்செயலுக்கு நீதிமன்றம் இவரிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ட்ரஸ்காட் "நானும் என் குடும்பத்தினரும் இது முழுக்க முழுக்க அநீதியானது என்று அறிந்திருந்தாலும் நான் குற்றம் இழைத்தவன்தான் என்று கடந்த 48 வருடங்களாக என்று சமூகம் கருதியது. வாழ்நாளில் ஒருபோதும் என் கனவிலும் எண்ணிப் பார்த்திராத வகையில் சத்தியம் வென்றுள்ளது!" என்று கூறியுள்ளார். 
 
1959 இல் கனடாவின் தெற்கு ஆண்டேரியோ பகுதியில் நடந்த மேற்கூறப்பட்டக் குற்றத்திற்காக "மிகச் சிறிய வயதில் குற்றமிழைத்த மாணவன்" என்ற அடையாளத்துடன் முதலில் பரபரப்பாகப் பேசப்பட்டுத் தூக்குதண்டனை அளிக்கப்பட்ட இவருக்கு 1960 இல் அது ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 
 
மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட ட்ரஸ்காட் அவருடன் இருந்ததைக் கண்டதாக சாட்சிகள் முன்பு தெரிவித்திருந்தனர். இதனாலேயே அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
 
ஆனால் சமீபத்தில் புதிய தடயங்கள் கிடைத்தநிலையில்  ட்ரஸ்காட் அப்பள்ளி மாணவியைக் கொலை செய்திருக்கும் சாத்தியக்கூறுகள் எதுவுமே அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, ட்ரஸ்காட் இக்கொலை வழக்கிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இத்தகைய மரபியல் தடயங்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கிடைக்காமல் போனதாலேயே ட்ரஸ்காட் குற்றவாளி என்று சந்தர்ப்ப சூழல் வைத்து முன்பு தீர்ப்பளித்திருந்தது என்றும் இத்தகைய தடயங்கள் முன்னரே கிடைத்திருந்தால் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருப்பார் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.