“எங்களிடம் 3000 மையவிலக்கிகள் (Centrifuges) தற்போது யுரேனிய செறிவூட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என்று ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் ஒரு பேரணியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
“அணுமின் உற்பத்திக்கு செறிவூட்டிய யுரேனியத்தைப் பயன்படுத்த ஈரானுக்கு இருக்கும் உரிமையில் தலையிட எவருக்கும் உரிமையில்லை” என்று அப்போது அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் காஸ்பியன் குழும நாடுகள் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புட்டின் அணுமின் உற்பத்திக்கான தனது ஆதரவை ஈரானுக்கு வழங்கி வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
சர்வதேச அணுசக்திக் கழகம் (International Atomic Energy Agency) ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்களை விரிவாகச் சோதனை செய்து அவை மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப் படுகின்றனவா அல்லது அணுஆயுத உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றனவா என உறுதியாக முடிவு சொல்ல இயலாமல் குழப்பமான அறிக்கையைத் தந்துள்ளது. மேலும் சில கேள்விகளை ஈரானுக்கு அனுப்ப IAEA முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதிக்குள் ஈரானின் அணுஆராய்ச்சி தொடர்பாக மேலும் ஓர் அறிக்கையை IAEA தாக்கல் செய்ய உள்ளது.
ஈரான் அணுஆயுத உற்பத்திக்காகவே யுரேனியத்தை செறிவூட்டி வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் குற்றம் சுமத்தி வந்துள்ளன. அமெரிக்காவின் செல்வாக்கினால் இரண்டு சுற்று பொருளாதாரத் தடைகளை ஈரானின் மீது ஐநா சாத்தியுள்ளது. இருப்பினும் தனது செறிவூட்டல் அணுமின் உற்பத்திக்காகவே என்று ஈரான் உறுதியாகக் கூறிவருகிறது.
உலகில் தற்போது இருக்கும் அணுஆயுதங்களில் 96 விழுக்காடு ஆயுதங்கள் அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் மட்டுமே உள்ளன என்பது தனித் தகவல்.