அமெரிக்காவின் ஏகாதிபத்தியச் செயல்பாடுகளுக்கு தனிப்பெரும் எதிராளியாகச் சிறிது சிறிதாக மாறி வருகிறார் வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ். நிகாரகுவா, பொலிவியா, கியூபா, டொமினிக் குடியரசு ஆகிய நாடுகளுடனான உச்சி மாநாட்டில் US ஆதிக்கத்தில் செயல்பட்டு வரும் உலக வர்த்தக வங்கிக்கு மாற்றாக, அமெரிக்கக் கண்டத்திற்கான பொலிவேரியன் மாற்று (Bolivarian Alternative for the Americas) என்ற பெயரில் வர்த்தக வங்கி ஒன்றைத் தொடங்க இருப்பதாக அறிவித்த சாவேஸ், உச்சி மாநாட்டிற்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்திய செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இவ்வுச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட நாடுகளுக்கிடையில் இணைந்து இராணுவ அமைப்பு ஒன்றையும் நிறுவுவதாக அறிவித்துள்ளார்.
“இந்த இராணுவ கூட்டமைப்பில் உள்ள ஏதாவது ஒரு நாட்டின் மீதான ஆக்ரமிப்பை எங்கள் அனைத்து நாடுகளின் மீதான ஆக்ரமிப்பாக நாங்கள் காண்போம். அதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து நிற்போம். அன்றும் இன்றும் எங்கள் எதிரி ஒன்றே; அது US ஏகாதிபத்தியம் மட்டுமே. மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை US தனது ஏகாதிபத்தியம் மூலம் அடிமைப் படுத்த நினைக்கிறது. ஆனால் அதை நாங்கள் ஒருபோதும் நடக்க அனுமதிக்கமாட்டோம்” என்றும் அவர் மேலும் அறிவித்தார்.
சாவேஸின் இந்த அறிவிப்பு அமெரிக்காவின் தனி ஆவர்த்தனத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.