அல்ஜஸீரா மார்ச் முதல் இந்தியாவில் தடம் பதிக்கிறது!

கொல்கத்தா: கத்தரில் இருந்து இயங்கும் உலகப் பிரசித்தமான செய்தி தொலைகாட்சி அல்ஜஸீராவின் ஆங்கில ஒளிபரப்பு, வருகின்ற மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் தனது ஒளிபரப்புச் சேவையைச் செய்வதற்குத் தயாராகி வருகின்றது. இவ்விஷயத்தில் மத்திய அரசின் அனுமதி உடன் கிடைக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாக அல்ஜஸீரா நெட்வொர்க்கின் இப்பகுதி வினியோக உரிமையாளர் டயானா ஹோஸ்கர் அறிவித்தார்.

“அல்ஜஸீரா தெளிவான ஓர் இலட்சியத்துடன் செயல்படும் அலைவரிசையாகும். பின்லாடனிடமிருந்தும் எங்களுக்கு நாடாக்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆனால் கிடைப்பவை அனைத்தையும் ஒளிபரப்பும் நிலைபாட்டை நாங்கள் கைக்கொள்வதில்லை. செய்திகளில் நம்பத்தன்மை கொண்டவைகளை மட்டுமே நாங்கள் ஒளிபரப்புச் செய்கின்றோம். அதே சமயம் இஸ்ரேலிலுள்ள யூதர்களைத் தொலைகாட்சி திரையில் காண்பிக்கும் உறுதியும் எங்களிடம் உண்டு”.

“பேச்சுரிமை மறுக்கப்பட்ட, தங்கள் நிலைபாட்டையும் தங்களின் நிலைமையையும் வெளிப்படுத்த இயலாதவர்களின் குரலாக மாறுவதே எங்கள் இலட்சியம். ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் வாழும் மக்களுக்கே அல்ஜஸீரா முன்னுரிமை வழங்குகின்றது. மத்திய ஆசியாவின் அரசியலில் அல்ஜஸீராவிற்கு தெளிவான பார்வை உண்டு” என ஒரு தனியார் தொலைகாட்சிக்கு வழங்கிய நேர்காணலில் டயானா ஹோஸ்கர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் அப்பாவி பொதுமக்களின் மீதான அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவத்தின் அராஜகங்களை நேரடியாகக் களத்திலிருந்து ஆதாரத்துடன் வெளிப்படுத்தி மேற்குலகின் வயிற்றில் புளியைக் கரைத்த அல்ஜஸீராவின் ஆங்கில ஒளிபரப்பை, எவ்விதக் காரணங்களும் தெரிவிக்கப்படாமல் மொட்டையாகப் பாதுகாப்புப் பிரச்சனை எனக் கூறி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் முன்னர் தடை செய்திருந்தது நினைவிருக்கலாம்.

முன்னிலை ஊடகங்களின் துணையுடன் நியாயத்திற்கு திரை இட்டு அராஜகத்தின் மொத்த ஊற்றுக் கண்ணாக வலம் வரும் அமெரிக்க ஏகாதிபத்தியச் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் தெளிவாகக் கொண்டு சேர்த்தப் பெருமை அல்ஜஸீராவிற்கு உண்டு. இந்தியாவில் வெளிவரவிருக்கும் அதன் ஒளிபரப்பு, மறைக்கப்பட்டிருக்கும் மத்திய கிழக்கு மற்றும் மேற்குலகின் உண்மை நிலைகளை இந்திய மக்களுக்கும் தெள்ளென கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயம் இல்லை.