வாஷிங்டன்: யூதர்களும், இஸ்ரேலியர்களும்தான் உலகத்தில் வன்முறைக் கலாச்சாரம் உருவாக முக்கிய காரணம் என தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தின் எம்.கே.காந்தி அமைதிக் கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி விலகியுள்ளார்.
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி. இவர் ரோசஸ்டெர் பல்கலைக்கழகத்தின் எம்.கே. காந்தி அமைதி கழகத்தின் தலைவராக இருந்து வந்தார். இந்தக் கழகத்தை நிறுவியவரே அருண் காந்திதான்.
கடந்த 7ம் தேதி இவர் இணையதள பிளாக் ஒன்றில், உலக அளவில் வன்முறைக் கலாச்சாரம் பெரிய அளவில் பரவ யூதர்களும், இஸ்ரேலும்தான் முக்கிய காரணம் என தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தனது தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், எனது கருத்துக்கு எதிராக எழுந்துள்ள கருத்துக்கள், மகாத்மா காந்தி போதித்த அகிம்சையைப் புரிந்து கொள்ளாததால் வந்தது. வன்முறைக் கலாச்சாரத்திற்கு எதிரான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே எனது கட்டுரை அமைந்திருந்தது.
வேறு எந்த உள்நோக்கமும் என்னிடம் இல்லை. ஆனால் எனது கருத்துக்கள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாக உணர்கிறேன். எனவே எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
washingtonpost.com இணையதளத்தின் வலைப்பூ ஒன்றில்தான் அருண் காந்தியின் கட்டுரை வெளியாகியிருந்தது.
அதில், ஹோலோகாஸ்ட் அனுபவத்துக்குப் பின்னர், அன்று நடந்த கொடுமைகளுக்குப் பழிக்குப் பழி வாங்கும் வகையில் யூதர்கள் இன்று செயல்படுவதாக தெரிகிறது.
யூதர்களின் தேசமான இஸ்ரேல் ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் தான் அதிகம் நம்பியுள்ளது. எதிரிகளை நண்பர்களாக்கிக் கொள்ள அது தயங்குகிறது.
உலகத்தில் வன்முறைக் கலாச்சாரம் வேகமாக பரவ இவர்களும் முக்கியக் காரணம் என்று கூறியிருந்தார் காந்தி.
அமெரிக்காவின் டென்னஸ்ஸியில், கடந்த 1991ம் ஆண்டு எம்.கே.காந்தி அமைதிக் கழகத்தை ஏற்படுத்தினார் அருண் காந்தி. பின்னர் இது ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டது.
மகாத்மா காந்தியின் 2வது மகன் மணிலாலின் மகன்தான் அருண் காந்தி. மகாத்மா காந்திக்கு இவர் 5வது பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.