ஹமாஸ் அரசை கவிழ்க்க திட்டம்

ஜெருசலம்: ஃபலஸ்தீனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை தகர்க்க அதிபர் மஹ்மூத் அப்பாஸின் பிரஸிடென்ஸியல் கார்ட்(Presidential Gaurds)ஸிற்கு எகிப்து ஆயுதங்கள் வழங்கியது. ஹமாஸை தனிமைப்படுத்தி தகர்ப்பதற்கு 2000 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 20,000 துப்பாக்கி ரவைகள் வைக்கும் அறைகள், 2 இலட்சம் துப்பாக்கி ரவைகள் அடங்கிய மற்றும் பல நவீன ரக ஆயுதங்கள் காஸாவில் கொண்டு சேர்க்கப்பட்டது.

 

இஸ்ரேலின் உதவியுடன் இந்த ஆயுதங்கள் மஹ்மூத் அப்பாஸிற்கு கைமாறிய விவரம் ஓர் இஸ்ரேலிய அதிகாரி அறிவித்தார். இஸ்ரேலிய இராணுவத்தின் உதவியுடன் இவ்வாயுதங்கள் மஹ்மூத் அப்பாஸின் ஃபத்ஹிற்கு வழங்கப்பட்ட விவரம் ஹாரட்ஸ் தினப்பத்திரிக்கை வெளியிட்டது. எகிப்திலிருந்து நான்கு ட்ரக்குகளில் கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள் கரெம்ஷாலோம் எல்லை செக்போஸ்ட் வழியாக ஃபலஸ்தீன் அத்தாரிட்டி அதிகாரிகளிடம் கைமாற்றப்பட்டது. சாதாரணமாக ஆயுதங்களுடன் தங்கள் செக்போஸ்டை கடப்பதற்கு எந்த வாகனத்தையும் இஸ்ரேல் அனுமதிப்பதில்லை.

 

எகிப்து, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகளின் உயரதிகாரிகள் நடத்திய இரகசிய ஆலோசனையில் ஹமாஸை அதிகாரத்திலிருந்து கீழிறக்க ஃபத்ஹிற்கு அதிக நாசநஷ்டங்களை உருவாக்கும் ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த சனிக்கிழமை(24/12/2006) அன்று இஸ்ரேலிய பிரதமர் எஹூத் ஒல்மர்ட்டும் மஹ்மூத் அப்பாஸும் இணைந்து நடத்திய கலந்தாலோசனையில் இஸ்ரேல் தடைசெய்து வைத்திருக்கும் ஃபலஸ்தீன் வரிப்பணத்தில் 10 கோடி டாலர் பணம் அப்பாஸிற்கு வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.அதே நாளில் அப்பாஸின் ஃபத்ஹிற்கு இஸ்ரேலிய செக்போஸ்ட் வழி ஆயுதம் கடத்த அனுமதி வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது. அப்பாஸின் ஃபத்ஹிற்கு உதவ 10 கோடி டாலரை அனுமதிக்க வேண்டும் என இதற்கு முன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவின் உத்தரவுபடி எகிப்து ஃபத்ஹிற்கு ஆயுதம் வழங்கியதாகவும் இஸ்ரேலிய அதிகாரி கூறியதாக ஹாரட்ஸ் பத்திரிக்கை வெளிப்படுத்தியது. ஃபத்ஹிற்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா ஜோர்தானுக்கும் உத்தரவிட்டுள்ளது. அப்பாஸிற்கு இன்னும் சில தினங்களில் ஜோர்தானிலிருந்து ஆயுதங்கள் கிடைக்கப்பெறும் என இஸ்ரேல் பொது வானொலி(Public Radio Of Israel)யும் அறிவித்தது. இவ்வாயுதங்களை ஃபத்ஹிற்கு மேற்குகரை(West Bank)யில் கொண்டு சேர்ப்பது ஜோர்தானின் திட்டமாகும். சில தினங்களுக்கு முன் அப்பாஸின் ஃபத்ஹிற்கு ஜோர்தானில் வைத்து இராணுவ பரிசீலனை வழங்கவும் அமெரிக்க மற்றும் ஜோர்தான் அதிகாரிகள் ஒருமித்த தீர்மானம் எடுத்திருந்தனர்.

 

இவ்வருடம் ஜனவரி மாதம் ஃபலஸ்தீன் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு ஃபலஸ்தீனை கைப்பற்றிய ஹமாஸ் அரசை கீழிறக்கி தங்களின் இலட்சியங்களுக்கு உதவிகரமாக அமையும் அப்பாஸின் தலைமையிலான பொம்மை அரசை ஃபலஸ்தீனில் ஏற்படுத்துவதே அமெரிக்காவில் இலட்சியமாகும். இத்திட்டத்திற்கு பிரித்தானிய அரசின் பின்துணையும் அமெரிக்காவிற்கு உண்டு.

 

ஹமாஸ் அரசை கலைக்க வேண்டும் என சமீபத்தில் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து ஃபலஸ்தீனில் நிகழும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் இம்மறைமுக திட்டத்தின் முதல்கட்டங்களாகும். ஃபலஸ்தீன் அரசின் ஆட்சிகாலம் முடியும் முன்பே தேர்தல் நடத்துவதற்கான தீர்மானம் எடுத்தது ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதியாகும் என ஹமாஸ் அரசு குற்றம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.