குர்பானிச் சட்டங்கள்

Share this:

இறைத்தூதர் நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவுறுத்தும் விதத்தில் புனித ஹஜ் மாதமான இந்த துல்ஹஜ் மாதத்தில் முஸ்லிம்கள் தங்களால் இயன்ற விதத்தில் குர்பானி(பலி) கொடுக்கின்றனர். மக்காவில் ஹஜ் என்னும் புனிதப்பயணத்தில் இருக்கும் ஹாஜிகளுக்கு அவர்களின் ஹஜ் முழுமையடைய இந்த பலியிடுதல் என்னும் வணக்கம் நிர்பந்தமாகும். உலகின் பிற பகுதியில் உள்ள முஸ்லிம்களில் இயன்றவர்கள் இதனை செய்யலாம். குர்பானி தொடர்பான அனைவரும் அறிந்திருக்க வேண்டிய சில சட்டங்களை இங்கு பார்க்கலாம்.

 

குர்பானி கொடுக்கப்பட வேண்டிய நாட்கள்

 

“அய்யாமுத் தஷ்ரீக் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாளாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முதஇம்(ரலி), நூல்: இப்னு ஹிப்பான்.  

 

பெருநாளான துல்ஹஜ் 10 ஆம் நாள் அன்று மட்டும் தான் அறுத்து பலியிட வேண்டும் என்று சிலர் தவறாக விளங்கிக் கொண்டுள்ளனர். இதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது. பெருநாளை அடுத்து வரும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 11,12,13 ஆகிய மூன்று நாட்களிலும்  குர்பானி கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.

 

ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும் (ஹஜ்ஜில் இருப்பவர்களைத்தவிர)

 

குர்பானி கொடுப்பது என்பது இன்று பெருமைக்காக செய்யப்படும் செயலாகி விட்டது. வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு வீதம் கணக்கிட்டு தற்பெருமை நிமித்தம் குர்பானி கொடுக்கப்படும் பழக்கம் இருந்து வருகின்றது. இது தேவையற்றதாகும். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடே போதும். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

 

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களுடைய குர்பானி கொடுக்கும் பழக்கம் எப்படி இருந்தது? என்று அபூஅய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அதை அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். இந்நிலை இன்று மக்கள் பெருமைக்காக செய்யும் வரை இருந்தது. தற்போது நாம் காணும் நிலை ஏற்பட்டு விட்டது(அதாவது ஒரு குடும்பத்தினரே பல ஆடுகளை குர்பானி கொடுக்கும்நிலை ஏற்பட்டது) என்று பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அதாஉ இப்னு யஸார்(ரலி), நூல்: திர்மிதி, இப்னுமாஜா, முஅத்தா.

 

“நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஒரு ஆட்டையோ, இரண்டு ஆட்டையோ குர்பானி கொடுத்தனர் என்ற சுன்னத்தை நான் அறிந்த பிறகு (நான் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதால்) என்னை என் குடும்பத்தினர் கல்நெஞ்சன் என்று கருதுகின்றனர். (நான் பல ஆடுகளை கொடுக்காததால்)என் அண்டை வீட்டார் என்னை கஞ்சன் என்கின்றனர்” அறிவிப்பாளர்: அபூஸுரைஹா(ரலி, நூல்: இப்னுமாஜா.

 

கூட்டு சேர்ந்து குர்பானி கொடுப்பது கூடும் (ஹஜ் செய்பவர்களைத்தவிர)

 

வசதியிருப்பின் இறையச்சத்துடன் ஒட்டகம், மாடு ஆகியவற்றை ஒருவர் குர்பானி கொடுக்கலாம். எனினும் அதிகபட்சம் 7 நபர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்க முடிகிறது.

 

“ஒட்டகம், மாடு ஆகியவற்றில் எங்களை ஏழு நபர்களை கூட்டாகச் சேர்ந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

 

குர்பானி கொடுக்க தகுதியான பிராணிகள்

 

“நபி(ஸல்) அவர்கள் உயர்தரமான கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தார்கள். அந்த ஆட்டின் வாய், கால்கள், கண்கள் ஆகியவை கறுப்பு நிறமாக இருந்தது”. அறிவிப்பாளர்: அயூ ஸயீத்(ரலி), நூல்: திர்மிதி, அபூதாவூத் ,நஸயீ, இப்னுமாஜா.

 

“நாங்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது ஏழு நபர் ஒரு ஒட்டகத்தையும், ஏழு பேர் ஒரு மாட்டையும் அறுத்தோம்”. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா.

 

இந்த ஹதீஸ்கள் குர்பானி கொடுக்கத் தகுதி பெற்ற பிராணிகளாக ஆடு, மாடு, ஒட்டகத்தையே அறிவிக்கின்றது. இது அல்லாத வேறு பிராணிகளை குர்பானி கொடுக்கலாகாது.

 

குர்பானி பிராணிகளின் வயது

 

“முஸின்னத் என்ற பருவமுடையதைத் தவிர மற்றதை நீங்கள் அறுக்க வேண்டாம். அது கிடைப்பது உங்களுக்குச் சிரமமாக இருந்தால், ஜத்அத் எனும் பருவமுடைய பிராணியையே அறுக்கலாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

 

முஸின்னத் என்றால் ஐந்து வயதான ஒட்டகத்திற்கும், இரண்டு வயது முடிந்த ஆடு, மாடுகளுக்குமே கூறப்படும். ஜத்அத் என்றால் நான்கு வயதான ஒட்டகத்திற்கும், ஒரு வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளுக்கும் கூறப்படும் என இப்னுல் அஸீர் கூறுகிறார்கள். இதிலிருந்து குர்பான் கொடுக்க சிறு பிராணிகளை அறுப்பது கூடாது என்பது தெளிவாகிறது. குர்பானுக்கு பிராணிகள் கிடைப்பது சிரமமாக இருந்தாலே ஒரு வயது முழுமையடைந்த ஆடு, மாடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வயதிற்கு குறைவான பிராணிகளை அறுத்தல் கூடாது.

 

பிராணிகளைப் பராமரித்தல்

 

நாங்களும் இதர முஸ்லிம்களும் மதீனாவில் குர்பானிப் பிராணியைக் கொழுக்கச் செய்வோம் என்று உமாமா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

 

இந்த செய்திபடி குர்பானி கொடுப்போர், குர்பானிப் பிராணிகளை முன்பே வாங்கி அதற்கு நன்கு தீவனம் தந்து கொழுக்கச் செய்யலாம். அல்லது குர்பானிக்கு கொழுத்த பிராணிகளை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும்.

  

குர்பானி கொடுக்கத் தகுதியற்ற பிராணிகள்

 

“கொம்பில், காதில் பாதி அளவோ அல்லது அதை விட கூடுதலாகவோ உடைந்த, அறுபட்டவைகளை(ஆடு, மாடுகளை) குர்பானி கொடுப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்”. அறிவிப்பாளர்: அலி(ரலி), நூல்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா.

 

“முழுமையாக காதில்லாதவை, அடியோடு கொம்பில்லாதவை, பார்வையே தெரியாதவை, பலவீனத்தால் தானாக எழுந்து நடக்க இயலாதவை, கால் ஒடிந்தவை ஆகியவை குர்பானி கொடுத்திட நபி(ஸல்) அவர்கள் தடை செய்தனர்”. அறிவிப்பாளர்: உத்பா இப்னு அப்தஸ்ஸுலமிய்யி(ரலி), நூல்: அஹ்மத், அபூதாவூத்.

 

எனவே கீழ்க்கண்ட நிலையில் உள்ள பிராணிகளை குர்பானி கொடுக்க தேர்ந்தெடுக்கக் கூடாது.

 

1. கொம்பில் பாதி ஒடிந்த பிராணி

2. காதில் பாதி அறுபட்டது

3. தெளிவாகத் தெரியும் மாறுகண் உள்ளவை

4. நன்கு தெரியும் நோய் உள்ளவை

5. நன்கு தெரியும்படியான நொண்டி

6. கால் எலும்பு முறிந்து விட்ட நொண்டி

7. காதில்லாதவை

8. கொம்பில்லாதவை

9. பார்வையில்லாதவை

10. தானாக எழுந்து நடக்க முடியாத பலவீனமானவை

 

காயடிக்கப்பட்ட பிராணிகள் கூடும்

 

“காயடிக்கப்பட்ட இரண்டு பெரிய கொம்புகளையுடைய இரண்டு ஆடுகளை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தனர்”. அறிவிப்பாளர்: அபூராபிஉ(ரலி), நூல்: அஹ்மத், ஹாகிம்.

 

எனவே கொழுக்கவைப்பதற்காக காயடிக்கப்பட்ட ஆடுகளைக் குர்பானி கொடுக்கலாம். அதனால் தவறில்லை.

 

குர்பானி பிராணிகளை அறுக்கும் நேரம்

 

குர்பானி என்பது பெருநாள் தொழுகை முடிந்த பிறகே நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு முன்பு நிறைவேற்றினால் அது குர்பானியாகாது. அதோடு அதற்குப் பரிகாரமாக வேறு ஒரு பிராணியை குர்பானி கொடுக்கவும் வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

 

“ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். தொழுது முடித்து நபி(ஸல்) அவர்கள் திரும்பிய போது அங்கே எலும்புகளும், அறுக்கப்பட்ட குர்பானிப் பிராணிகளும் கிடந்தன. தொழுகை முடியும் முன்பே இவை அறுக்கப்பட்டு விட்டன என்பதை அறிந்த நபி(ஸல்) அவர்கள், தொழும் முன்பு அறுத்தவர் அதே இடத்தில் வேறு ஒன்றை அறுக்கட்டும். தொழும்வரை அறுக்கவில்லையானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும் என்று கூறினார்கள்.” அறிவிப்பாளர்: ஜுன்துப் இப்னு ஸுப்யான்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

 

“தொழும் முன் குர்பானி கொடுத்தால்(அதற்குப் பகரமாக) மீண்டும் அறுக்கட்டும்” என்று ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

 

தொழும் முன்அறுத்தவர் தனக்கே அதை அறுத்துக் கொண்டார். தொழுகைக்கு பின்பு அறுத்தவர் தன் குர்பானியை நிறைவேற்றியவராவார். முஸ்லிம்களின் வழிமுறையை பேணியவராவார் என்றும் ஒரு செய்தி புகாரியில் உள்ளது.

 

எனவே ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுத பின்னரே அறுத்திடல் வேண்டும். மீறி தொழுகைக்கு முன்னர் அறுத்தால் பகரமாக வேறு ஒன்றை அறுத்திடல் வேண்டும். பெருநாள் தொழுகை தொழுத பிறகு அறுப்பதே குர்பானியாகும். மேலும் அவ்வாறு செய்வதே நபி வழியுமாகும்.

 

குர்பான் பிராணிகளை அறுக்கும்போது கூற வேண்டியவை

 

குர்பானிப் பிராணியை அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும்.

 

“நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெரிய கொம்புகளையுடைய இரண்டு ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவர்கள் தன் பாதங்களை அந்த ஆடுகளின் கழுத்தில் வைத்து மிதித்துக் கொண்டு, பிஸ்மில்லாஹ் என்று கூறி, அல்லாஹு அக்பர் என்று கூறியும் அவ்விரண்டையும் தன் கையால் அறுத்ததை நான் பார்த்தேன்”. அறிவிப்பாளர்: அனஸ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா.

 

ஒரு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸில் உள்ள வாசகத்தை குர்பானி கொடுக்கும்போது கூறுகின்றனர். ஆனால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

 

நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆடுகளை ஹஜ்ஜுப் பெருநாள் அன்று குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் நோக்கியவர்களாக, வஜ்ஜஹ்து வஜ்ஹியலில்லதீ பதரஸ்ஸமா வாத்தி வல்அர்லி ஹனீஃபன்   வமா அன மனில் முஷ்ரிகீன். இன்ன ஸலாதீ, வநுஸுகி, வ மஹ்யாய வமமாதீ ரப்பில் ஆலமீன். லா ஷரீகலஹு வபிதாலிக உமிர்து வஅன அவ்வலுல் முஸ்லிமீன். அல்லாஹும்ம மின்க-வலக அன் முஹம்மதின வ உம்மதி என்று கூறினார்கள்”. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: அபூதாவூது, பைஹகீ, இப்னுமாஜா.

 

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஹதீஸ்கலை வல்லுனர்களால் ஆட்சேபிக்கப்பட்ட முஹம்மது இப்னு இஸ்ஹாக், இப்னு இயாஷ் ஆகியோர் இடம்பெறுவதால் இந்த செய்தி பலவீனமானதாகும். எனவே இதை ஆதாரமானதாக எடுத்துக் கொள்ள இயலாது.

 

அறுத்த பிறகு துஆச் செய்தல்

 

“ஆயிஷாவே! கத்தியைக் கொண்டு வா! அதை கல்லில் நன்கு தீட்டு! என்று கூறி நபி(ஸல்) அவர்கள் ஆட்டைப் பிடித்தார்கள். அதை சாய்த்துப் படுக்க வைத்தார்கள். பின்பு அதை அறுத்தார்கள். பின்பு பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின வஆல முஹம்மதின் வமின் உம்மதி முஹம்மதின் என்று கூறி குர்பானி கொடுத்தார்கள்”. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி), நூல்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

 

பொருள்: இறைவன் பெயர் கூறி அறுக்கின்றேன். இறைவா! இதை இந்த முஹம்மதிடமிருந்தும், முஹம்மதின் குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தினரிடமிருந்து ஒப்புக் கொள்வாயாக!

 

இந்த ஹதீஸின் படி குர்பானி கொடுத்தபின் இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் சுன்னத்தாகும். மேலும் இந்த ஹதீஸிலிருந்து குர்பானி கொடுக்கும் பிராணியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுக்க வேண்டும் என்பதையும் ஆடு, மாடு போன்ற பிராணிகளை படுக்க வைத்து அறுக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.மேலும் ஒட்டகத்தை நிற்க வைத்து அறுக்க வேண்டும்.

 

“ஒரு மனிதர் ஒட்டகத்தைப் படுக்க வைத்து அறுப்பதைக் கண்ட இப்னு உமர்(ரலி) அவர்கள், அதை நீ எழுப்பி நிற்க வைத்து முஹம்மத்(ஸல்) அவர்கள் வழியில் அறுப்பீராக! என்றார்கள்.” (புகாரி, முஸ்லிம்)

 

குர்பானி பிராணியை அறுக்குமிடம்

 

அறுத்த பிறகு துஆச் செய்தல் என்ற தலைப்பின் கீழ்வரும் ஆயிஷா(ரலி) அவர்களின் ஹதீஸ் மூலம் வீட்டில் குர்பானி கொடுத்ததை விளங்க முடிகிறது. ஆனாலும் தொழுமிடத்திலேயும் குர்பானி கொடுக்கலாம்

 

“பெருநாள் தொழுத இடத்திலேயே நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு ஆகியவற்றை அறுப்பவர்களாக இருந்தனர்”. அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி), நூல்: புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா.

 

குர்பானி இறைச்சியை குர்பான் கொடுப்பவர் உண்ணலாம் சேமிக்கலாம்

 

குர்பானி கொடுப்போரில் பலர் குர்பானி கொடுத்த ஆட்டை முழுமையாக பிறருக்குக் கொடுத்து விடுவர். பிறகு தங்களின் வீட்டிற்காக வேறு ஒரு ஆட்டை குர்பானி என்ற பெயரின்றி சாதாரணமாக அறுத்துக் கொள்வர். குர்பான் கொடுக்கும் பிராணியிலிருந்து சொந்த அவசியத்திற்கு இறைச்சியை எடுக்கக் கூடாது என தவறாக விளங்கி கொண்டிருப்பதே இதன் காரணமாகும். இது போல் சிலர் குர்பான் இறைச்சியை மூன்று பங்கு போட்டு ஒரு பங்கு ஏழை, ஒரு பங்கு உறவினர், ஒரு பங்கு தமக்கு என்று கூறி பிரித்து செய்வர். இவ்வாறு செய்யவும் நிர்பந்தமில்லை. சிலர் மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை வைக்கக் கூடாது என்று கருதி உடனே அதைத் தர்மம் செய்து விடுவர். இவ்வாறு செய்ய எந்தச் சட்டமும் இல்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் மூலம் விளங்கலாம்.

 

“மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை உண்ண நபி(ஸல்) அவர்கள் தடை செய்திருந்தனர். பின்பு உண்ணுங்கள், சேமித்து வையுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள்”. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: புகாரி , முஸ்லிம், நஸயீ.

 

எனவே அறுக்கும் குர்பானி பிராணிகளிலிருந்து குர்பான் கொடுப்பவர் உண்ணலாம். தர்மம் செய்யலாம். எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.

 

உரிப்பவருக்கு குர்பானி இறைச்சி மற்றும் தோலைக் கூலியாகத் தரக் கூடாது

 

“நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகங்களை மேற்பார்வையிட என்னை நியமித்தார்கள். அதன் இறைச்சி தோல், அதன் மீது கிடந்த (கயிறு போன்ற) பொருட்களை தர்மம் செய்யுமாறும், அதை உரித்தவருக்கு அவற்றில் எதையும் கூலியாகக் கொடுக்கவும் கூடாது என்றும் கட்டளையிட்டனர். நாங்கள் அதற்குத் தனியாக கூலி கொடுப்போம்”. அறிவிப்பாளர்: அலி(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

 

குர்பானி கொடுப்பவரே அறுக்கலாம்

 

சில ஊர்களில் ஊரின் பேஷ் இமாமோ, மோதினாரோ அறுத்தால் தான் குர்பான் கொடுத்ததாகும் என பாமர முஸ்லிம்களிலிருந்து மெத்த படித்தவர்கள் வரை குர்பான் கொடுக்க பிராணியை தயார் செய்துக் கொண்டு மாலை வரை அறுக்காது காத்திருந்து எதிர்பார்க்கப்படும் இம்மாம் அல்லது மோதினார் வந்த பிறகே அறுக்கின்றனர். மார்க்கத்தில் இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. குர்பான் கொடுப்பவரே பிராணிகளை அறுத்ததற்கான ஆதாரங்கள் பல்வேறு ஹதீஸ்களில் காணமுடிகிறது. மேலே குறிப்படப்பட்டுள்ள ஆதாரமான ஹதீஸ்களில் கூட நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய குர்பான் பிராணியை தானே அறுத்த செய்திகளை காணக்கிடைக்கிறது. மேலும் இவ்வாறு இமாம் அல்லது மோதினார் தான் அறுக்க வேண்டும் என எங்கும் ஒரு செய்தியை கூட காண இயலவில்லை. எனவே “பிஸ்மில்லாஹி அல்லாஹ் அக்பர்” எனக் கூறி யார் வேண்டுமெனினும் குர்பான் பிராணியை அறுக்கலாம். அதிலும் குர்பான் கொடுப்பவரே அறுப்பின் அது மிகவும் சிறந்ததாகும்.

 

எனவே குர்பானி கொடுப்பவர் மேற்கண்ட ஒழுங்குகளை கடைபிடிப்பாரானால் குர்பானியின் பயனையும் , நன்மையையும், இறை திருப்தியையும் இன்ஷா அல்லாஹ் அடைந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை.

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

தகவல்: அபூஇப்ராஹிம் (நன்றி: தமிழ்இஸ்லாம்.காம்)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.