ஒரு சகாப்தத்தின் துவக்கம்

Share this:

உலக சமுதாயத்தின் கோரிக்கைகளை அவமதித்தும் சர்வதேச மரியாதைகளை காற்றில் பறக்கவிட்டும் இராக்கில் அமெரிக்காவின் பொம்மை அரசு கொலை செய்த இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் உடல் அவரின் பிறப்பிடமான அவுஜாவில் எவ்வித பரபரப்பும் இன்றி இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக கடைசி வரை போராடவும் இறுதியில் தீரமாக வீரமரணம் அடையவும் செய்த தங்களின் பிரியத்திற்குரியவரின் அடக்கமிடத்தை ஏக்கத்துடன் ஒருமுறை காணவும், அதில் தங்களின் வீரநாயகனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கவும் ஆயிரக்கணக்கான ஈராக் மக்கள் அவுஜா பிரதேசத்தில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். கப்ரிடத்தை பார்வையிட்டு திரும்புபவர்கள் சதாம் ஹுசனை அநியாயமாக கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவதாக சூழுரைத்து திரும்புகின்றனர்

எவ்வாறு உலக முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்தனைக்காக இறையில்லத்தில் ஒன்றுகூடியிருந்த தியாத்திருநாள் அன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென எவ்வித தகவலும் இன்றி சதாம் ஹுசைனை தூக்கிலேற்றினார்களோ அதற்கு கிஞ்சிற்றும் குறையாத விதத்தில், கடந்த ஞாயிறு அன்று ஆளரவம் குறைந்த அதிகாலை 3.30 மணிக்கு மிக மிக அமைதியாக யாருக்கும் தெரியாத விதத்தில் சதாமின் உடலை அடக்கம் செய்தனர். அடக்கம் நடக்கும் இடத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் ஆக்ரோசமான பிரதிபலிப்பிற்கும் பயந்து சதாமின் உடலை அடக்கும் இடம் குறித்த தகவலை இறுதி வரை அமெரிக்கப்படையினர் வெளிப்படுத்தாமல் வைத்திருந்தனர். 2003-ல் ஆக்ரமிப்புப்படைகள் கொலை செய்த சதாமின் மகன் உதய் மற்றும் குசய் அடக்கஸ்தலத்திற்கு அருகாமையிலேயே சதாமின் இறுதி தூக்கத்திற்குரிய இடமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதிபர்களின் இறுதிச்சடங்கில் வழங்கப்படும் எவ்வித மரியாதையையும் இராக்கை நவீனப்படுத்திய இந்த இராக்கின் சிற்பிக்கு வழங்க அமெரிக்காவின் பொம்மை அரசும், ஆக்ரமிப்புப்படைகளும் தயாராகவில்லை.

அவுஜ, பாக்தாதின் வடக்குபாகத்தில் திக்ரித் என்ற நகரில் உள்ள முக்கிய பிரதேசமாகும். பலத்த பாதுகாப்புடன் அமெரிக்க இராணுவத்தின் ஹெலிகாரில் சதாமின் உடல் திக்ரித்திற்கு கொண்டுவரப்பட்டது. ஸலாஹுத்தீன் பகுதியின் கவர்னர் முஹம்மத் அல்கைஸி மற்றும் அலிஅல்நித சதாமின் உடலை ஏற்றெடுக்க வந்திருந்தனர். ஆளரவமில்லாத நேரம் அடக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் கப்ரடக்கத்தில் மிகக்குறைந்த நபர்களே பங்குபெற்றிருந்தனர். முன்னமே திக்ரித் நகர் முழுவதையும் அமெரிக்க படைகள் சுற்றி வளைத்து பாதுகாப்பு அரணுக்குள் கொண்டுவந்திருந்ததால் சதாமின் மிக நெருங்கிய உறவினர்களுக்குக் கூட உடலை அடக்கம் செய்யும் வேளையில் கலந்து கொள்ள இயலவில்லை. பொது கூட்டங்களுக்கு உபயோகப்படுத்தியிருந்த பெரிய ஒரு ஹாலில் கப்ரை தயார் செய்து வைத்திருந்தனர். தன் தந்தையின் உடலை தனக்கு விட்டுத் தரவேண்டும் எனவும், உடலை யமனில் கப்ரடக்க அனுமதி தர வேண்டும் எனவும் கோரியிருந்த சதாமின் மகள் ரகதாவின் கோரிக்கையை முன்னரே நிராகரிக்கவும் செய்திருந்தனர்.

மரணத்தின் இறுதி நிமிடங்களில் கூட முகத்தில் புன்முறுவலையும், வாயில் இஸ்லாத்தின் ஏகத்துவ கலிமாவையும், தான் நேசித்த மண்ணின் எதிர்காலத்திற்க்கு பிரார்த்திக்கவும் செய்திருந்த அந்த வீரநாயகனின் அடக்கஸ்தலம் தங்களுக்கு மிகப்பெரிய தலைவேதனையாக தீருமோ என்ற பயத்தில் ஈராக்கின் பொம்மை அரசாங்கம் தற்போது உள்ளது இதிலிருந்து தெரிகிறது. சதாமின் நேசத்திற்குரிய ஈராக் மக்களால் அடக்கஸ்தலம் மக்கள் தரிசிக்கும் புனிதஸ்தலமாக மாறுவதற்கும், தங்களுக்கெதிரான எதிர்கால போராட்டங்களுக்கு அவ்விடம் உறைவிடமாக மாறிவிடும் என்று பயந்ததால் எவரும் அறியாத ஓரிடத்தில் அடக்குவதற்கு முதலில் தீர்மானித்திருந்தனர். எனினும் சதாமின் கோத்ரமாகிய அல்பூ நாஸிரின் வலுவான கோரிக்கையை தொடர்ந்து உடலை அவரின் பிறந்த இடத்தில் அடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தனது இறுதி நிமிடத்தில் பிரகாசமான முகத்துடன் உறுதியாக, “அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. முஹம்மத்…….” என்ற இஸ்லாத்தின் அடிநாதத்தை உச்சரிப்பதற்கு இடையில் அதனை முழுமைப்படுத்தக் கூட விடாமல் ஈவிரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்ட சதாம் என்ற போராளி சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த நாயகனாக மாறியது உலகெங்கும் பல்வேறு விதத்தில் பிரதிபலிக்கவும் தொடங்கியுள்ளது.

நரேந்திரமோடி தலைமையிலான சங்க்பரிவாரங்கள் முஸ்லிம்களை நரவேட்டையாடிய குஜராத் மாநிலத்தின் அனந்த் என்ற மாவட்டத்தின் ஹாத்கட் என்ற குறுகிய கிராமத்தில் வசிக்கும் 70 சதவீத முஸ்லிம்களில் பெரும்பாலான பெண்களும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சதாம எனப்பெயர் சூட்ட காத்திருக்கின்றனர். “சதாம் ஒரு சிங்கம். அதனாலேயே இறப்பதற்கு முன் முகத்தில் முகமூடி போடக் கூட விடாமல் தைரியமாக தூக்குக் கயிற்றை சந்தித்தார்” – இது அக்கிராமத்தில் தனக்கு பிறக்கப் போகும் ஆண்குழந்தைக்காக காத்திருக்கும் ஸைதா பானுவின் சொற்களாகும். மற்றொரு ஆண் மகவுக்காக காத்திருக்கும் ஆசிரியை இக்லாஸ் பானு, “சதாமை தூக்கிலிட்டது மிகப்பெரும் அநீதியும், தவறுமாகும். இதன் மூலம் சதாமின் நினைவுகளை உலகிலிருந்து அழிப்பதற்கு இயலாது” என்று கூறுகிறார்.

இப்பிரதிபலிப்புகள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வெளிப்படுகிறது. 1991 ல் முதல் வளைகுடா யுத்தகாலத்தில் அமெரிக்காவிற்கு பாடம் புகட்ட அமெரிக்காவின் வளர்ப்புநாடான இஸ்ரேலின் மீது அநேக ராக்கட்டுகள் வீசி இஸ்ரேலிற்கு கிலி ஏற்படுத்தியதன் மூலம் ஃபலஸ்தீனியர்களின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்த சதாம் உலகில் எவருக்கு எதிராக திரும்பியிருந்தாலும் தங்கள் சொந்த இருப்பிடத்திற்காக இஸ்ரேலுக்கு எதிராக 24 மணி நேரமும் போராட்டமே வாழ்க்கையாக கொண்டிருக்கும் ஃபலஸ்தீனியர்களுக்கு எதிராக ஒருபோதும் திரும்பியதில்லை.

இரண்டாம் இந்திஃபாதா காலத்தில் வீரமரணம் அடையும் ஃபலஸ்தீனிகளின் குடும்பங்களுக்கு தலா 25,000 டாலரும், இஸ்ரேலால் கொல்லப்படும் ஒவ்வொரு பலஸ்தீனியர்களுக்கும் தலா 10,000 டாலரும் அவர் வழங்கி அவர்களின் துயரத்தில் நீங்கா நாயகனாக பங்கு கொண்டிருந்தார். தனது மரணவேளையில் கூட “ஃபலஸ்தீன் நீண்டநாள் வாழ வேண்டும்” எனப்பிரார்த்திக்கும் அளவிற்கு சதாமின் மிகுந்த அன்பிற்குரியவர்களாக அவர்கள் இருந்த காரணத்தினாலேயே சதாமிற்கு எதிராக அனைத்து அரபு நாடுகளும் திரும்பிய பொழுதும் ஃபலஸ்தீனியர்கள் கடைசிவரை சதாமிற்கு ஆதரவாகவே இருந்தனர்.

“சதாமிற்கு ஏற்பட்ட கதிதான் அரபுபிரதேசங்களில் அமெரிக்காவிற்கு அடிவருடியாக இருக்கும் அரபுராஜாக்களுக்கும் ஏற்படும் என்றும் அதற்கு அவர்கள் தயாராக இருந்து கொள்ளட்டும் எனவும், அரபு பிரதேசங்களில் அமெரிக்கா தொடரும் குரூரமான நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இது எனவும்” பெரும்பாலான ஃபலஸ்தீனியர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேற்குலக ஊடங்கங்களால் மிகப்பெரிய சர்வாதிகாரி எனத் திரும்பத் திரும்ப கூறப்பட்டு அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு சூழலை உருவாக்கி பின்னர் தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட அமெரிக்காவின் சதாமிற்கெதிரான கூற்றுக்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவர் உயிருடன் இருக்கும் பொழுதும் பொய்த்துக் கொண்டிருந்தன; அவர் இறந்த பின்னும் அவை அனைத்தும் பொய் என்பது போன்ற தகவல்களே உலகின் எல்லா பாகங்களிலிருந்தும் கிடைக்கப்பெறுகின்றன.

ஆக்ரமிப்பாளர்களின் சிறையில் தனது இறுதி காலத்தை செலவழித்த சதாமின் இறுதி தருணங்களை அருகிலிருந்து அவதானித்த அமெரிக்க படையால் நியமிக்கப்பட்டிருந்த மருத்துவ உதவியாளரும் “சதாம மிகுந்த அன்பு உடையவர்; சாத்வீகமானவர்” என்றே கூறுகிறார். “தனக்கு வழங்கப்படும் ரொட்டியின் கடின பாகங்களை சேமித்து வைத்திருந்து அபூர்வமாக தன்னை சிறைக்கு வெளியே கொண்டு செல்லப்படும் தருணங்களில் பறவைகளுக்கு அவற்றை அளித்து மகிழும் சதாம, பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்” என்ற கருத்தை அவருடைய உடல்நிலையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட மருத்துவ உதவியாளர் ராபர்ட் எல்லிஸ் கூறுகிறார். இதனூடே ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட தன் மரண நிமிடங்களை புத்தகங்களை படித்தல், செடிகளை பராமரித்தல் போன்றவைகளின் ஊடாக சதாம் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறினார். சதாமுடன் நெருங்கிப்பழகிய பலரும் சதாம பழக இனிமையானவர் என்றும் அன்பு நிறைந்தவர் என்றும் கூற ஏற்கெனவே அவரைக் குறித்து மேற்குலக ஊடகங்கள் வழி கேள்விப்பட்டிருந்தவை அனைத்தும் மிக மோசமான அரசியல் சதியில் புனையப்பட்ட புதினங்கள் என்ற முடிவுக்கு வரவழிவகுக்கிறது.

எது எப்படியிருப்பினும் அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் மீறி 2006 ஆண்டு இறுதியில் அமெரிக்க குரூர செயல்பாடுகளின் பாகமாக நிகழ்த்தப்பட்ட சதாமின் கொலை அமெரிக்காவிற்கு வேண்டுமெனில் ஒரு சகாப்தத்தை முடித்து விட்ட திருப்தியை தரலாம். ஆனால் இந்நிகழ்வு மற்றொரு சகாப்தத்தின் துவக்கம் என்பதை வரலாற்றின் வரும் காலங்களினூடாக ஏகாதிபத்திய அரசாங்கம் அனுபவத்தில் புரிந்து கொள்ளும். அதற்கான சாத்தியக் கூறுகளே உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து எழும் எதிர்ப்புகளும், கருத்தாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.

ஆக்கம் : வளைகுடா வசந்தன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.