பிறந்த நாள் பரிசுகள் வழங்கலாமா?

ஐயம்: என் நண்பர் தன் மகனுடைய பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருக்கிறார். எனக்குச் செல்ல விருப்பமில்லை. எனினும் விழாவிற்கு அடுத்த நாள் சென்று ஏதாவது பரிசு வழங்கலாம். இல்லை எனில் நண்பரின் குடும்பத்தினருடனான உறவுகளில் விரிசல் ஏற்படலாம் என்று என் மனைவி அறிவுறுத்துகிறாள். இதைப் பற்றி தாங்கள் விளக்கம் அளிக்க முடியுமா? சில மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய அடிப்படையில் இது ஆகுமானதே என்று கூறியுள்ளதைக் கேள்விப்பட்டேன். இதற்கான பதிலை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையில் விளக்கவும். (சகோதரர் Jabeer.A.A – மின்னஞ்சல் மூலம்)

தெளிவு: பிறந்த நாள் கொண்டாடுவதற்கோ அந்நாளில் வாழ்த்து கூறுவதற்கோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எதையும் தகுந்த காரணத்தோடுதான் இஸ்லாம் அணுகும் என்ற பொதுவிதியை கருத்தில் கொள்ள வேண்டும். நட்பு முறிந்து விடும், உறவுகளில் விரிசல் ஏற்படும், குடும்பங்களில் பிளவு உண்டாகும் என்ற காரணங்களைச் சொல்லி, இஸ்லாம் அனுமதிக்காத எந்தவொரு செயலையும் ஒரு முஸ்லிம் செய்யக்கூடாது. இஸ்லாத்துக்குப் புறம்பான அனாச்சாரங்களில் – விழாக்களில் கலந்து கொள்வதும் அதற்குத் துணை போவதாகும் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

 

தூய இஸ்லாத்திற்காக நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் தங்களது குடும்பங்களைப் பிரிந்தார்கள், நட்புகளை தூக்கியெறிந்தார்கள். அந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்களாகிய நாம் இன்று, இஸ்லாத்தில் இல்லாத பிறந்த நாள் விழாவுக்குச் செல்ல காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

 

ஈமான் கொண்டவர்களே! உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன், 5:105)

 

''எம்மால் ஏவப்படாத எந்த செயலும் நிராகரிக்கப்பட வேண்டும்'' (நபிமொழி)

 

பிறந்த நாள் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என அந்தத் தேதியில் சிறப்பான வரவேற்பு, சிறு விருந்து உபசாரங்களோடு பரிசுகளும் பறிமாறப்படுகின்றன. வரவேற்பு, விருந்து உபசாரங்கள், மற்றும் அன்பளிப்புகள் இவையெல்லாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஆனால் பிறந்த நாள் என்று ஒரு அனாச்சாரத்தையொட்டி இவைகள் நடப்பது இஸ்லாத்திற்கு முரணானது.

 

அன்பளிப்பு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்வது. பிறந்தநாளில் கொடுக்கப்படும் அன்பளிப்பு, அதே பிறந்த நாளை நாம் கொண்டாடும் பொழுது, நாம் வழங்கிய அன்பளிப்புத் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. வருடா வருடம் குறிப்பிட்டத் தேதியில் அன்பளிப்பு வழங்குவது கட்டாயக் கடமையாகி விடுகிறது. நம் பிறந்த நாள் விழாவுக்கு அவர் பரிசளித்திருக்கிறார், அவர் மகன் பிறந்த நாளைக்கு நாம் பரிசளிக்க வேண்டும் என்று இந்த அனாச்சாரம் சங்கிலித் தொடராக நீண்டு விட இது வாய்ப்பாக அமைகிறது.

 

இஸ்லாத்தில் அங்கீகாரமில்லாத பிறந்த நாள் விழா போன்ற நவீன செயல்பாடுகளிலிருந்து முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும். அறியாதவர்கள் பிறந்த நாள் விழாக்களைச் செயல்படுத்தினால், அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதிலிருந்து அவர்கள் தவிர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். தவிர்க்கவில்லையெனில் அவ்விழாக்களில் கலந்து கொள்ளாமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

 

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன், 66:6)

 

பிறந்த தின வாழ்த்து கலாச்சாரம் என்பதே மேற்கத்திய பிற மதத்தவர்களுடைய கலாச்சாரம்தான். அந்த கலாச்சாரங்களை ஒரு முஸ்லிம் எப்படி தம் இல்லங்களில் நடைமுறைப்படுத்த முடியும்! உள்ளங்களில் இடங்கொடுக்க முடியும்!! பிறந்த நாள் நிகழ்ச்சி என்ற பெயரில் வீடுகளில் கேக் வெட்டி பிஞ்சு உள்ளங்களில் நாமே வேற்றுக் கலாச்சாரத்தை விதைத்துக் கொண்டிருக்கிறோம்.

 

எவர் ஒருவர் பிறமதக் கலாச்சாரத்தை பின்பற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அபூஹூரைரா ரலி – அபூதாவூத்)

 

எத்தகைய சமாதானம் கூறியும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்ற பிற மதக் கலாச்சாரங்களை அனுமதிக்க முடியாது என்பதை இந்த நபிமொழியின் கருத்தை ஆழமாக சிந்திக்கும்போது விளங்கலாம்.

 

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.