இதுதான் போலீஸ் …!

துபை: துபை போலீசார் சிறையில் இருந்த இலங்கையைச் சேர்ந்த கைதி ஒருவரை விடுதலை செய்து அவரை அவருடைய 4 வயது மகளுடன் சேர்த்து அழகு பார்த்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் துபையில் தன் பிலிப்பைன்ஸ் நாட்டு மனைவி மற்றும் 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கார் கழுவி வந்த அந்த நபர் தான் பணிபுரிந்த நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவருடைய மனைவி, மகளை அருகில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு துபையில் இருந்து கிளம்பிவிட்டார். இதையடுத்து தாய், தந்தை இல்லாமல் வாடிய சிறுமியின் நிலை பற்றி அந்த இலங்கை பெண் துபைய் போலீசாரின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அவர்கள் இது குறித்து போலீசாரின் மனித உரிமை பிரிவிடம் தெரிவித்தனர். அவர்கள் அந்த இலங்கை நபர் பணியாற்றிய நிறுவனத்திடம் பேசி கடனைத் தாங்களே திருப்பிக் கொடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையை விட்டு வெளியே வந்த அவரை பார்த்த சிறுமி ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுததை பார்த்து போலீசாரின் கண்ணிலும் நீர்த்துளிகள்!

தண்டனை அனுபவித்த ஒருவர் தண்டனை காலம் முடிந்த பிறகு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். இதனால் போலீசார் அந்த நபரையும், அவருடைய மகளையும் தங்கள் செலவில் இலங்கைக்கு அனுப்பி வைத்ததுடன் செலவுக்கும் பணம் கொடுத்தனர்.

நன்றி : ஒன் இண்டியா