திருவனந்தபுரம் : இந்திய நர்சுகளிடம் கண்ணியமாகவும், அவர்களுக்கு எந்த தீங்கும் இழைக்காமல் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டவர்களை “தீவிரவாதிகள்” என அழைப்பது தவறாகும்‘ என்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறினார்.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கித்தவித்த 46 இந்திய நர்சுகள் 20 நாட்களுக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி இவர்கள் அனைவரும் விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் 45 பேர் கேரளாவைச் சேர்ந்த நர்சுகள். இவர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேரள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று கேரள சட்டபையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் இது தொடர்பாக கூறியது:
ஈராக்கில் சிக்கித் தவித்த நர்சுகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டது பாராட்டத்தக்கது. இந்திய நர்சுகளிடம் கண்ணியத்துடனும், அவர்களுக்கு எந்தவித தீங்கும் இழைக்காமல் மனிதாபிமானத்துடனும் நடந்து கொண்டவர்களை தீவிரவாதிகள் என அழைக்கக் கூடாது. அவர்களை போராளிகள் என்று தான் அழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினகரன் (08-07-2014)