இந்துத்துவ அரிப்புக்கு இராக் சொறி மருந்து

Share this:

ல்லாத பேரழிவு ஆயுதங்களின் பெயரைச் சொல்லி இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, அந்நாட்டைச் சூறையாடிக் கொலைத் தாண்டவம் ஆடித் தனக்கேற்றபடி தலையாட்டும் நூரி-அல்-மாலிக்கி தலைமையில் தனது பொம்மை அரசை நிறுவியது.

பின்னர் சிலகாலம் அதன் எண்ணெய் வளத்தைச் சுரண்டிவிட்டு இராக்கிலிருந்து முழுமையாகத் தனது ராணுவத் துருப்புகளை விலக்கிக் கொண்டது.

இதனிடையே அரபு வசந்தம்’ என்ற புரட்சி மூலம் துனீஷியா, எகிப்து மற்றும் லிபியாவை ஆண்டு வந்த சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர்.

இதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கு நாடான ஏமனிலும் அரபு வசந்தத்தின் தாக்கத்தால் புரட்சி வெடித்தது. ஏமன் அதிபராக 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்த அலி அப்துல்லாஹ் ஸாலெஹ், தேர்தலில் போட்டியிடாமல் பதவியைத் துறந்தார். ஸிரியாவிலும் மக்கள் புரட்சி வெடித்தபோது, ரஷ்யா உதவியுடன் ஸிரியா அதிபர் பஸ்ஸார் அல் அஸத், புரட்சியாளர்களை மட்டுமின்றிப் பொதுமக்களையும் கொன்றொழித்தார். எனினும், ஸிரிய அரசுக்கு எதிரான புரட்சியை அதிபர் பஸ்ஸாரால் அடக்கமுடியவில்லை. சவூதி உள்ளிட்ட ஸிரியாவின் அண்மை நாடுகள், ராணுவத்திற்கு எதிராகப் போராடி வரும் புரட்சிப் படைகளுக்கு உதவியதும் ஸிரியாவில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் மறைமுகமாக ஸிரிய புரட்சிப் படைகளுக்கு உதவியதும் காரணமாகச் சொல்லப்பட்டன.

இவ்வாறு ஸிரிய ராணுவத்திற்கு எதிராகப் போராடி வந்த புரட்சியாளார்கள், இராக்கின் ஷிஆ ஆட்சியாளரால் அங்குள்ள சுன்னத்தி முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதற்கும் தீர்வுகாணும் நோக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் ஒரு போராளிக் குழுவை உருவாக்கி ஸிரியாவில் கைப்பற்றிய சில பகுதிகளையும் ஈராக்கின் சுன்னத்தி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பலபகுதிகளையும் இணைத்து ISLAMIC STATE  என்ற தனிநாட்டை அறிவித்தனர். [முன்பு இவர்கள் Islamic State of Iraq and the Levant – ISIL என்றும் அழைக்கப்பட்டனர்]

அபூபக்கர் அல் பக்தாதி என்ற இராக் புரட்சிப் படைத் தளபதியை அதன் ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்தனர்.

இந்த ஐஸிஸ் போராட்டக் குழுவில், இராக் முன்னாள் அதிபர் சத்தாம் ஹுசைனின் ஆதரவாளர்களும் இணைந்ததால் சுன்னத்தி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில், இராக் ராணுவத்தினர் விரட்டி அடிக்கப்பட்டனர். பிடிபட்ட ராணுவத்தினர் பல்வேறு போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டனர்.

ஸிரியாவிலும் சரி, இராக்கிலும் சரி ஐஸிஸ் படையினருக்கு மக்கள் ஆதரவு பெருகியதற்கு அவர்கள் சுன்னத்தி முஸ்லிம்கள் என்பதோடு, அமெரிக்க ராணுவம் தற்போதைய இராக் ராணுவம் மற்றும் ஸிரிய ராணுவத்தால் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளானவர்கள் என்பதும் காரணமாகும். மட்டுமின்றி, உலக முஸ்லிம்களின்

நெடுநாளைய எதிர்பார்ப்பான கிலாபத் (இஸ்லாமிய குடியாட்சி) இராக் மற்றும் ஸிரியாவில் கைப்பற்றிய புதிய நாட்டிலிருந்து தொடங்கி இருப்பதாக அறிவித்தது முஸ்லிம்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் ஒருசாராரிடம் ஐஸிஸ் குறித்த ஐயத்தையும் ஏற்படுத்தியது.

அதே சமயம், ஐஸிஸின் தாக்குதல் வீடியோக்களில் இருக்கும் வன்முறைக் காட்சிகளால் சிலருக்கு அவர்களின் செய்கைகள் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன.

உண்மையான போராளிகள் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த ஐயத்திலும் நியாயமுண்டு. அவர்களின் போராட்டத்திலிருக்கும் நியாயங்கள், இத்தகைய வன்முறைகள் மூலம் நீர்த்துப் போகின்றன. அவர்கள் பெயரால் அமெரிக்காவோ அல்லது வேறுயாருமோகூட இதைச் செய்து இருக்கலாம். அமெரிக்கா ஐஸீஸை எதிர்க்காமலும், ஈராக்கிற்கு ஆதரவளிக்காமலும் புதிய அரசையே வலியுறுத்துவதால், அப்படி ஓர் அரசு அமையும்பட்சத்தில் ஐஸிஸை அமெரிக்கா தாக்கக்கூடும்.

ஏற்கனவே அமெரிக்காவுக்கு அடங்காத ஈரான் மற்றும் ஈரானின் நேசநாடான ஸிரியா இவற்றுடன் இராக்கும் ஒன்றிணைந்தால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி அமெரிக்காவை நம்பியிருக்கும் அரபு நாடுகளுக்கும் தலைவலியாகும் என்பதாலேயே ஐஸிஸை வைத்து அமெரிக்கா பூச்சாண்டி காட்டி வருகிறது. இப்படியாக மத்திய கிழக்கு நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும்போது, ஐஸிஸ் படையினர் சவூதி அரேபியா நோக்கி முன்னேறுவதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் சவூதி எல்லையருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராக் துருப்புகளை நூரி அல் மாலிக்கி வாபஸ் பெற்றதால், ஐஸிஸ் படையினர் சவூதியின் அரார் பகுதியை நோக்கி முன்னேறுவதாகத் தகவல் கிளம்பியது. முன்னெச்சரிக்கையாக சவூதி அரசு தனது எல்லையில் படைகளைக் குவித்தது.

அதுவரை ஐஸிஸ் படைகளுக்கு சவூதி உள்ளிட்ட சில அரபு நாடுகள் உதவுவதாக இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கி கருத்துத் தெரிவித்திருந்தபோது சவூதி மறுத்து வந்தது. இந்தச் சூழலில் ஐஸிஸ் படையினர் சவூதி மண்ணிலும் கால்பதிக்கத் திட்டமீட்டிருப்பதாகத் தகவல் பரவியதன் மூலம் சவூதிக்கும் ஐஸிஸுக்குமிடையே இருப்பதாகச் சொல்லப்பட்ட தொடர்பு குறித்த வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளன.

அபூபக்கர் அல் பக்தாதிஐஸிஸ் படையினரின் திடீர் எழுச்சி, முஸ்லிம்களிடம் வரவேற்பைப் பெற்றததற்கு அவர்கள் அமெரிக்க ஆதரவு அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததும் காரணம் எனலாம். இராக்கில் அமெரிக்க ஆதரவுப் படைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் திருப்பியடிக்கும்போது சாமானியர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி கலந்த எதிர்பார்ப்பே ஐஸிஸ் குறித்த முஸ்லிம்களின் வெளிப்படையான ஆதரவுக்குக் காரணம். சினிமாவில்கூட, பாதிக்கப்பட்ட கதாநாயகன் திருப்பித் தாக்குவதை வெகுஜன மக்கள் கைதட்டி ரசிக்கும்போது, உண்மையிலேயே அமெரிக்க அடக்குமுறைகளால் துவண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஐஸிஸின் பதிலடிகள் ஆறுதலைக் கொடுத்த போதும், அவர்கள் பெயரில் உலா வரும் சில வன்முறை வீடியோக்கள் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
 
அதுவரை வேடிக்கை பார்த்து வந்த முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று களம் இறங்கின. யூடூபிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிடப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மையமாக வைத்தும், தங்கள் கற்பனைகளின்படியும் ஐஸிஸ் படையினருக்கு எதிராகப் பரபரப்புச் செய்திகளை அவை வெளியிட்டு மகிழ்ந்தன. இணையத்தில் முன்பு எப்போதோ வெளியானதொரு வரைபடத்தையும்கூட விட்டுவைக்காமல் ஐஸிஸ் படையினர்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை ஐந்தாண்டுகளில் கைப்பற்றப் போவதாதக் அறிவுக்கு ஒவ்வாத செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

கண்முன்னே நடந்த குஜராத், அஸ்ஸாம், முஸாப்பர் நகர் இனச் சுத்திகரிப்புகளின்போது கருத்துத் துறவறம் பூண்டிருந்த சில தமிழ் பதிவர்கள் கூட இராக் ராணுவத்திற்கு எதிரான ஐஸிஸின் நடவடிக்கைகளை வைத்து மனிதாபிமான நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இராக்கில் பணியாயற்றிய இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் 46 செவிலியர்களும் ஐஸிஸ் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்ததால், இந்தியாவில் ஐஸிஸ் குறித்த செய்திகளில் முடிந்தவரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்மத்தையும் பரப்பி வந்தனர். அதுவரை பர்மா, இலங்கை, அஸ்ஸாம், முஸாப்பர்நகர் என அடுத்தடுத்து முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாக்கபட்டு இருந்ததால் துவண்டிருந்த முஸ்லிம்களுக்கு ஐஸிஸின் வரவு சற்று ஆறுதலாக இருந்தது. ஐஸிஸ் மீதான முஸ்லிம்களின் இந்த நல்லெண்ணத்தையும் தீவிரவாத ஆதரவளிக்கிறார்கள் பாருங்கள் என்று திரிப்பதற்கு, செவிலியர் மற்றும் தொழிலாளர்களின் கடத்தல் சம்பவம் ஊடகங்களுக்கு வசதியாகிப் போனது.
 
கண்முன் நடந்த கொடூரங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு எங்கோ நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்தி பரப்பி மனசாட்சி இன்றி நீலிக்கண்ணீர் வடித்தும் அதைச் சாக்காக வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சாடியும் தம் கடமையைச் செய்தன சில ஊடகங்கள்.

கண்முன்னே நடந்த குஜராத், அஸ்ஸாம், முஸாப்பர் நகர் இனச் சுத்திகரிப்புகளின்போது கருத்துத் துறவறம் பூண்டிருந்த சில தமிழ் பதிவர்கள் கூட இராக் ராணுவத்திற்கு எதிரான ஐஸிஸின் நடவடிக்கைகளை வைத்து மனிதாபிமான நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அரபு நாடுகளுக்கும் அவற்றின் தலைநகரங்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது தமிழக ஊடகங்களுக்கு என்றால் நம்புவீர்களா?. அந்த லட்சணத்தில் தாம் அதன் செய்தியாளர்களும் உள்ளனர். உதாரணமாக சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் துபாயில் தலைவெட்டு என்று வெட்கமின்றிச் செய்தி வெளியிடுவர். சிலநேரங்களில் துபாய் ஆட்சியாளரை சவூதி மன்னராகக் குறிப்பிட்டவும் செய்வர். இவர்கள்தாம் இராக் செய்திகளைத் தப்பும் தவறுமாக மட்டுமின்றி, அதில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வளர்க்கும் வகையில் செய்தியாக்கி மகிழ்ந்தனர்.

வளைகுடாவில் பெட்ரோலுக்காக அமெரிக்கா நடத்தும் வழக்கமான யுத்தம் என்பதில் பழகிப்போயிருந்த நிலையில், இந்தியச் செவிலியர்கள் இராக் போராட்டக் குழுவினரால் கடத்தப்பட்டதாகச் செய்தி வெளியானதும் அனைத்து இந்திய ஊடகங்களும் பரபரப்படைந்தன. இராக்கில் கடத்தப்பட்ட செவிலியர்களுள் சிலரை ஐஸிஸ் போராளிகள் கொன்றுவிட்டதாகவும், துப்பாக்கி முனையில் பலவந்தப்படுத்தி, போர்க்களத்தில் காயம்பட்ட அவர்களது வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க வற்புறுத்துவதாகவும், நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கையை செவிலியர்கள் இழந்து விட்டதாகவும், இந்திய அரசாங்கம் சவப்பெட்டிகளையாவது உடனடியாக அனுப்பி வைக்கட்டும் என்று செவிலியர்கள் புலம்புவதாகவும் பரபரப்புக்காக நொடிக்கொரு செய்தி வெளியிட்டு மகிழ்ந்தனர்.
 
உண்மையில் நடந்ததென்னவோ செவிலியர்கள் பணியாற்றிய மருத்துவமனை மட்டுமின்றி முழுநகரமும் ஐஸிஸ் படையினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதால், தோல்வியுற்ற இராக் படையினர் ஆத்திரத்தில் மருத்துவ மனையைத் தாக்கினால், தங்களது கட்டுப்பாட்டிலிருக்கும் மருத்துவ மனையில் இந்திய செவிலியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ஐஸிஸ் படையினர் செவிலியர்களைத் தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

தூத்துக்குடி நர்ஸ் மோனிகா சிறப்புப் பேட்டி https://www.facebook.com/photo.php?v=753752797996189

மேலும், கடந்த பிப்ரவரி 2014 முதலே அதாவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு முன்பிருந்தே இராக் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருந்தது. இந்நிலையில் ஊதியம் கேட்டவர்களைக் கொன்றுவிட்டுப் பழியை ஐஸிஸ்மீது போடவும் வாய்ப்பிருந்தது. இதனை உணர்ந்தே இந்தியச் செவிலியர்களைத் தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருந்தனர். செவிலியர்கள் விரும்பினால் கூடுதல் ஊதியம் தரப்படும் என்றும் தங்கள் பகுதியில் தொடர்ந்து பணியாற்றும்படியும் கோரினர். எனினும், அவர்கள் தாய்நாடு திரும்பவே விருப்பம் தெரிவித்ததால், அம்முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பாகக் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

http://static.dnaindia.com/sites/default/files/2014/07/05/248162-untitled-1.jpg

“They didn’t do anything, they didn’t disturb us and they didn’t harm anyone… They talked nicely,”

நாடு திரும்பிய செவிலியர்கள், இராக்கில் தாங்கள் துளிகூட துன்புறுத்தப்படவில்லை என்பதையும், கண்ணியமாகவே நடத்தப்பட்டோம் என்பதையும் சொன்னபோது, அதுவரை விஷம் கக்கிவந்த ஊடகங்கள் இந்தச் செய்திகளில் அவற்றை முன்னிலைப் படுத்தவில்லை. “போராளிகள் நல்லவர்கள்” என டிவி பேட்டிகளில் நர்ஸ்கள் ஒட்டு மொத்தமாகச் சொல்வதைக் கேட்ட பிறகும் தீவிரவாதிகள் என்று அழுத்தி எழுதி வருகின்றனர். இதுதான் நம்நாட்டு ஊடகங்களின் தர்மம்!
 
இராக்கில் உள்நாட்டுக் கலவரம் நடந்தால் என்ன? அங்குள்ள ஷிஆ – சுன்னத்தி அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டால் என்ன? நம்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ள போதும் அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இராக் நிலவரத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? 46 உயிர்கள் பலியாகிவிடக்கூடாது என்பதுதான் இவர்களின் கவலை என்றால் சென்னையில் இடிந்த கட்டிடத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதைவிட இராக் விசயத்தை முன்னிலைப் படுத்தியதன் நோக்கம் என்ன? 61 ஐ விட 46 ஐ முன்னிலைப்படுத்தி இராக் செய்தியைப் பரபரப்பாக்கியுதன் மர்மம் என்ன? இஸ்லாமோஃபோபியா என்ற இஸ்லாம் குறித்த அதீத அச்சம்தானே?

சில தீவிர இந்துத்துவ வெறியூட்டும் அமைப்புகளால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைப் பெரும்பான்மை இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் ஏற்கவில்லை. ஆகவேதான் 2004 முதல் 2014 வரை இந்துத்துவா அரசியல் கட்சிகளுக்கு மரணஅடி கொடுத்து முடக்கி வைத்ததோடு காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினர். (காங்கிரஸின் தொடர்ச்சியான ஊழல்களில் வெறுப்புற்றும் தேர்தல்கால ஊடக வணிகச் சூழ்ச்சிகளை அறியாமலும் மாற்றம் வேண்டிய மக்களுக்கு வேறு உருப்படியான தெரிவு இல்லாததாலும் தற்போதைய பாஜக அரசை 31% வாக்காளர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளது இந்தியாவின் இன்றைய தலையெழுத்து)
 
சிறுபான்மையினருக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் சங்பரிவாரங்களை பாஜகவும், காங்கிரஸும் பாதுகாத்தும், கண்டுகொள்ளாமலும் இருந்து மாறிமாறி அரசியல் லாபம் அடைந்து வருகின்றன.

இவ்வாறாக, முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்டு செய்யப்படும் அநீதிகளை நியாயப்படுத்துவதற்கு, முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்யும் தவறுகளைப் பூதாகரப்படுத்தி “பார்த்தீர்களா? இவர்கள் மீதான தாக்குதல்கள் சரிதான்!” என்ற மனநிலையை மக்களுக்கு உருவாக்கவே கண்முன் நடக்கும் கொடுமைகளைப் பெரிது படுத்தாமலும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளைப் பரபரப்பூட்டியும் செய்தி வெளியிட்டு அரிப்பைத் தீர்த்துக் கொள்கின்றனர். அவ்வகையில்தான், இந்துத்துவ நமைச்சலுக்கு இராக்கிலிருந்து சொறிமருந்து தடவி சுகம் கண்டுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.

N. ஜமாலுதீன்Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.