போப்புடன் பகிரங்க விவாதத்திற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அழைப்பு!

ரியாத்: போப் பெனடிக்ட் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைசாந்திய மன்னனின் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் களங்கம் கற்பிக்கும் கூற்றை மீண்டும் மொழிந்து, உலக முஸ்லிம்களின் கடும் கண்டணத்துக்கு ஆளாகி இருப்பது தெரிந்ததே. சமீபத்தில் அவர் 20 இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகளைத் தனது ரோம் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். ஆனால் இந்த உரையில் அவர் முறையான மன்னிப்பு எதுவும் கோரவில்லை.

இது குறித்து பிரபல இஸ்லாமியப் பிரச்சாரகரான டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் குறிப்பிடும்போது, போப்பின் நடவடிக்கைகளைப் பார்த்தால் அவரின் இந்தக் கருத்து வாய் தவறிச் சொன்னவை போல இல்லை. தான் என்ன பேசுகிறோம் எனத் தெளிவாகத் தெரிந்து கொண்டே போப் இந்த உரையை நிகழ்த்தியுள்ளார் எனக் கூறினார்.

போப்பின் தற்போதைய வருத்தம் தெரிவித்தல் வெறும் கண்துடைப்பு தான் என்றும், பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அவர் உண்மையில் மன்னிப்பு எதுவும் கோராமல் மேலும் முஸ்லிம்களை அவமானப் படுத்துவதில் தான் குறியாக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

போப் தற்கால நவீனப் பழைமைவாதி (neo-conservative) ஜார்ஜ் புஷ் போன்றே பேசிவருகிறார். உண்மையில் போப் கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்களுக்கிடையேயான மனம் திறந்த உரையாடலில் ஆர்வம் கொண்டிருக்கிறார் எனில், தாம் அப்படியொரு உரையாடலுக்கும் விவாதத்துக்கும் எப்போதும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இப்படி ஒரு உரையாடல் பொது மக்கள் பார்க்கும் வண்ணம் பகிரங்க விவாதமாக இருக்க வேண்டும் என்றும், இந்த உரையாடலில் குர்ஆன், பைபிள் இரண்டையும் குறித்து விவாதிக்கத் தான் ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மூடப்பட்ட அறைக்குள் இப்படி விவாதங்கள் நடைபெறுவது தனக்கு ஏற்புடையதன்று எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமக்கு இத்தாலிய நுழைவு அனுமதி வழங்கினால், தனது சொந்த செலவிலேயே ரோம் மற்றும் வாட்டிகன் நகருக்குச் சென்று இந்த விவாதத்தில் தான் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார். இப்படி விவாதத்தில் இரு தரப்பினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர் நினைவூட்டினார்.

மேற்கண்டவாறு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ரியாத் நகரிலுள்ள இலங்கைத் தூதரக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.