நாடாளுமன்றத் தாக்குதல் – அஃப்ஸலின் கடிதம்!

புது டெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீர் சிறப்பு அதிரடிப் படை (Special Task Force) அதிகாரிகள் சதி செய்து தன்னை வலையில் வீழ்த்தியதாக மரணதண்டனையை எதிர்பார்த்து நாட்களை கடத்தும் முஹம்மத் அஃப்ஸல் குரு கூறினார். சிறைச்சாலையில் இருந்து தனக்காக வாதாட முன் வந்த உச்சநீதிமன்ற முதிர்ந்த வழக்கறிஞர் சுஷீல் குமாருக்கு அனுப்பிய கடிதத்தில், ஸ்பெஷல் போலீஸின் துணை கமிஷ்னர் ரஜ்பீர் சிங் மிரட்டியும், அடித்தும் தன்னிடம் இருந்து வாக்குமூலம் எழுதி வாங்கினார் என்று அஃப்ஸல் கூறியுள்ளார்.

தனக்கெதிராக தீர்ப்பு கூறிய சிறப்பு பொடா நீதிமன்றம், காவல் துறை மற்றும் பத்திரிக்கைகளின் நெருக்குதலுக்கு உள்ளாகி தனக்கு மரணதண்டனை விதித்ததாக அக்கடிதத்தில் அஃப்ஸல் தெரிவித்துள்ளார். ஆறு பக்கங்கள் அடங்கிய அக்கடிதத்தை நேற்று வழக்கறிஞர் பத்திரிக்கைகளுக்கு அளித்தார்.

 

1990 முதல் 96 வரை டெல்லி பல்கலைகழக மாணவராக இருந்த அஃப்ஸல் JKLF உறுப்பினராக இருந்ததாக கடிதத்தில் ஒப்புக் கொள்கிறார். அதன் பிறகு அதிகாரிகள் முன்பு சரணடைந்ததாகவும், 97-98 காலங்களில் ஸோப்பூரில் ஒரு மருந்து கடை நடத்திக்கொண்டிருந்த தன்னை காவல்துறைக்குத் துப்புக் கொடுப்பவர்கள் (Informers) பணத்திற்காகத் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் அதில் அவர் எழுதியுள்ளார். மேலும், சரணடைந்த போராளிகளுக்கு அரசுப்பணி எதுவும் கிடைக்காது என்பதை அறிந்ததால் தான் வியாபாரம் தொடங்கியதாகவும், 98 முதல் 2000 வரையுள்ள காலங்களில் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை துப்புக் கொடுப்பவர்களுக்கு நிரந்தரமாக கொடுப்பதற்கு தான் நிர்பந்திக்கபட்டதாகவும் தெரிவிக்கிறார்.

 

ஒருமுறை STF காவலர் ஒருவர் தான் கடைக்கு செல்லும் வழியில் வைத்து பிடித்துக் கொண்டு போய் இராணுவ முகாமில் வைத்து மிருகத்தனமாக தாக்கியதையும் அஃப்ஸல் கடிதத்தில் நினைவுபடுத்துகிறார். துணைக் கண்காணிப்பாளர் (DSP) வினய் குப்தாவின் தலைமையிலுள்ள குழு கடுமையான குளிர்ந்த நீரில் முகத்தை அழுத்தி மூழ்கவைத்தும், உடல்பாகங்களில் மிளகு தேய்த்தல், மர்ம உறுப்புகளில் சித்திரவதை செய்தல் தொடங்கி பல விதமான சித்திரவதைக்குள்ளாக்கினர். 1,00,000 ரூபாய் தரவில்லை எனில் ஆயுத கடத்தல் வழக்கு சுமத்துவோம் என போலீஸ் குழு மிரட்டினர் என்றும், முதலில் சம்மதிக்காத தான் சித்திரவதை சகிக்கமுடியாமல் கடைசியில் தொகை கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும், தன் மனைவியின் நகைகளும் அதற்கு இரு வாரங்களுக்கு முன் புதிதாக வாங்கியிருந்த  ஸ்கூட்டரும் விற்றுத் தொகை கொடுத்த பின்னரே இராணுவ முகாமில் இருந்து தன்னை விடுவித்ததாகவும் சொல்கிறார்.ந்த முகாமில் பழக்கமான தாரிக், STF உடன் அனுசரித்து செல்வது தான் அமைதியாக வாழ்வதற்கு நல்லது என்று அஃப்ஸலிடம் கூறியதாகவும் சொல்கிறார்.

 

அன்று முதல் தான் STF உடன் சேர்ந்து செயல்பட்டு வந்ததாகவும் அஃப்ஸல் கடிதத்தில் கூறினார். புக்ஹாமில் தனக்கு பழக்கமுள்ள அல்தாஃப் ஹுசைன் அறிமுகப்படுத்தித் தந்த DSP திரவீந்தர் சிங்குடன் டெல்லிக்கு போனதாகவும், தன்னுடைய வாடகை வீட்டைத் தயாராக்கிக் கொடுத்ததாகவும், அஃப்ஸல் அக்கடிதத்தில் கூறுகிறார்.

 

மேலும் அவர் திரும்ப வந்த தன்னை ஸ்ரீநகர் பேருந்து நிலையத்தில் வைத்து STF கைது செய்து முதலில் புறநகர் காவல்நிலையத்திற்கும் பின்னர் டெல்லியில் STF தலைமையகத்திற்கும் (Head Quarters) கொண்டு வந்ததாகவும், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தன்னையும் சேர்ப்பதாக கூறிய STF காவல் உதவி ஆணையர் (ACP) ரஜ்பீர் சிங் தன்னிடம் SAR கீலானி, சௌகத் ஹுசைன் குரு, மனைவி அஃப்ஸான் போன்றவர்களுக்கு எதிராக வாக்குமூலம் தர நிர்பந்தித்ததாகவும் இதற்குச் சம்மதிக்கவில்லை எனில் தன் குடும்பம் நிம்மதியாக வாழ விடமாட்டோம் என மிரட்டியதாகவும், சில நாட்களுக்குப் பின்னர் தன்னை கைகள் கட்டிய நிலையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தியதாகவும், அங்கு வைத்து ஆஜ்தக் நிருபர் கீலானியைக் குறித்து கேட்டபோது அவர் நிரபராதி என்று தாம் பதில் கூறியதாகவும், இதைக் கேட்டவுடன் கோபமாக எழுந்த ரஜ்பீர் சிங், கீலானியைக் குறித்து ஒன்றும் பேசக்கூடாது என கட்டளை இட்டதாகவும் தெரிவிக்கிறார்.

 

இதற்குப்பிறகு இவ்வழக்கின் எந்த ஒரு நிலையிலும் தன் பக்கம் உள்ள விளக்கம் கொடுக்க அனுமதி தரவில்லை. பணம் கேட்டு  பொய்வழக்கில் தன்னை சிக்கவைக்க முயன்ற புறநகர் காவல்நிலையத்தில் உள்ள ஒரு பணியாளனும் சிறப்பு பொடா நீதிமன்றத்தில் தனக்கெதிராக வாக்குமூலம் தர வந்திருந்திருந்ததாக அஃப்ஸல் கூறியுள்ளார்.

 

விசாரணைக்கு இடையில் இந்தப் பணியாளன் கஷ்மீரி மொழியில் "அஃப்ஸலின் குடும்பத்திற்கு எவ்விதத் தொல்லையும் இல்லை" என்று கூறியதாகவும், இது அப்பட்டமான ஒரு மிரட்டலாகத் தான் இருந்தது. விசாரணையின் போது அஃப்ஸலின் வாயை மூடுவதற்கான தந்திரம்தான் இது எனவும், குடும்பத்தின் பாதுகாவலை நினைத்து தான் பலியாடு ஆனதாக அஃப்ஸல் அக்கடிதத்தில் கூறுகிறார்.

 

வழக்கில் இவருக்காக வாதிட்ட மனித உரிமை கழகத்தினராக புகழப்படும் வழக்கறிஞர் விசாரணைக்கிடையில் தூக்கில் கொல்லப் படுவதற்கு பதில் நஞ்சு வைத்து கொல்லப்படவே தான் விரும்புவதாக அஃப்ஸல் கூறியதாக நீதிபதியிடம் கூறியிருந்தார்.

 

தனக்காக வாதிட வந்த இந்த வழக்கறிஞர் தான் அறிந்து தன் சம்மதத்துடன் நீதிமன்றம் வந்தவரல்ல என்றும் வெளிப்படுத்தினார். இவ்வளவு காலம்கடந்தபிறகாவது தனக்காக வாதிட முன்வந்த சுஷீல் குமாருக்கு நன்றி கூறிய அஃப்ஸல் சத்தியம் வெல்லட்டும் என்று கூறிக் கொண்டு கடிதத்தை முடித்திருந்தார்.

 

இதற்கிடையே பிரபல மனித உரிமை ஆர்வலர் அருந்ததி ராய் இவருக்கு விதிக்கப் பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடி வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திரு தொல். திருமாவளவனும் குடியரசுத் தலைவருக்கு அஃப்ஸலுக்கான தூக்கு தண்டனையை விலக்கிக் கொள்ளுமாறு கடிதம் எழுதியுள்ளார்.

 

குறிப்பு: இந்திய இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்க இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களும் அவர்களுக்குத் துணை போனவர்களும் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான் என்றும் அவர்கள் உயர்ந்த பட்ச அளவில் தண்டிக்கப் பட வேண்டும் என்பதில் சத்தியமார்க்கம்.காம் உறுதியாக உள்ளது. இந்தக் கடிதம் நாம் அறிந்த அளவில் எந்த ஒரு பத்திரிகையிலோ இணையதளத்திலோ வெளிவரவில்லை. இது திரு.முஹம்மது அஃப்ஸலின் வாதத்தைப் பதிவு செய்வதற்காக இங்கு பதிப்பிக்கப் படுகிறதே அன்றி நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய எவரின் செயலையும் நியாயப்படுத்த அன்று என்பதை எமது வருகையாளர்களுக்கு அறியத் தருகிறோம்.

 

இஸ்லாம் சில குற்றங்களுக்குத் தண்டனையாகக் கூறும் மரணதண்டனைகளைக் காட்டுமிராண்டித் தனமானது என மேம்போக்காக விமர்சிக்கும் பல போலி முற்போக்குவாதிகளும் இந்த வழக்கைப் பொறுத்த வரையில் அஃப்ஸலுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் ஏகோபித்த கருத்துடன் முழங்கி வருவதும் கவனிக்கத்தக்கது.