பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுவது!

ஒரு பக்கம் அமைதி பேச்சு, மறு பக்கம் சட்டமீறல் குடியேற்றம் – இஸ்ரேலின் கேவல செயல்பாடு!

சமாதான பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கும் பொழுதே சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு இஸ்ரேல் புதிய குடியேற்றங்களை பலஸ்தீனில் நிறுவி வருகின்றது.

முஸ்லிம்களின் மூன்றாவது புனித இடமான பைத்துல் முகத்தஸ் இருக்கும் கிழக்கு ஜெருசலேமில் மேலும் 600 யூத குடியேற்றங்கள் உருவாக்குவதற்கான அனுமதியை இஸ்ரேல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்க செயலாளர் கோண்டலீசா ரைஸ் தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தை முடிந்த மூன்று மணி நேரங்களில் இஸ்ரேல் இந்த அனுமதி உத்தவைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள பிஸ்கத் சீவில் பகுதியில் இக்குடியேற்றங்களை நிறுவும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதுவல்லாமல் பெதல் இல்லிட்டில் 800 குடியேற்றங்களை நிறுவவும் இஸ்ரேல் பிரதமர் ஓல்மர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாகச் சமாதான பேச்சு வார்த்தையின் பொழுது குடியேற்றங்களை நிறுவுவதை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ரைஸ் கூறியிருந்தார். இறுதியாகக் கிடைத்தத் தகவல் படி கிழக்கு ஜெருசலேமில் புதிய குடியேற்றங்கள் நிறுவும் இஸ்ரேலின் அறிவிப்பை ரைஸ் விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் இக்கீழ்த்தரமான செயல்பாடு சமாதான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிரானது என்று அமெரிக்காவிற்கு நன்றாகப் புரிந்த போதிலும் இஸ்ரேலின் இச்செயல்பாடுகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமெரிக்கா மௌன சம்மதம் கொடுத்து வருகின்றது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து அமைதி உடன்படிக்கைகளும் புதிய குடியேற்றங்கள் நிறுவுதலுக்கு தடை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் இருந்து யூதர்கள் முழுவதுமாக வெளியேற வேன்டும் எனவும் அவ்வுடன்படிக்கைகள் கூறுகின்றன.

அன்னாபோலிஸ் உச்சி மாநாட்டிற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட அமைதி உடன்படிக்கையும் புதிய குடியேற்றங்கள் நிறுவுதலுக்கு விலக்கு ஏற்படுத்தியுள்ளது. இவ்வுடன்படிக்கைத் தீர்மானங்கள் எதையும் இஸ்ரேல் இதுவரை நடைமுறைபடுத்தவில்லை.

மேற்குக்கரையில் மட்டுமே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் வசிக்கின்றனர். 1967-ல் இஸ்ரேல் ஆக்ரமித்த கிழக்கு ஜெருசலேமிலும் அதிகமான யூத குடியேற்றங்கள் சட்டமீறலாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் அதிக யூதக் குடியேற்றங்கள் உருவாக்குவதற்கான இஸ்ரேலின் தற்போதைய அறிவிப்பு அமெரிக்காவின் பூரண துணையுடனே பிறப்பிக்கப்பட்டுள்ளது என இஸ்ரேலிலுள்ள “பீஸ் நௌ” என்ற இயக்கம் கூறியுள்ளது.