வங்கியில் பணிபுரிவது கூடுமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும். எனது உறவினர் ஒருவர் ஓர் ஒப்பந்த நிறுவனத்தில் (Contract Company) பணி புரிகிறார். அந்த நிறுவனம் அவரை ஒரு வங்கி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக (Offce boy) பணியில் அமர்த்தி இருக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படையில் இது கூடுமா?
(மின்னஞ்சல் வழியாக சகோதரர் அஜீஸ்) 

தெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…
இஸ்லாம் வட்டியைத் தடை செய்துள்ளது என்பதில் இரண்டாம் கருத்து இல்லை! உழைப்பே இல்லாமல் பணம் பெருக்குவது, செல்வந்தர்களிடமே பணம் குவிந்து கிடப்பது, மனிதர்களிடமிருந்து தவறான முறையில் பொருளாதாரத்தைச் சுரண்டுவது; இப்படி பல வகையிலும் மனித சமூகத்திற்குத் தீங்கு ஏற்படுத்தும் வட்டிக்கு மார்க்கத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் வட்டி எனும் தீமைக்குத் துணை போய்விடக்கூடாது என்ற மார்க்கப்பற்றின் காரணமாக சகோதரரிடம் இந்தக் கேள்வி எழுந்துள்ளது.

திருமறையில் வட்டி வாங்குவது பற்றிய எச்சரிக்கை: 002:275, 276, 278. 003:130. 004:161.

நபிமொழியின் கூடுதலான கண்டிப்பு:
''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும், அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள்'' மேலும் ''இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்களே ஆவர்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

இவ்வாறு வட்டியோடு சம்பந்தப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் இந்நபிமொழி உரைக்கின்றது. எனவே வட்டியுடன் தொடர்புடையவற்றிலிருந்து முஸ்லிம்கள் தங்களை நீக்கிக்கொள்வது சிறப்பு! ஆயினும், ஒப்பந்த நிறுவனம் எங்கெல்லாம் வேலைக்கு நியமிக்கிறதோ பணியாளர் அங்கெல்லாம் (மதுபானக்கடை, விபச்சார விடுதி போன்றதில்லாமல் இருந்தால்) வேலை செய்யக் கடமைப்பட்டுள்ளார்.

வட்டி இல்லாத வங்கிகள் தவிர மற்ற வங்கிகளின் நோக்கமே, பணம் கடன் கொடுத்து வட்டி பெறுவது தான். அதாவது வட்டியை அடித்தளமாகக் கொண்டு அதன் மீது வங்கிகள் நிறுவப்படுகிறது. மேற்கண்ட நபிமொழியின் கருத்துப்படி வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக்குக் கணக்கு எழுதுவது, வட்டிக்கு சாட்சியாக இருப்பது இதற்கெல்லாம் வங்கியே பொறுப்பாகும். வங்கியில் (Offce boy) அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்திருக்கும் சகோதரர் இதில் சம்பந்தப்படவில்லை. இவர் வேலை செய்வதற்கான மாத ஊதியத்தையும் ஒப்பந்தம் செய்த நிறுவனமே இவருக்கு வழங்குகிறது. அதனால் சகோதரர் செய்யும் வேலையையும், அதற்காக ஊதியம் பெறுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.

தவிர்க்க வேண்டும்!

வங்கியில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்த சகோதரருக்கு வட்டியோடு எவ்விதத்திலும் தொடர்பில்லை என்றாலும் இஸ்லாம் முற்றாகத் தடை செய்திருக்கும் வட்டியைத் தொழிலாக நடத்தும் வங்கியில் பணியாற்றுவதை பேணுதல் அடிப்படையில் ஒரு முஸ்லிம் தவிர்த்துக் கொள்வதே சிறந்தது.

''அனுமதிக்கப்பட்டவை திண்ணமாகத் தெளிவாக்கப்பட்டு விட்டன. விலக்கப் பட்டவையும் திண்ணமாகத் தெளிவாக்கப்பட்டு விட்டன. இவ்விரண்டும்போல் தோன்றும் இடம்பாடுக்குரியவையும் உள்ளன. அவற்றை (ஹலாலா ஹரமா என) மக்களில் அனேகர் அறிய மாட்டடர்கள்.

ஐயத்திற்கு உரியவற்றிலிருந்து விலகி விடுபவர் தனது மார்க்கத்தையும் மானத்தையும் களங்கத்திலிருந்து காத்துக் கொள்கிறார். ஐயத்திற்கு இடம்பாடு உள்ளவற்றில் விழுந்து விடுபவர் வேலியின் ஓரத்தில்(கால்நடைகளை) மேய விடுபவரைப் போன்றவராவார். விலக்கப் பட்ட வேலியே (கால்நடைகளுக்கு) மேய்ச்சலாகி விடக் கூடும்.

அறிந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை உண்டு. அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் எல்லை அவனால் வகுக்கப் பட்ட தடைகளாகும். அறிந்து கொள்ளுங்கள், உடலில் ஒரு சதைதுண்டு இருக்கிறது. அது சீராக இருந்தால் முழு உடலும் சீராக இருக்கும். அது சீர்கெட்டு விட்டால் முழு உடலும் சீர்கெட்டு விடும். அறிந்து கொள்ளுங்கள், அதுதான் இதயம்!
'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

வேலியோரங்களில் மேயும் கால்நடைகள் ஒருநாள், வேலியைத் தாண்டிச் சென்று பயிர்களை மேயும் அபாயம் இருப்பதால் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக்கொள்ள இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. எனினும், வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை செய்வது ஒப்பந்த நிறுவனத்தின் நிர்ப்பந்தமெனில்,

"எந்த ஓர் ஆன்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது'' (அல்குர்ஆன், 002:233. 023:062)

(இறைவன் மிக்க அறிந்தவன்)