காதில் விழுமா?

Share this:

“திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற முதுமொழியை, தங்கள் சமுதாயத்துக்கு இடப் பட்டக் கட்டளையாகவே ஏற்றுக் கொண்டு, தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தம் குடும்பத்தாருக்காகப் பொருளீட்டுவதில் மட்டும் குறியாக இருக்கிறது தமிழக முஸ்லிம் சமுதாயம்.

“எம்புள்ள சவூதியிலே இருக்கான்”

“எங்கண்ணன் துபாயிலே இருக்காரு”

“என் ஊட்டுக்காரங்க கொய்த்தில இருக்காங்க”

முஸ்லிம் சமுதாய மக்கள் பெருமை பொங்க விடுக்கும் அறிக்கைகளில் அவன் என்னவாக இருக்கிறான்? அவரு என்னவாக இருக்கிறார்? அவங்க என்னவாக இருக்காங்க? என்கிற முக்கியத் தகவல் மட்டும் இருக்காது. கேட்டாலும் அந்தத் தகவல் சொல்லப்பட மாட்டாது.

ஏனெனில், வெளிநாடுகளில் பணியாற்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் கட்டடத் தொழிலில் கல் தூக்கிக் கொடுத்தோ, சாலைகளை வெட்டிக் குழாய் போட்டோ, தெருவைக் கூட்டிச் சுத்தம் செய்தோ கிடைக்கும் சம்பளத்தில் சுகமான, சொகுசான வாழ்க்கை வாழப் பழகி விட்ட நமது சமுதாயச் சொந்தங்களுக்கு இந்த முக்கியத் தகவல் என்பது தேவையில்லாத ஒன்று.

மேற்சொன்ன கடின உழைப்பு நிறைந்த பணிகளைத் தவிர்த்து, அத்திப் பூத்தாற்போல் ‘ஆஃபீஸ் பாய்’ பணியில் இருப்பவர்களது பராக்கிரமம், “கம்பெனியே தம்பி தலையிலேதான்” என்கிற அளவுக்கு அவர்தம் குடும்பத்தாரால் அவ்வப்போது அதீத விளம்பரத்துக்குள்ளாகும்.

தன் கண்ணெதிரே பல நாடுகளைச் சேர்ந்த, நம் நாட்டைச் சேர்ந்த, தன்னைவிடச் சின்னப் பையன்களான பிற மதத்தவர்கள் ஏ.ஸி அறைகளில் உட்கார்ந்து கொண்டு தூசு படாமல் வேலை செய்து ஐந்திலக்கச் சம்பளம் வாங்குவதைப் பார்த்து ஏங்கும் நம் சமுதாயச் சொந்தங்களின் இந்த நிலைக்கு யார் காரணம்?

விடை தேட தனியொரு ஆய்வுக்காகக் காலவிரயம் செய்ய வேண்டிய தேவை ஏதும் இல்லை. உடலுக்கு ஒவ்வாக் கடும் குளிரிலும் சூடிலும் இரத்தத்தை வியர்வையாக்கியப் பாமரனின் மறுமைக்கான சிறு சேமிப்பில் ஒய்யாரமாக வளைகுடா பவனிவரும் கட்சி/இயக்கத் தலைவர்களின் புண்ணியத்தில் சமுதாயத்திடம் அதற்கான பதில் தயாராகவே உள்ளது.

ஆங்கிலேயரின் ஆட்சியில் நம் நாடு அடிமைப் பட்டுக் கிடந்தபோது, “அறிவு தேடுவது முஸ்லிமான ஆண்-பெண்களின் கடமையாகும்” என்ற நபிமொழிக்கு எதிராக, நாட்டுப் பற்று என்பது வெறியாக மாறிப்போய், “பரங்கியன் பாஷை படிப்பது ஹராம்” என்று முட்டாள்தனமான ஃபத்வா வெளியிட்ட – தம் முட்டாள்தனத்துக்கு விலையாக முழுச் சமுதாயமும் எத்துணை இழப்புகளை எத்தனை ஆண்டுகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறியாத – நம் முன்னோர்கள்தாம் இந்த இழிநிலைக்குக் காரணகர்த்தாக்கள்.

காரணம் என்னமோ கசப்பானது தான். ஆனால் இன்னும் எத்தனைக் காலத்திற்குத் தான் முன்னோர்களின் மீது பழியைப் போட்டு முடங்கிக் கிடப்போம்? என்ற கேள்விக்குத் தான் பதிலில்லை.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஒருவரின் சராசரி வயதை வைத்துக் கணக்கிட்டால், பரங்கியன் நாட்டைத் துறந்து ஒரு தலைமுறை வயதாகப் போகின்றது. 60 வருடங்கள் கடந்த பின்னரும் அறிவை வளர்க்க/கல்வி கற்க, முன்னோர்களின் “ஆங்கிலேய பாஷை ஹராம்” ஃபத்வாவின் மீது பழியைப் போடுவது அறியாமையா? அல்லது அறிவீனமா?

எதிர்காலச் சமுதாயத்தின் தேவைகளுக்குக் கடந்த காலச் சமுதாயத்தின் மீது பழியைப் போட்டு கதை பேசி இருப்பது, அடுத்த தலைமுறைக்கு இச்சமுதாயம் செய்யும் மிகப்பெரிய துரோகம் அன்றி வேறென்ன? காரணம் கூறி வாளாவிருப்பதை விட, காரணம் அகல வழிமுறை தேடுவதன்றோ அறிவார்ந்த செயல்?.

சமுதாய அவலம் அகல வழிமுறை தேடும் பயணத்தில்…..நேற்று (07.04.2008) திங்கட் கிழமையின் நாளிதழ்களில் இடம் பிடித்துக் கொண்ட ஒரு செய்தி:

கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்களுக்குக் கல்வி கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு இல்லை. முஸ்லிம் சமுதாயத்தில், 5 சதவீதம் ஓரளவு வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைத்து, ஏன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கக் கூடாது? உலகத்தரமான சட்டக் கல்லூரியை உருவாக்கலாம். மைனாரிட்டி என்ற பெயரில் யார் யாரோ கல்லூரி தொடங்கும் போது இது சாத்தியம்தான். முஸ்லிம்கள் பிளஸ்-2 வரையாவது படித்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி அளிக்கும் மையங்களை உருவாக்க வேண்டும்.

95 சதவீத முஸ்லிம்கள் பாட்டாளிகள். பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காக உழைக்கிறார்கள். பங்கேற்பதில் முன்னுரிமை என்ற வகையில், இத்தனை பங்கு முஸ்லிம்களுக்கு வேண்டும் என்று போராடுங்கள். போராட்ட களத்தில் நில்லுங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.

கல்வியில் பின்தங்கி இருக்கும் இஸ்லாமியர்களை முன்னேற்ற ஐ.ஐ.டி (Indian Institute of Technology), ஐ.ஐ.எம்(Indian Institute of Management) போன்ற உயர் கல்வி நிறுவனங்களைத் தொடங்குங்கள்.

மேற்கண்டவாறு ஆலோசனையும் தார்மீக ஆதரவும் அளித்திருப்பவர் முஸ்லிம்களுக்கு ‘இதயத்தில்’ இடம் கொடுத்து வைத்திருக்கும் நம் “மஞ்சள் துண்டு” முதல்வர் அல்லர். முஸ்லிம்களின் அரசியல் கட்சி/கழகங்களைச் சேர்ந்த தலைவர் அல்லர். “ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாய ஆதரவும் தங்களுக்குத்தான்” என்று பெருமை பேசும் முஸ்லிம்களின் பல இயக்கங்களின் ஒரு தலைவருமல்லர்.

மேற்கண்ட பயனுள்ள யோசனையை முன்வைத்திருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், மருத்துவர் ராமதாஸ் ஆவார். அவருக்கு நமது ஆழிய நன்றி உரித்தாகட்டும்!

அவருடைய சொல் நம் சமுதாயச் செல்வந்தர்களின் காதுகளில் விழுமா? நம் சமுதாயச் சொந்தங்களுக்கு இனியாவது கல்வி என்பது கடமையென்றாகுமா?

காலம் பதில் சொல்லட்டும்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.