பாலஸ்தீனப் பொதுமக்களின் மீது தொடரும் இஸ்ரேலிய ராணுவத் தாக்குதல்கள்

இஸ்ரேலின் கொடுஞ்செயல்

காஸா பகுதியின் மீதான கடந்த இரு நாட்களுக்குள் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 27 வயதான ஒரு பெண்ணும் 45 வயதான அவரது உறவினரும் இறந்துள்ளனர். குழந்தைகள் உள்ளிட்ட மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளும் அடங்குவர். இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்ரேலின் இந்தக் கொடுஞ்செயலை பாலஸ்தீனத் தலைமை கடுமையாகக் கண்டித்துள்ளது. கடந்த செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் இறந்ததை சர்வதேச சமூகம் கண்டித்திருந்தது.

ஐநாவுக்கான பாலஸ்தீனப் பிரதிநிதி திரு.ரியாத் மன்சூர், ஐநா பாதுகாப்புச் சபை பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் ஜெனீவா ஒப்பந்தப்படி நடந்துகொள்ள நிர்ப்பந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐநா பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், இஸ்ரேலின் இவ்வாறான தொடரும் கொலைச் செயல்கள் மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு மாற்றமாகத் தொடர்ந்து கொண்டிருப்பது தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

இதனைத் தெரிவித்த ஐநாவின் அரசியல் துணைப் பொதுச் செயலாளர் திரு. இப்ராஹிம் கம்பாரி, "இஸ்ரேலின் இப்படியான பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த மீண்டும் வலியுறுத்துகிறோம். இஸ்ரேலின் நடவடிக்கைகள் சரியானதாகவும், மனிதாபிமான முறையிலும் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஆனால் பொதுமக்கள் பெருமளவில் இறந்தாலும் தங்கள் தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய விமானப் படை மேஜர் ஜெனரல் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீனியப் போராளிகளைத் துல்லியமாகத் தாக்க இயலுவதாகக் கூறினார்.

தகவல்: அபூஷைமா (நன்றி : அல்ஜஸீரா ஆங்கிலத் தளம்)