இஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா? இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்?

Share this:

பதில்:

ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம்.

“அர்ஷின்(இருக்கை) மீது அவன்(அல்லாஹ்) வீற்றிருக்கிறான்.”(திருக்குர்ஆன் 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4)

“வானவர்கள் அணியணியாய் நிற்க உமது இறைவன் வருவான்.”(திருக்குர்ஆன் 89:22)

மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை நாம் அறியலாம்.

இது தவிர, அல்லாஹ்வுக்கு முகம் உண்டு. விரல்களும், கைகளும் கால்களும் உண்டு. அர்ஷின் மீது அமர்தல், முதல் வானத்திற்கு இறங்கி வருதல் போன்ற இறைப்பண்புகளை விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளவேண்டுமே தவிர அதற்கு உவமைகள் கூறக்கூடாது. உதாரணங்கள் கூறக்கூடாது. எவருக்கும் நிகரில்லாத எப்பொருளைப் போலும் இல்லாமலும் இருக்கின்றான். அவன் தன்மைகளை உருவகப்படுத்தியோ, கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ, மனித கற்பனைக்கு ஏற்ப பொருள் கொள்ளக்கூடாது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவனாக ஏக இறைவன் இருக்கிறான்.

பின்னர் ஏன் இஸ்லாமியர்கள் இறைவனுக்கு உருவமில்லை எனக் கூறுகின்றனர்? என்ற விஷயத்திற்கு வருவோம்.

பார்வைகள் அவனை அடைய முடியாது – குர்ஆன் (6:103)

இங்கு உருவமில்லை எனக் கூறுவதன் கருத்து அந்த உருவம் எப்படி இருக்கும் என்பதை நம்முடைய சிற்றறிவால் ஊகித்து அறிந்து கொள்ள இயலாது; அதாவது படைத்தவனைக் குறித்து அறியும் சக்தி படைப்பினத்துக்கு இல்லை என்பதேயாகும்.

‘பூமியாகிய அதன் மேலுள்ள யாவும் அழிந்து போகக்கூடியதாகும். கண்ணியமும், சங்கையும் உடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும்’ என்று குர்ஆன் (55 : 26, 27) கூறுகிறது. (இன்னும் பார்க்க 2:15, 2:272 13:22, 30:38, 39, 76:9, 92:20, 6:52, 18:28, 28:88)

இதனை விளங்குவதற்குப் படைத்தவன், படைப்பினம் என்ற இரு வார்த்தைகளின் முழு சக்தியையும் புரிந்து கொண்டால் விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு மனித ரோபோவை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவர் அது எப்படி செயல்பட வேண்டும் என அவர் வடிவமைத்தாரோ அதனை விடுத்து அதற்கு உபரியாக அதனால் ஒன்றும் செய்ய இயலாது.

தெளிவாக கூற வேண்டுமெனில் படைத்தவனை மிஞ்சி படைப்பினத்திற்கு ஒன்றும் செய்ய இயலாது. இந்த உலகமெலாம் கண்காணிக்கும் சக்தியுள்ள இறைவனின் ஞானத்தில் மிகச் சிறிய அளவே மனிதன் பெற்றுள்ளான். நமக்கு தரப்பட்ட இச்சிறிய அறிவினைக் கொண்டு நம்மைப் படைத்தவன் எப்படியிருப்பான் என ஒரு தீர்மானத்திற்கு வருவது இயலாத காரியம்.

இனி ஒவ்வொருவரும் அதற்கு முயற்சிப்போமானால் அவரவருக்கு தரப்பட்டுள்ள சிந்தனா சக்திக்கு உட்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வடிவமான இறைவன் கிடைப்பான். இது உலகில் குழப்பமும் கலகமும் பிரிவினையும் தோன்றுவதற்கும் மனிதர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதற்கும் வழி பிறப்பித்து விடும்.

எனவே தான் இஸ்லாமியர்கள் இறைவனுக்கு உருவம் கற்பிக்கும் விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். உருவம் உண்டு எனக்கூறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இறைவனுக்கு உருவம் கொடுத்து பல இறைவனை உருவாக்கும் அபத்தத்தைச் செய்வதை விட ஆரம்பத்திலேயே உருவமில்லா(உருவகப்படுத்த முடியா) இறைவன் எனக் கூறிவிடுவது சிறந்ததல்லவா?

அல்லாஹ் மிக அறிந்தவன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.