குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-8)

ஐயம்:  இரண்டில் எது சரி? கிறித்துவர்கள் செல்லுமிடம்:

  •சுவர்க்கம் (2:62, 5:69)
  •நரகம் (5:72, 3:85)

தெளிவு:

ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:62)

முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 5:69)

2:62, 5:69 இரு வசனங்களும் ஒரு கருத்தைக் குறிப்பிடுகின்றன.

தவ்ராத், இஞ்ஜீல் போன்ற முன் வேதங்கள் வழங்கப்பட்டோரையும், இறுதி இறைவேதமான அல்குர்ஆன் வழங்கப்பட்டோரையும் குறித்து இவ்விரு வசனங்களும் பேசுகின்றன.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் வெகுமதி வழங்கவிருக்கும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல் இறை நம்பிக்கையாளராக முடியாது! 2:62, 5:69 இரு வசனங்களிலும் ”இறைவனை நம்பிக்கை கொண்டோராயினும்” என தொடக்கத்தில் விளித்து இறை நம்பிக்கை கொண்டவராயினும், மீண்டும் இறைவனை நம்பிக்கை கொண்டு, இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறி, இறை நம்பிக்கையின் அவசியத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன வசனங்கள்.

யூதர்களும், கிறித்தவர்களும் முன்னர் வேதங்கள் வழங்கப்பட்டவர்களாயினும் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தின் மீது நம்பிக்கை கொண்டு நபி (மூஸா) அலை அவர்களைப் பின்பற்றினால் அதற்கான பிரதிபலனை இறுதித் தீர்ப்பு நாளில் யூதர்கள் பெற்றுக்கொள்ளலாம். இறைவன் அருளிய தவ்ராத் வேதத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த யூதர்கள், அவர்கள் காலத்திலேயே தவ்ராத் வேதத்திற்குப் பின்னர் இறைவன் அருளிய இன்ஜீல் வேதத்தையும் அதை மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களையும் பின்பற்றினால் தவ்ராத், இன்ஜீல் இருவேதங்களை நடைமுறைப்படுத்திய இருநன்மைகள் யூதர்களுக்கு உண்டு!

இறைவன் அருளிய இன்ஜீல் வேதத்தை மக்களுக்குச் சேர்த்த நபி ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வாழ்க்கை நெறிகளை அமைத்துக் கொண்ட கிறிஸ்தவர்கள், அவர்கள் காலத்திலேயே இறுதிவேதம் குர்ஆனை அருளிய இறைவனையும், இறுதி வேதத்தைக் கொண்டு வந்த இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் மீண்டும் நம்பிக்கை கொண்டு குர்ஆனின் போதனைகளை நடைமுறைப்படுத்தினால் இன்ஜீல், குர்ஆன் இருவேதங்களை நடைமுறைப்படுத்திய இருநன்மைகள் கிறித்தவர்களுக்கு உண்டு!

வேதத்தையுடையோரில் அநியாயம் செய்தோரைத் தவிர (ஏனையோருடன்) அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். எங்களுக்கு இறக்கப்பட்டதையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும் நாம் நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாவோம் என்று கூறுவீர்களாக! (அல்குர்ஆன் 29:46)

முந்தைய வேதங்கள் வழங்கப்பட்டோரை நோக்கி, இறுதிவேதம் வழங்கப்பட்ட முஸ்லிம்கள் கூறுவதாக அமைந்துள்ளது. பொதுவாக, இறைவேதங்கள் வழங்கப்பட்டு இறைநம்பிக்கை கொண்ட யூதர்களாயினும், கிறித்தவர்களாயினும், முஸ்லிம்களாயினும் எங்களுக்கும் உங்களுக்கும் இறைவன் ஒருவனே! அந்த ஓரிறைவன் உங்களுக்கு அருளிய வேதங்களையும் எங்களுக்கு அருளிய வேதத்தையும் நாம் நம்பிக்கை கொண்டோம் என இதன் அடிப்படையில் யூத கிறிஸ்துவ முஸ்லிம்களின் நம்பிக்கை அமைந்திருக்க வேண்டும் என இவ்வசனம் கற்றுத் தருகின்றது.

நபி ஈஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் இறைத்தூதராகவும், அவர்களின் இறைத்தூதர்களின் வரிசையில் இறுதியானவராகவும் வந்தும் இஸ்வேலர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் என இரண்டாகப் பிளவுபட்டனர். ஈஸா (அலை) அவர்கள் தவ்ராத் வேதத்தை மெய்பிக்க வந்திருந்தும் இந்த நிலை! யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், போட்டி பொறாமைகள், பிளவுகள் போராட்டங்கள் காரணமாக மதச் சண்டைகள் வலுவுற்றன. யூதர்களால் கிறிஸ்தவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

கி.பி ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் யூதர்கள் கிறித்தவர்களிடையே குரோதமும் பகைமையும் உச்சக்கட்டத்தில் இருந்தன. இதற்கிடையில், ‘ஹெர்குலிஸ்’ என்கிற மாவீரன் பாரசீக மன்னன் கிஸ்ராவை வெற்றி கொண்டு கான்ஸ்டாண்டி நோபிளில் ரோமாப் பேரரசான முடி சூட்டிக்கொண்டான். தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு கடவுட் கொள்கை என்கிற கோட்பாட்டை அமல்படுத்தியிருந்தான். தனது ரோமாப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட எல்லாக் கிறிஸ்துவ தேவாலங்களிலும் அந்தக் கொள்கையே கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவும் போட்டிருந்தான்.

இந்தக் காலகட்டத்தில் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி நிகழ்ந்தது. ரோமாபுரிப் பேரரசன் ஹெர்குலிஸுக்கும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடப்பட்டது.

…புஸ்ராவில் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில்,

”அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…”

அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர் வழியைப் பின்பற்றுவோரின் மீது சாந்தி நிலவட்டுமாக! நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு அழைப்பு விடுக்கிறேன்! நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரண்டு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உம்முடைய) குடி மக்களின் பாவமும் உம்மைச் சாரும். வேதத்தை உடையவர்களே! நாம் அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வைவிட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நம்முடைய இரட்சகனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. என்ற எங்களுக்கு உங்களுக்கும் பொதுவான ஒரு கொள்கையை நோக்கி வந்து விடுங்கள். (இக் கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால், நாங்கள் நிச்சயமாக (அந்த ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக ஆகி விடுங்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

(நீண்ட நபிமொழியில் சிறு பகுதி, அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 0007, முஸ்லிம் 3637, அஹ்மத் 2366)

முந்தைய இறைவேதம் பெற்ற கிறிஸ்தவர்கள் இறுதிவேதம் குர்ஆனையும் வாழ்க்கை நெறியாக ஏற்று அமல்படுத்தினால் அவர்களுக்கு இரு மடங்கு வெகுமதி வழங்கப்படும். இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாக்கு!

இன்ஜீல் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இறைவேதத்தில் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறியினை உள்ளதை உள்ளபடி நடைமுறைப்படுத்தினால் பிரதிபலனாக அவர்களுக்கு சொர்க்கம் வழங்கப்படும். இன்ஜீல் வேதத்தை நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்களின் இறைநம்பிக்கை, அதன் பின்னர் அருளப்பட்ட இறுதி வேதம் குர்ஆனின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களின் இந்த இறைநம்பிக்கை இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்துடன் இணைந்ததாக இருக்கவேண்டும். அவ்வாறிருந்தால் தான் அவர்களின் இறைநம்பிக்கையும் நற்செயல்களும் ஏற்கப்படும். 2:62, 5:69 வசனங்களில் கிறிஸ்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்கிற விளக்கம் இதன் அடிப்படையில் அமைந்த சுருக்கமான விளக்கமாகும்.

நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கை கொண்டோருக்கு கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, நம்பிக்கை கொண்டோருக்கு நேசத்தால் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர், ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (அல்குர்ஆன் 5:82)

இனி, கிறிஸ்தவர்கள் நரகம் செல்வர் என்பது குறித்தான இறை வசனங்களைப் பார்ப்போம்:

“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் 5:72)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் 3:85)

இஸ்லாம் மார்க்க மீள் எழுச்சிப் பிரச்சாரம் துவங்குவதற்கு முன் கிறிஸ்தவர்களிடம் முக்கடவுட் கொள்கை வேருன்றியிருந்தது. இறைவன் மூவரில் ஒருவன் என்று ஏக இறைவனுக்கு இணைகற்பித்து ஓரிறைக் கொள்கைக்கு சாவு மணியடித்தனர். பிதா சுதன் பரிசுத்த ஆவி என்கிற இம்முக்கடவுட் கொள்கையுடையோர் இறைவனுக்கு இணைகற்பிக்கும் பாவத்தைச் செய்ததால் அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பது தான் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையாகும். (இது முஸ்லிம்களுக்கும் விதிவிலக்கல்ல)

நிச்சயமாக அல்லாஹ் என்பவன் (பிதா, மகன், பரிசுத்த ஆவி என) மூவரில் ஒருவன் என்று கூறுபவர்களும் நிராகரித்து விட்டனர். (உண்மையாக) வணங்கப்பட தகுதியானவன் ஒரே ஒரு இறைவனைத் தவிர வேறு யாருமில்லை. தாம் கூறுவதை விட்டும் அவர்கள் விலகிக் கொள்ளவில்லையானால் அவர்களில் நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை நிச்சயமாக ஏற்பட்டுவிடும். (அல்குர்ஆன் 5:73)

மர்யமின் மகன் ஈஸாவே! ”அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரு கடவுள்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா? என அல்லாஹ் கேட்கும்போது, அ(தற்க)வர் ‘நீ மிகத் தூய்மையானவன், எனக்கு உரிமை இல்லாதவற்றை நான் சொல்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய், ஆனால் உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன் என்று (ஈஸா) கூறுவார். (அல்குர்ஆன் 5:116)

இன்ஜீல் வேதத்தை மக்களுக்குப் போதனை செய்து ஒரே இறைவனை வணங்கி வழிபடுங்கள் என மக்களை அழைத்த இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களையே தேவன் என்று வணங்கும் அவர்களின் இணைவைக்கும் பெரும் பாவச் செயலுக்காக பிரதிபலன் வழங்கும் இறுதி நாளில் நரகத்தை வெகுமதியாகப் பெற்றுக்கொள்வர் என்பதில் முரண்பாடு இல்லை! ஈஸா நபி போதிக்காத முக்கடவுட் கொள்கையை கிறிஸ்தவர்கள் மனோ இச்சைப்படி உண்டாக்கி  செயல்பட்டதால் மறுமை நாளில் – பரலோக ராஜியத்தில் தேவனின் சன்னிதியில் கைச் சேதம் அடைந்து நஷ்டப்படுவார்கள் என்பதில் முரண்பாடு இல்லை!

யூதர்களும் கிறிஸ்தவர்களும் மனோ இச்சைப்படி அவர்களின் மார்க்கத்தை மாற்றி தர்க்கித்து கொண்டனர் என்பதற்கு சில இறைமறை வசனங்கள்,

“யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:111)

யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள், இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான். (அல்குர்ஆன் 2:113)

யூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும், அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது. (அல்குர்ஆன் 5:18)

இவை தவ்ராத், இன்ஜீல் வேதங்களைப் பெற்ற யூதர்கள் கிறிஸ்தவர்கள் இறை வேதங்களில் காட்டிய கைவரிசைகள். ஆகவே, நேர்வழி நடந்த கிறிஸ்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள். இறைவேதங்களைப் புறக்கணித்து தான் தோணித்தனமாக இறைவனுக்கு இணைவைத்தவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று விளங்கினால் குர்ஆனில் முரண்பாடு இல்லை என்பதை உணரலாம்!

(இறைவன் மிக்க அறிந்தவன்)