நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக் கொண்டது. அடுத்த அரைமணி நேரத்தில் பரபரப்பானது அந்தத் தெரு. பரபரப்புக்கு இன்னொரு காரணம், தீப்பிடித்த வீடு பி.ஜேபி. கட்சியின் 10-வது வார்டு தலைவர் பிரவீன்குமாருடையது.
உடனே, தெரு முழுக்க போலீஸ் குவிக்கப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசியதால் தீப்பற்றியதைக் கண்டுபிடித்த போலீஸார் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கினார்கள். மதப் பிரச்னை நீருபூத்த நெருப்பாக இருக்கும் திண்டுக்கல்லில், விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், பி.ஜே.பி. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார் இரண்டே நாட்களில் குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளனர். யார் வீட்டில் குண்டு வீசப்பட்டதோ, அந்த வீட்டில் வசிக்கும் பிரவீன்குமார்தான் குண்டை வீசியவர் என்பதுதான் உச்சகட்ட அதிர்ச்சி!
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ”பி.ஜே.பி-காரங்க வீட்டுல பெட்ரோல் குண்டு வீசிட்டாங்கன்னதும் சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துடக் கூடாதேன்னு எஸ்.பி. உடனடியாகக் குழுக்களை அமைச்சு, குற்றவாளிகளைத் தேடச் சொன்னாரு. பல ஆங்கிள்ல விசாரணை செஞ்சோம். சம்பவம் நடந்த அன்னைக்கு பிரவீன்குமார் வெளியூர் போயிருந்ததா சொன்னார். ஆனா, அவருடைய செல்போன் எண்ணை சோதனை செய்ததில் அவர் திண்டுக்கல் ஏரியாவுல இருந்ததைக் கண்டுபிடிச்சோம்.
தொடர்ந்து அவரோட செல்போனை ட்ரேஸ் பண்ணுனதுல, அவரோட ஃப்ரெண்ட் கமலகண்ணன்கிட்ட போன்ல பேசுனதை வெச்சு, சந்தேகம் உறுதியாகிடுச்சு. ஆளைத் தூக்கிட்டு வந்து விசாரிச்சதுல உண்மையைக் கக்கிட்டார்.
கட்சியில பேர் வாங்குறதுக்காக, பிரவீனும் அவரோட ஃப்ரெண்டும் இந்தத் திட்டத்தைப் போட்டிருக்கானுங்க. சம்பவம் நடந்த அன்னிக்கு, வேலை விஷயமா வெளியூர் போறேன்னு வீட்டுல சொல்லிட்டு, திண்டுக்கல்லயே சுத்தியிருக்கானுங்க. இருட்டினதும் நல்லா குடிச்சுட்டு, அந்த பாட்டில்லயே பெட்ரோலை ஊத்தி கொளுத்தி, வீட்டு மேல எறிஞ்சுட்டு ஓடிட்டாங்க. மாட்டின பிறகு, ‘இப்படி செஞ்சா, கட்சியில எனக்கு நல்ல பேரு கிடைக்கும். பதவி கிடைக்கும். எல்லாத்துக்கும் மேல செலவில்லாம போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும்னுதான் இப்படி செஞ்சிட்டேன்’னு புலம்புறார்.
இப்பவும் ரெண்டு பேரும் போலீஸ் பாதுகாப்புலதான் இருக்காங்க. ஆனா, வீட்டுல இல்ல. ஜெயில்ல” என்றார்.
பிரவீன்குமாரின் நண்பர்கள் வட்டாரத்தில் பேசினோம். ”அவர் அமைதியான ஆளு.. எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார். ஒன்றரை வருஷத்துக்கு முன்னதான் பாஜக கட்சியில சேர்ந்தார். ஆர்ப்பாட்டம், கூட்டம்னு சொன்னா, பத்தோட ஒண்ணா கலந்துகிட்டு போயிடுவார். மத்தபடி கட்சியில வெறித்தனமான ஈடுபாடெல்லாம் இல்ல. அவர் எப்படி இதை செய்தார்னு தெரியல. கட்சியில எல்லாரும் தன்னை மதிக்கணும்ங்கிறதுக்காகப் பொய்யான விளம்பரம் தேடியதோட விளைவு இப்ப கஷ்டப்படுறார்” என்றனர்.
இந்து அமைப்பின் தலைவர்கள் மீது தொடர்ந்து நடந்துவரும் தாக்குதல்களை ஒரு சிலர், இது போன்ற அற்பத்தனமான செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதக் கடைசியில் கோவையில் அனுமன்சேனா அமைப்பின் மாநில அவைத் தலைவர் சக்திவேல், ‘போலீஸ் உடையில் வந்த நான்கு பேர் என்னைக் கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். பின்பு அவர்களிடம் இருந்து தப்பி வந்தேன்’ என்று புகார் கொடுத்தார். விசாரணை முடிவில், சக்திவேல், தன்னைக் கடத்தியதாக நாடகமாடியதை ஆதாரத்துடன் போலீஸார் கண்டுபிடித்தனர். அது போலவே திண்டுக்கல் சம்பவமும் நடந்துள்ளது.
பி.ஜே.பி-யின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவிடம் கேட்டபோது, ”இது தனிப்பட்ட நபர்களின் செயல். அமைப்புக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுபோன்ற தனிப்பட்ட நபர்களின் செயல்களால், இந்து அமைப்புகள் எந்த வகையிலும் பலவீனம் அடையாது” என்றார்.
இந்தியாவின் அரசியல் எத்தகைய உளவியல் ஊனமுள்ள மனிதர்கள் நிரம்பியதாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம்!
– ஜுனியர் விகடன் (செப்டெம்பர் 08, 2013 இதழ்)
தொடர்புடைய தொலைக்காட்சி செய்தி: (கேப்டன் டிவி, 31-08-2013)
http://youtube.com/watch?v=NdATqBZJ-jM