தனிமனித ஒழுக்கம் – (புகையும் பகையும்)

புகையும் பகையும்

ணக்க வழிபாடுகள் மட்டுமல்லாது தனி மனித ஒழுக்கம், சமுதாய நலன் இவற்றில் முழு அக்கறை செலுத்தும் இஸ்லாமிய மார்க்கம், சுகாதாரத்தையும் பேணச் சொல்வதை மிகவும் வலியுறுத்துகிறது. ஐவேளைத் தொழுகைகளுக்கு மிக முக்கிய நிபந்தனை உடல் உடைத் தூய்மைகள் ஆகும். இவற்றுக்கு மேலாக  ஒளூ எனப்படும் கை, கால், முகம் இவற்றைச் சுத்தம் செய்யாவிட்டால் வணக்கங்களே நிறைவேறாது என நிபந்தனை விதிப்பதின் மூலம், தூய்மைக்கும் சுகாதாரத்திற்கும் இஸ்லாம் எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அறியலாம்.

ஒரு உண்மையான முஸ்லிம் தனது வாய் மற்றும் உடலில் வெறுக்கத்தக்க துர்நாற்றம் வருவதைத் தவிர்க்க உடலை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்

உத்தம கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ”ஒருவர் தன் செல்வத்தின் மூன்றில் ஒரு பகுதியை வாசனைத் திரவியங்களுக்காகச் செலவிட்டாலும் அவர் வீண் விரயம் செய்தவராகமாட்டார்” என்று கூறி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.

பேணுதலான முஸ்லிம் ஒவ்வொரு நாளும் மிஸ்வாக், பற்தூரிகை (toothbrush) போன்ற சாதனங்களின் மூலம் தனது வாயைத் தூய்மைப்படுத்தி பிறருக்கு நோவினை தரும் வாயின் துர்நாற்றத்தை அகற்றிடவேண்டும்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நபி (ஸல்) அவர்கள் இரவிலோ பகலிலோ தூங்கினால் விழித்த உடன் உளுவுக்கு முன் மிஸ்வாக் செய்வார்கள்.” (ஸூனன் அபூதாவுத்)

வாயைத் தூய்மையாக வைத்திருப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்துக் கூறினார்கள்: ”எனது உம்மத்தினருக்கு சிரமம் ஏற்படாது என்றிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக் செய்யும்படி அவர்களை நான் ஏவியிருப்பேன்.” (ஸஹீஹூல் புகாரி)

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் ”நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் எந்தக் காரியத்தை முதன் முதலாகச் செய்வார்கள்?” என்று கேட்கப்பட்டபோது, அன்னையவர்கள் ‘மிஸ்வாக்’ என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

உடல்தூய்மை பற்றி இஸ்லாம் வலியுறுத்துவதை நன்றாகவே அறிந்திருந்தும் சில முஸ்லிம்கள் இது விஷயத்தில் அலட்சியம் காட்டுவது வருந்தத்தக்கதாகும். அவர்கள் தங்களது, உடல், ஆடை மற்றும் வாயின் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஆனால் அவர்கள் இறையில்லங்கள் மற்றும் மார்க்க உபதேச சபைகள், கல்வி மற்றும் ஆலோசனை அரங்குகளில் பங்கேற்கிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் துர்நாற்றம் சபையோரைத் துன்புறுத்துகிறது. இறையருள் இறங்கும் இவ்வாறான சபைகளில் சூழ்ந்துகொள்ளும் மலக்குகளையும் வெறுப்படையச் செய்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் பூண்டு, வெங்காயம் போன்ற சக தொழுகையாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு மஸ்ஜிதுக்குள் நுழையக் கூடாது. அது மனிதர்கள், மலக்குகளுக்கு நோவினை ஏற்படுத்தும் என்ற நபிமொழியை அன்றாடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”வெங்காயம், பூண்டு சாப்பிட்டவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். ஏனென்றால், மனிதர்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் விஷயங்களால் மலக்குகளும் சங்கடம் அடைகிறார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கெட்ட வாடையுடைய சில காய்களைச் சாப்பிட்டவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையத் தடை விதித்தார்கள். அவர்களது துர்நாற்றமுள்ள வாடையால் மனிதர்கள், மலக்குகள் நோவினை அடையக்கூடாது என்பதுதான் தடைக்குக் காரணமாகும். பொடுபோக்கும், அலட்சியமும் உடைய சிலரின் வாய்நாற்றம் அருவருப்பை ஏற்படுத்துகிறது.

பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக, உண்பதற்கு ஆகுமான உணவுப் பொருட்கள் கூட மஸ்ஜிதுக்குச் செல்லும் முன் உண்ணுவதற்குத் தடை விதைக்கப்பட்டுள்ளது என்றால், உடலுக்கு கேட்டைத் தவிர வேறு எதையும் தராத பெரும் துர்நாற்றம் வீசக்கூடிய சுருட்டு, பீடி, சிகரெட் போன்றவை எந்த அளவு நம்மால் வெறுக்கப் பட வேண்டும்? அதிலும் சில சகோதரர்கள் தங்கள் உடலுக்கும் அருகிலிருப்போர் உடல்நலனுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் புகைபிடித்துவிட்டு எந்தக் குற்ற உணர்வும் இல்லாது, மஸ்ஜிதுக்குள் வந்து பிற சகோதரர்களைச் சங்கடத்தில் ஆழ்த்துகின்றனர்.

ஒருவர் தன் புகைபிடிக்கும் பழக்கத்தால் தனக்குத் தீங்கு விளைவிப்பதே பெரும் பாவமெனும்போது அவர் தன் அருகில் அன்றாடம் உடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கோ அல்லது உடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கோ சங்கடத்தையும் பெரும் நோவினையோடு இலவசமாகப் புற்றுநோயையும் தருவது எவ்வகையில் நியாயம்? ஆம். Passive smokers என்றழைக்கப்படும் இரண்டாம்நிலைப் புகைப்பவர்கள் அதாவது புகைபிடிப்பவரின் அருகில் இருந்து அப்புகையின் தீமையில் பங்கு போட்டுக்கொள்ளும் அப்பாவிகளைப் பற்றிய குறிப்புகள் இங்கே:

ஒருவர் தான் உள்ளிழுத்து வெளிவிடும் புகையில் இருக்கும் 4000 வேதிப்பொருள்களில் குறைந்தது 60 பொருள்களாவது நிரூபிக்கப்பட்ட புற்றுநோய்க்காரணிகளாக அறியப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆய்வில் அறியப்பட்ட சில புள்ளி விவரங்கள் வருமாறு:

1. 35000 முதல் 40000 வரை மாரடைப்பால் இறந்தவர்கள் இரண்டாம்நிலைப் புகைப்பவர்கள்(Passive smokers)

2. 3000 நுரையீரல் புற்று நோயால் இறந்தவர்கள் இரண்டாம்நிலைப் புகைப்பவர்கள்.

3. நியூமோனியா, மூச்சுக்குழல் அழற்சி (Bronchitis) போன்ற நோய்களுக்கு உள்ளான 150,000 முதல் 300,000 குழந்தைகள் இரண்டாம்நிலைப் புகைப்பவர்கள்.

4. இரண்டாம்நிலைப் புகைப்பவர்களாக இருந்ததால் ஆஸ்துமாவுக்கு ஆளான குழந்தைகள் 200,000

இவ்வளவு தீமைகளைத் தரக்கூடிய புகைப்பழக்கத்தை சிகரெட்டோடு சேர்த்து அணைத்து விடுதல் தானே ஒரு முஸ்லிமின் கடமை? அது மட்டுமின்றி வாய் சுத்தத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிகளை பின்பற்றி, புகை பிடித்துவிட்டு பொது இடங்களில் அதுவும் தொழுகைகளில் கலந்து கொண்டு பிறர் மனம் வெறுப்படைவதிலிருந்து நம்மை காத்துகொள்வோம்.

கட்டுரை ஆக்கம்: இப்னுஹனீஃபா