மோடியின் பிம்பத்தை தகர்த்தெறிந்த ஆவணப்படமும் கலங்கடித்த ஹிண்டன்பர்க் அறிக்கையும் !

Share this:

சில மாதங்களுக்கு முன்பு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியானபோது, ‘இது போன்ற திரைப்படங்களின் மூலம் உண்மை தெரிய வேண்டும். பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த உண்மையை இந்தப் படம் காட்டியிருக்கிறது’ என்று இந்திய நாடாளுமன்றத்திலேயே முழங்கினார் மோடி. இப்போது தன்னைக் குறித்து வெளிவந்திருக்கும் ஆவணப்படத்தைக் கண்டு அச்சப்படுகிறார். (காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை மக்கள் காண அரசு விடுமுறை விட்ட பாஜக அரசு, இந்தியாவில் பிபிஸி வெளியிட்டுள்ள குஜராத் இனப்படுகொலை பற்றிய ஆவணப்படத்தைத் தடை செய்யப்பட்டுள்ளது நகை முரண்)

‘இத்தனை காலம் கழித்து ஏன் வெளியிட வேண்டும்?’ என்று கேட்கிறார்கள் பா.ஜ.க-வினர். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்த மோடியின் வார்த்தைகள்தான் அவர்களுக்கான பதில்” என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

இரண்டு ஆண்டுகள் அதானி குழுமங்களைத் தொடர் ஆய்வுகள் செய்து, 106 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியிட்டது ‘ஹிண்டன்பர்க்.’ அதில், அதானியைக் குற்றம்சாட்டி எழுப்பப்பட்டிருக்கும் 88 கேள்விகள்தான் விவகாரமானவை.

ஓர் அறிக்கையும், ஓர் ஆவணப்படமும் மோடியின் பிம்பத்தை இந்த அளவுக்குத் தகர்த்தெறியும் என கனவிலும் நினைத்திருக்காது பா.ஜ.க. இந்தியப் பங்குச்சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகளைச் செயற்கையாக விலை உயர்த்தி, அதன் மூலமாகப் பல்வேறு முறைகேடுகளில் தொழிலதிபர் கெளதம் அதானி ஈடுபட்டதாக, `பகீர்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க்’ நிதி ஆராய்ச்சி நிறுவனம். அதேநேரத்தில், 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது லண்டனைச் சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம்.

இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கும் நிலையில், நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆவணப்படத்தைத் திரையிட்டு, மாணவர்கள் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள். கேரளாவில், வீதிக்கு வீதி பிபிசி-யின் ஆவணப்படம் திரையிடப்படுகிறது. “மோடிக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கும் இந்த இருமுனைத் தாக்குதலில், அவர் மட்டுமல்ல, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும் கடும் ஆட்டம் கண்டிருக்கிறது” என்கிறது டெல்லி அரசியல் வட்டாரம்.

இந்த அறிக்கையும், ஆவணப்படமும் அப்படி என்ன சொல்கின்றன… என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன..?

‘ஷெல்’ கம்பெனிகள்… மறைக்கப்பட்ட கடன் தொகை… அதிரடித்த 88 கேள்விகள்!

நேட் ஆண்டர்சன் (Nate Anderson) என்பவரால் 2017-ல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கப்பட்ட ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம், முதலீடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்வதோடு, நிதி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக, பெரு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்து, அவற்றிலுள்ள முறைகேடுகளை அவ்வப்போது வெளிச்சமாக்கிவருகிறது. ஜூன் 2020-ல், ‘வின்ஸ் ஃபைனான்ஸ்’ என்கிற நிதி நிறுவனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது ‘ஹிண்டன்பர்க்.’

அதன் மூலம் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் சொத்துகள் சீனாவில் முடக்கப்பட்டிருப்பதும், அதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து பெருமளவு முதலீடுகளைப் பெற்றிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தன. அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து வின்ஸ் நிறுவனத்தை நீக்கியது ‘நாஸ்டாக்’ (Nasdaq). அதேபோல அமெரிக்காவின் ‘நிகோலா’ நிறுவனம் உட்பட, பல பெருநிறுவனங்களின் பின்புலங்களையும் ஆராய்ந்து, ஆய்வறிக்கை வெளியிட்டு அதிரடித்த ‘ஹிண்டன்பர்க்’, இந்த முறை கைவைத்தது அதானி நிறுவனங்கள்மீது.

இரண்டு ஆண்டுகள் அதானி குழுமங்களைத் தொடர் ஆய்வுகள் செய்து, 106 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, கடந்த ஜனவரி 24-ம் தேதி வெளியிட்டது ‘ஹிண்டன்பர்க்.’ அதில், அதானியைக் குற்றம்சாட்டி எழுப்பப்பட்டிருக்கும் 88 கேள்விகள்தான் விவகாரமானவை. அதாவது, ‘அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு நிறுவனங்கள், தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பாக உயர்த்திக் காட்டியிருக்கின்றன. அதன் மூலமாக 81,234 கோடி ரூபாய் வங்கிகளிலிருந்து கடன் பெற்றிருக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனில், எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே பெரும் தொகை சென்றிருக்கிறது. தங்கள் நிறுவனப் பங்குகளின் விலையை உயர்த்திக்காட்டுவதற்காக, வெளிநாடுகளிலுள்ள சில ‘ஷெல் கம்பெனிகள்’ (கறுப்புப்பணத்தை முதலீடு செய்வதற்காக உருவாக்கப்படும் மோசடி நிறுவனங்கள்) மூலமாக அதானி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கை. எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திலும் அதானி நிறுவனங்கள் ஈடுபட்டதாக, `பகீர்’ கிளப்பியிருக்கிறது அந்த அறிக்கை.

23,500 கோடி ரூபாய் இழப்பில் எல்.ஐ.சி… மோடியின் நட்பு தந்த பரிசு!

இந்த அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் 20 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தன. சுமார் 5.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பை மூன்றே நாள்களில் சந்தித்திருக்கிறது அதானி குழுமம். உலகப் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த கெளதம் அதானி, எட்டாவது இடத்துக்குச் சறுக்கியிருக்கிறார். இந்தச் சறுக்கலில், அதானி நிறுவனங்களில் முதலீடு செய்த பிற நிறுவனங்களும் சேதாரத்தைச் சந்தித்திருக்கின்றன. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-க்கு 23,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர். இவ்வளவு குளறுபடிகளையும், பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அமைக்கப்பட்ட ‘செபி’ கைகட்டி வேடிக்கை பார்த்திருப்பதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குறிப்பிட்டிருப்பதுதான் ஹைலைட். “அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நிலவும் பல ஆண்டுக்கால நட்பு காரணமாக, அதானி நிறுவனத்தின் முறைகேடுகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது” என்கின்றன எதிர்க்கட்சிகள்.

ஓர் அறிக்கை... ஓர் ஆவணப்படம்... ஆட்டம் காணும் மோடி!

நம்மிடம் பேசிய பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா, “ஒன்றிய அரசின் முக்கியமான புள்ளிகள், அதானிக்கு நெருக்கமானவர்கள். எனவே, ‘ஹிண்டன்பர்க்’ எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளிலிருந்து அதானியை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் பொதுவெளியில் இருக்கிறது. அதனால், பாரபட்சமற்ற விசாரணை செய்து இந்த விவகாரத்தை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். எஸ்.பி.ஐ., எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தும் வேலையை அரசு செய்ய வேண்டும். ‘ஹிண்டன்பர்க்’ எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய ஒரு குழுவை அமைக்கவேண்டியது அரசின் கடமை. அதைச் செய்வதில் ஒன்றிய அரசுக்கு என்ன தயக்கம்?” என்றார்.

அதானி மீதான தாக்குதல்… தேசத்தின் மீதான தாக்குதல் அல்ல!

இதற்கிடையே, ‘ஹிண்டன்பர்க்’ எழுப்பிய குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் முற்றிலுமாக மறுத்திருக்கிறது. அதானி குழுமத்தின் சட்டத் தலைவர் ஜதின் ஜலுந்த்வாலா, “ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்” என்றிருக்கிறார். 413 பக்க விளக்க அறிக்கையும் அதானி தரப்பிலிருந்து வெளியாகியிருக்கிறது. இதை ‘ஹிண்டன்பர்க்’ வரவேற்றிருப்பதோடு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுக்குமாறு கூறியிருக்கிறது. ஜதின் ஜலுந்த்வாலா விளக்கமளித்தபோது, தேசியக்கொடியைப் பின்னணியில் வைத்துக்கொண்டு பேசியது சர்ச்சையானதால், அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ‘ஹிண்டன்பர்க்’, “முக்கியமான குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல், ‘தேசியம்’ என்கிற பெயரில் புகார்களை மறைக்க அதானி குழுமம் முயல்கிறது. தேசியக்கொடியைப் போர்த்திக்கொண்டு நாட்டை அதானி குழுமம் கொள்ளையடிக்கிறது” எனப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறது.
“தங்கள் மீதான தாக்குதலை, நாட்டின் மீதான தாக்குதலாகக் கட்டியமைக்க முயல்கிறது அதானி நிறுவனம். அதை ‘ஹிண்டன்பர்க்’ போட்டு உடைத்துவிட்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி வழக்கு தொடர்ந்தால், தங்கள் முதலீட்டாளர்களின் விவரங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என எல்லாவற்றையுமே ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கவேண்டி வரும். அது அதானிக்கு மேலும் சிக்கலைப் பெரிதாக்கும்” என்கிறார்கள் விவரமறிந்த மத்திய நிதித்துறை அதிகாரிகள்.

போட்டுடைத்த ஆவணப்படம்… ஆட்டம் காணும் மோடி!

ஒருபக்கம் அதானி மீதான குற்றச்சாட்டு குண்டு வெடித்து மோடியை நிலைகுலையவைத்திருக்கும் சூழலில், மோடி மீதே நேரடித் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது ஓர் ஆவணப்படம். கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ‘India: The Modi Question’ என்கிற ஆவணப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கலவரத்துக்கும் அப்போதைய குஜராத் முதலமைச்சரான மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவாகப் பேசியிருக்கிறது இந்த ஆவணப்படம்.

இரண்டு எபிசோடுகளாக வெளிவந்திருக்கும் இந்த ஆவணப்படத்தில், மோடியின் அரசியல் வளர்ச்சி தொடங்கி, கோத்ரா ரயில் எரிப்பு, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கொடூரமான கலவரம் வரை அனைத்தும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. அதில், ‘திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் முஸ்லிம்கள், வன்முறையால் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். தனிப்பட்ட வளர்ச்சிக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும், குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி, இதையெல்லாம் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார்’ என அழுத்தமாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி கட்டமைத்திருக்கும் ‘பெரும் தலைவர்’ பிம்பத்தைச் சுக்குநூறாக உடைத்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களில் ஆவணப்படத்தைத் திரையிட மாணவ அமைப்புகள் வேகமெடுத்ததால், படத்தைத் தடைசெய்தது மத்திய அரசு. யூடியூபிலிருந்து ஆவணப்படத்தின் லிங்க்குகள் நீக்கப்பட்டன. ட்விட்டரும் அந்த வீடியோ லிங்க்கைப் பகிர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ட்வீட்டுகளை நீக்கியிருக்கிறது. ஆனால், ஒரு முறை இன்டர்நெட்டுக்குள் புகுந்துவிட்ட ஒரு பதிவை முழுவதுமாக யாரும் நீக்கிவிட முடியாது என்கிற யதார்த்த நிலையை மத்திய அரசு புரிந்துகொள்ளவில்லை. இப்போது படம், கோடிக்கணக்கான தனி நபர்களின் மொபைல்களில் பகிரப்பட்டும் பார்க்கப்பட்டும் வருகிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் படத்தைத் தங்கள் சங்க அலுவலகத்தில் திரையிடுவதாக அறிவித்தனர். மிரண்டுபோன பல்கலைக்கழக நிர்வாகம், படம் திரையிடுவதற்கு முன்னதாக, பல்கலைக்கழக வளாகம் முழுவதும் மின் இணைப்பைத் துண்டித்தது. ஆனால், திட்டமிட்ட அதே இடத்தில், தங்களது செல்போன்களில் படத்தைப் பார்த்தார்கள் மாணவர்கள். சென்னை பல்கலைக்கழகத்திலும் அதேபோல, மாணவர்கள் படம் பார்க்க முற்பட்டபோது, பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்ததால் பரபரப்பு எழுந்தது. சென்னையில், படத்தைத் தன் மொபைலில் பார்த்த சி.பி.எம் கவுன்சிலர் பிரியதர்ஷினி உள்ளிட்டோரை ஆளும் தி.மு.க அரசு கைதுசெய்ததும் கண்டனத்தைக் கிளப்பியது.

தமிழ்நாடு காவல்துறை தன்னிச்சையாகச் செயல்படுகிறதா?

சி.பி.எம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி நம்மிடம் பேசுகையில், “அந்த ஆவணப்படத்தைப் பார்க்கும் எல்லோரும் அதிர்ச்சிக்குள்ளாவார்கள். ‘இந்த நேரத்தில் ஏன்..?’ என்று கேட்கிறார்களே தவிர, இதைப் பா.ஜ.க-வினர் யாரும் பொய் எனச் சொல்லவில்லையே… திட்டமிட்டு மறைக்கப்பட்ட கொடூர முகம் வெளியாகும்போது, அதில் இருக்கும் உண்மையை எல்லோரும் பேசத்தான் செய்வார்கள். அன்றைக்கு இருந்த சூழலில், குஜராத் கலவரத்தில் மோடிக்குத் தொடர்பில்லை என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கலாம். அதனாலேயே அது உண்மை என்றாகிவிடுமா. மத்திய அரசு படத்தைத் தடைசெய்திருக்கிறது. தமிழ்நாட்டிலோ படம் பார்த்தால் கைதுசெய்கிறார்கள். எனவே, முதல்வரின் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல்துறை, தன்னிச்சையாகச் செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. இதை, தமிழ்நாடு அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

“மோடியும் ராஜ பக்சேவும் ஒன்று!”

நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சே.பாக்கியராசன் பேசியபோது, “இலங்கையில் தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாதது குஜராத்தில் மோடி அரசு நிகழ்த்திய படுகொலை. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பான இந்த ஆவணப்படம் இன்னும் முன்பே வெளிவந்திருக்க வேண்டும். இப்போதாவது வந்ததே என்பதில் மகிழ்ச்சி. எங்களைப் பொறுத்தவரை மோடியும் ராஜபக்சேவும் ஒன்றுதான். இருவருமே இனப்படுகொலையாளர்கள்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்காகவே ஓர் அரசு இருக்குமென்றால், அது மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசுதான். அதானி பாதிக்கப்பட்டால், இந்தியாவின் ஒவ்வொரு சாமானியனும் பாதிக்கப்படும் அளவுக்கு இந்திய தேசியத்தில் கிளைபரப்பி வைத்திருக்கிறார்கள். மோடியின் இந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் அதானி 20 மடங்கு வளர்ச்சியை அடைந்திருக்கிறார். இதுதான் மோடி வித்தை என்பது. இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் அதானி. ஆனால், இந்திய அரசுக்கு அதிக வரி செலுத்துகிற டாப்-10 நிறுவனங்கள் பட்டியலில், அதானி நிறுவனங்களில் ஒன்றுகூட இல்லை… ஏன்? அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டை, `இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதல்’ என்கிறார் அதானி. ஆனால், அவருக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ‘அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி’ என்ற சாமுவேல் ஜான்சனின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன” என்றார்.

“கலவரத்துக்கும் மோடிக்கும் தொடர்பில்லை… இது சர்வதேசச் சதி!”

‘ஹிண்டன்பர்க்’ குற்றச்சாட்டுகள், பிபிசி ஆவணப்படச் சர்ச்சை தொடர்பாக, பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.ஸ்ரீநிவாசனிடம் பேசினோம். “காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது அதானிக்கும் அம்பானிக்கும் கொடுத்த கடன் தொகை எவ்வளவு, இந்த எட்டாண்டுகளில் பா.ஜ.க கொடுத்த கடன் எவ்வளவு என்பதையும் இவர்கள் வெளியிடுவார்களா… பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட பெரும் கடன் தொகைகளை வசூல் செய்திருக்கிறோம். பண மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, விஜய் மல்லையாவின் சொத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டிருக்கின்றன. ‘பொதுச் சொத்தைத் திருடிக்கொண்டு செல்பவர்களுக்கு இந்த அரசு எப்போதும் உதவியாக இருக்காது’ என்பதற்கு இவையே சான்றுகள். முத்ரா திட்டத்தில் பயனடைந்த சாமானியர்களெல்லாம் கார்ப்பரேட்டுகளா?

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இந்தச் சூழலில் பிரதமர் மோடியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், அதுவும் 20 ஆண்டுகள் கழித்து கோத்ரா கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருப்பதில் சர்வதேசச் சதி இருப்பதாகவே தோன்றுகிறது. கோத்ரா கலவரத்தில் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என நீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது. கலவரத்தில் இறந்தவர்களில் 30 சதவிகிதம் பேர் இந்துக்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை என்றால் எப்படி இந்துக்கள் சாவார்கள்… கலவரத்துக்காக அப்போது முதல்வர் மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம் நடந்தது என போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் குறிப்பிடுகிறார். அவர் பொய் சொன்னார் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். தீஸ்டா சீதல்வாட் என்ற பத்திரிகையாளரும் பொய் சொன்னதற்காகவும், சாட்சியங்களை பிறழ் சாட்சியங்களாக மாற்றியதற்காகவும் தண்டிக்கப்பட்டவர். இவர்கள் இருவரும் சொன்ன பொய்களை வைத்துக்கொண்டு ஆவணப்படம் எடுப்பதையும், அதைவைத்து மோடியின் பெயருக்குக் களங்கம் விளைவிப்பதையும் பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார் விரிவாக.

இந்த ஆவணப்படமும், ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கையும் பிரதமர் மோடியை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதற்கு, ‘நாட்டில் மக்களிடையே வேறுபாடுகளை விதைத்து பிளவுகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்கிறார்கள்’ என பிரதமர் மோடியே பேசியிருப்பது சான்று. “எதற்கும் வெளியில் ரியாக்ட் செய்யாத அவரே, பல்வேறு மாநிலங்களில் ஆவணப்படம் வீதிக்கு வீதி திரையிடப்படுவதையும், அதானி மீதான குற்றச்சாட்டுகளால் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கேள்விகளால் துளைத்தெடுக்கப் போவதையும் நினைத்து ஆட்டம் கண்டு போயிருக்கிறார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும் முடிவுற்று, புத்துணர்ச்சியுடன் காங்கிரஸ் களத்துக்கு வந்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களிலிருந்து மோடியின் பிம்பம் தப்பிப்பது சிரமம்” என்கிறார்கள் மத்திய அரசின் சீனியர் அதிகாரிகள்.

“சில மாதங்களுக்கு முன்பு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியானபோது, ‘இது போன்ற திரைப்படங்களின் மூலம் உண்மை தெரிய வேண்டும். பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த உண்மையை இந்தப் படம் காட்டியிருக்கிறது’ என்று இந்திய நாடாளுமன்றத்திலேயே முழங்கினார் மோடி. இப்போது தன்னைக் குறித்து வெளிவந்திருக்கும் ஆவணப்படத்தைக் கண்டு அச்சப்படுகிறார். ‘இத்தனை காலம் கழித்து ஏன் வெளியிட வேண்டும்?’ என்று கேட்கிறார்கள் பா.ஜ.க-வினர். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்த மோடியின் வார்த்தைகள்தான் அவர்களுக்கான பதில்” என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.

‘உண்மை வென்றிட வேண்டும்’ என்கிறான் பாரதி, நாமும்.

நன்றி: – ராணி கார்த்திக் (விகடன் 05-02-2023)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.