சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 59

59. இரு சோதனைகள்

1157ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் நூருத்தீனுக்கும் சிரியா மக்களுக்கும் சோதனைக் காலமாக அமைந்துவிட்டன. பரங்கியர்களுடனான போரில் மாறி, மாறி அமைந்த வெற்றி-தோல்விகள் போலன்றி, மனத்தையும் கால்களையும் நடுநடுங்கச் செய்த அழிவுகள்தாம் முதல் சோதனை. கால்கள் நடுங்கின என்பது கடுமையை விவரிப்பதற்காக எழுதப்பட்டதன்று. உண்மையிலேயே நடுங்கின. காரணம் நிலநடுக்கம். அந்த இரண்டு ஆண்டுகளில் பூமி பல முறை குலுங்கி, குலுங்கி சிரியாவில் பரவலாகப் பேரழிவு ஏற்படுத்தியது.

நூருத்தீன் ஜெருசலத்தை நோக்கிப் படையெடுக்கத் தயாராகிறார் என்றொரு தகவல் டமாஸ்கஸில் பரவி, முஸ்லிம்களின் மனத்தில் ஒருவிதப் பரபரப்புத் தொற்றியிருந்த நேரம் அது. ஆகஸ்ட் மாதம் முதல் பூகம்பம் நிகழ்ந்தது. அதைப் பின்தொடர்ந்தன பல நிலநடுக்கங்கள். அடுத்த மூன்றாம் நாள் பெரிய அளவில் மற்றொரு பூகம்பம். மீண்டும் அடுத்தடுத்துப் பல நடுக்கங்கள். இப்படியாக ஏறத்தாழ 40 நிலநடுக்கங்களால் சிரியா சீர்குலைந்து போனது.

முஸ்லிம்கள், பரங்கியர்கள் வேறுபாடின்றி எண்ணிலடங்கா மக்கள் உயிரிழந்தனர். அலெப்போ நகரச் சுவரின் கோபுரங்கள் இடிந்து விழுந்தன. ஹர்ரான் நகரில் பிளந்த பூமியின் ஆழத்தில் தட்டுப்பட்டது அங்குப் புதைந்திருந்த பண்டைய நகரின் மிச்சம். திரிப்போலி, பெய்ரூத், டைர், ஹும்ஸ், மர்ராஹ் பகுதிகளில் பற்பல கட்டடங்கள் நொறுங்கி விழுந்து எண்ணற்ற உயிரிழப்பு. தப்பிப் பிழைத்தவர்கள் பல பகுதிகளுக்கும் சிதறி ஓடினார்கள்.

இடிபாடுகளையும் பாதிப்புகளையும் சீர்செய்து, செப்பனிட்டு மறுநிர்மாணம் செய்யும் பணிகளைத் துவக்கினார் நூருத்தீன். அவை நடைபெற்று, மக்களும் ஊர்களும் சிறிது சிறிதாகப் பாதிப்பிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் போதே, அடுத்த ஆறு மாதங்களில், ரமளான் மாதத்தில் மேலும் பல நில நடுக்கங்கள்! நள்ளிரவில் மக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். அதன் பிறகு ஐந்து மாதங்கள் கழித்து மேலும் பல நடுக்கங்கள். இப்படியாக விட்டுவிட்டு, குலுங்கிக்கொண்டே இருந்தது பூமி. எண்ணற்ற சோக நிகழ்வுகளைப் பதிந்து வைத்துள்ளனர் அன்றைய வரலாற்று ஆசிரியர்கள்.

ஹமா நகரில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஓர் ஆசிரியருக்கு அடக்க இயலாத இயற்கை உபாதை ஏற்பட்டது. பாடத்தை நிறுத்திவிட்டு, அண்மையிலிருந்த பொட்டல்வெளிக்கு அவர் சென்றிருந்த நேரத்தில் நிகழ்ந்தது ஒரு பூகம்பம். அவர் அலறியடித்துத் திரும்பி வந்து பார்த்தால் ஒரு மாணவன்கூட மிச்சமின்றி அனைவரும் இடிபாடுகளில் இறந்து கிடந்தனர். அதிர்ச்சியில் உறைந்துபோய்த் தலையில் கைவைத்து அமர்ந்து அழுது முடித்தவருக்கு வேறு கவலைகள் ஏற்பட்டன. பிள்ளைகளைத் தேடி வரப்போகும் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது? எப்படி ஆறுதல் சொல்வது? ஆனால் பெற்றோர் எவரும் வரவே இல்லை. அவர்கள் உயிர் பிழைத்திருந்தால்தானே வருவதற்கு ?

ஷைஸர் நகரின் ‘பனு முன்கித்’ வம்சத்தைச் சேர்ந்த உஸாமா இப்னு முன்கித் என்பவரைப் பற்றி 47ஆம் அத்தியாயத்தில் அறிமுகப் படுத்திக்கொண்டோம். அவருடைய உறவினர் தாஜுத்தவ்லா ஷைஸரின் அமீராக இருந்துவந்தார். தம் மகனின் விருத்தசேதன நிகழ்வுக்குக் கோலாகல விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் அவர். நகரின் முக்கியப்புள்ளிகளும் பனு முன்கித் வமிசத்து உறவினர்களும் அமீரின் மாளிகையில் குழுமியிருந்தனர். அச்சமயம் அங்கு நடுங்கியது பூமி. அரண்மனைச் சுவர்கள் இடிந்து விழுந்து ஒருவர் மிச்சமின்றி அத்தனைப் பேரும் அந்த இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்தனர். முன்கித் அமீரகம் அங்கு அந்நிமிடம் நிரந்தரமாக முற்றுப் பெற்றது. டமாஸ்கஸில் இருந்த உஸாமாவும் அவருடைய உறவினர்கள் மட்டுமே அந்த வமிசத்தில் எஞ்சிப் பிழைத்தவர்கள்.

அந்த இழப்பைக் குறித்து உஸாமா தம்முடைய நூலில் எழுதி வைத்துள்ள சோகக் கவிதை வரிகளை ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் மறவாமல் குறிப்பிடுகின்றனர்:

என் இன மக்களை அழிக்க,
அவர்களைத் தனித்தனியாக அழித்தொழிக்க,
அல்லது இரண்டிரண்டாகத் துடைத்தழிக்க
மரணம் படிப்படியாக முன்னேறி வரவில்லை

கண் இமைக்கும் நேரத்தில் இறந்தனர்
அவர்கள் அனைவரும் !
கல்லறைகளாக மாறின
அவர்களின் அரண்மனைகள் !

தம் இன மக்களைக் கொத்தாக இழந்து சோகத்தில் உழன்று எழுதியவர், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கையும் உல்லாசத்தையும் பேரழிவுடன் ஒப்பிட்டுச் சிந்தித்திருக்கிறார். விளைவாகப் பிற வரிகளில் அது இவ்வாறாக விரிந்தது:

இலட்சியமற்றவர்கள் ஆளும் இந்நாட்டை
அவர்களின் சோம்பலிலிருந்து தட்டி எழுப்பவே
தாக்கின பூகம்பங்கள் !

oOo

பரங்கியர்களின் புறக்காவல் நிலையமான ‘ஹாரிம்’ நகரை நூருத்தீன் கைப்பற்றிய நிகழ்வுகளை 55ஆம் அத்தியாயத்தில் வாசித்தது நினைவிருக்கலாம். பூகம்பத்திற்கு முந்தைய, 1156ஆம் ஆண்டில் அந்த ஹாரிம் நகரின் சுற்றுப்புறங்களில் பரங்கியர்களின் படை அவ்வப்போது நுழைந்து, தாக்கி, கலகம் செய்து வந்தது. அவற்றையெல்லாம் நூருத்தீன் முறியடித்தே வந்தார்.

பரங்கியர்கள் பிடித்து வைத்திருந்த பன்யாஸ் பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கும் அவர்களுக்கும் இடையே சண்டைகள் தொடர்ந்தபடி இருந்தன. பெரும்பாலும் வெற்றி-தோல்வியற்ற, முடிவென்று ஏதும் ஏற்படாத சண்டைகள். அதில் ஒன்றில், முஸ்லிம்கள் பதுங்கி இருந்து தொடுத்த தாக்குதலில், ஜெருசல ராஜா மூன்றாம் பால்ட்வின் நூலிழையில் தப்பித்ததும் நிகழ்ந்தது. வேறு சில பகுதிகளில் நூருத்தீனின் சகோதரர் நாஸிருத்தீனுக்கும் பரங்கியர்களுக்கும் இடையே சண்டை, ஸலாஹுத்தீன் அய்யூபியின் சிற்றப்பாவும் நூருத்தீனின் தளபதிகளுள் முக்கியமானவருமான அஸாதுத்தீன் ஷிர்குஹ் பரங்கியர்களைத் தாக்கிய போர் ஆகியனவும் தொடர்ந்தன.

அந்தப் போர்களில் கொல்லப்பட்ட பரங்கியர்களின் தலைகளையும் அவர்களின் ஆயுதங்களையும் டமாஸ்கஸுக்கு எடுத்து வந்து, அவற்றை நகர வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட பரங்கியர்களும் அந்த ஊர்வலத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இவ்விதம் முஸ்லிம்களுக்கும் பரங்கியர்களுக்கும் இடையே இடைவிடாது மோதல்களும் போர்களும் நிகழ்ந்துவந்த நிலையில்தான் பூகம்பமாகக் குறுக்கிட்டது இயற்கைப் பேரிடர். அது முதலாம் சோதனை என்றால், பாழடைந்த நகரங்களின் புனர்நிர்மாணத்தை மேற்பார்வையிட ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த நூருத்தீன் திடீரென நோய்வாய்ப்பட்டது இரண்டாவது சோதனை. 1157ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் சம்மாக் பகுதியில் இருக்கும்போது நூருத்தீனை நோய் தாக்கியது. இன்னதுதான் என்று இனங்காண முடியாத அந்நோய் தீவிரமடைந்தது; அவரது உடல்நிலையை மோசமாக்கியது. கூடவே பயணிக்கும் மருத்துவர் இப்னுல் வக்கார் (Ibn al-Waqqar) நூருத்தீனின் உடல்நல முன்னேற்றம் குறித்து அவநம்பிக்கை அடைந்து விட்டார். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டமாக மாறியது நூருத்தீனின் நிலைமை. அவரைப் பல்லக்கில் படுக்க வைத்து அலெப்போவிற்குத் தூக்கிச் சென்றார்கள். மரணத்தை எதிர்பார்த்து அடுத்த ஏற்பாடுகளை உடனே செய்தார் நூருத்தீன். சகோதரர் நாஸிருத்தீனுக்கு அலெப்போவின் ஆட்சிப் பொறுப்பு; டமாஸ்கஸுக்கு ஷிர்குஹ் என்று ஆக்ஞை பிறப்பித்தார். அதன்பின் நூருத்தீனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

சிரியா முழுவதும் நூருத்தீனின் உடல்நலம் குறித்துச் செய்தி பரவி, அவர் இறந்துவிட்டதாகவும்கூட கசிந்த வதந்தி, அதிர்ச்சி பரப்பியது. முஸ்லிம்களிடம் பதற்றம் ஏற்பட்டு, ஊர்கள் அமைதியை இழந்தன. குழப்பமான அந்தச் சூழ்நிலையை விட்டுவிடுவார்களா பரங்கியர்கள்? ஜெருசலம், அந்தாக்கியா, திரிப்போலி மாநிலங்களின் படை, அர்மீனியர்களின் படை, யாத்ரீகர்களாக வந்திருந்த இலத்தீன் கிறிஸ்தவர்களின் படை எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துக்கொண்டு பூகம்பத்தில் அழிந்தது போக, பிழைத்து மிஞ்சியிருந்த ஷைஸரை நோக்கி அணிவகுத்தனர்; முற்றுகை இட்டனர். ஷைஸர் அவர்கள் வசம் வீழும் நிலை. வெற்றி நிச்சயம் என்றானதும் நகரின் உரிமை யாருக்கு என்பதில் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அது முற்றி, முற்றுகை முறிவடைந்தது. தப்பித்தது ஷைஸர். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து ஹாரிமைக் குறி வைத்தபோது வாக்குவாதம் இல்லை; சச்சரவு இல்லை. கோட்டையைச் சரணடைய வைத்தார்கள். நூருத்தீன் கைப்பற்றியிருந்த ஹாரிமைத் தூக்கி அந்தாக்கியாவிடம் ஒப்படைத்தார்கள்.

நூருத்தீனின் ஏற்பாட்டின்படி அலெப்போவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வந்தார் நாஸிருத்தீன். ஆனால் அலெப்போவின் ஆளுநராக இருந்தவருக்கு நூருத்தீனைத் தவிர மற்றவரை ஆட்சித் தலைவராக நினைத்துப் பார்க்க முடியவில்லையோ என்னவோ, நாஸிருத்தீனை உள்ளே வரவிடாமல் கோட்டையின் வாயில்களை அடைத்துவிட்டார். நோயுடன் போராடிக்கொண்டிருந்த நூருத்தீன் அலெப்போவின் உள்ளே ஒரு கோட்டையில் படுக்கையில் கிடக்க, பதவி ஏற்க வந்த அவருடைய சகோதரர் நகருக்கு உள்ளே வர முடியாமல் கதவுகளுக்கு வெளியே நின்றிருந்தார். கொந்தளிப்பான சூழல் உருவாகி விட்டது. ஆத்திரமடைந்த இளைஞர்கள் பட்டாளம் ஆளுநரிடம் கொதித்தது.

“அவர் நூருத்தீனால் நியமிக்கப்பட்ட பட்டத்து இளவரசர். அதனால் அவரை நாம் ஆதரிக்க வேண்டும்” என்று கூச்சலிட்டவர்கள், கலகத்தில் இறங்கி கோட்டை வாயிலின் தாழ்களை உடைத்து எறிந்தனர். ஒரு வழியாக நகருக்குள் நுழைந்தார் நாஸிருத்தீன்.

ஸன்னி முஸ்லிம்களும் ஷிஆக்களும் நிறைந்திருந்த நாடு சிரியா. ஷிஆக்களின் பிறழ்வான மதச் சடங்குகள் இடையே நிகழ்ந்தபடிதாம் இருந்தன. ஸெல்ஜுக் சுல்தான்களோ ஸன்னி முஸ்லிம்கள்; பாக்தாதிலுள்ள அப்பாஸிய கலீஃபாவின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள். இஸ்லாத்தில் ஷிஆக்கள் ஏற்படுத்திவிட்ட பிறழ்வின்மீது அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. மார்க்க ரீதியாக அதைச் சீர்செய்யும் முனைப்பும் எகிப்தில் கோலோச்சும் ஃபாத்திமீக்களின் கிலாஃபத்தை அரசியல் ரீதியாக முடிவுக்குக் கொண்டுவரும் தீவிர முயற்சிகளும் அவர்களுக்கு சிலுவைப்போருக்கு முன்பிருந்தே இருந்து வந்தன. சிரியாவில் தமது கட்டுப்பாடு வலுப்பெற்றவுடன், தொழுகையின் அழைப்புக்கான பாங்கில் ஷிஆக்கள் இடைச்செருகியிருந்த வாசகங்களான

அஷ்ஹது அன்ன அமீரல் மூஃமினீன ஹஜ்ஜத்துல்லாஹ்
ஹய்ய அலா ஃகைரில் அமல்

அல்லாஹ்வின் வாக்கான, இறைநம்பிக்கையாளர்களின் தலைவருக்கு நான் சாட்சியம் அளிக்கின்றேன்.
செயல்களுள் சிறந்த(தைச் செய்வ)தற்கு விரைந்து வாருங்கள்

எனும் இரண்டையும் அலெப்போ நகரில் நூருத்தீன் நீக்கிவிட்டார்.

வேறு வழியின்றி நூருத்தீனுக்கு அடிபணிந்திருந்த ஷிஆக்கள், இப்பொழுது நாஸிருத்தீன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் அவரை அணுகி, நைச்சியமாகப் பேசி, சம்மதிக்க வைத்து, பாங்கில் அந்த வாசகங்கள் மீண்டும் இடம்பெற அனுமதி வாங்கிவிட்டனர். ஏற்கெனவே நாஸிருத்தீன் மீது அதிருப்தியில் இருந்த அலெப்போவின் ஆளுநருக்கு இதை அறிந்து கோபம் அதிகரித்துவிட்டது.

‘நம் தலைவர் நூருத்தீன் இன்னும் உயிருடன்தாம் இருக்கின்றார். இவ்வாசகங்களை அனுமதிக்கக்கூடாது’ என்று நாஸிருத்தீனுக்கும் அலெப்போவின் மக்களுக்கும் செய்தி அனுப்பினார். இதனிடையே நூருத்தீனின் உடல்நலனும் சிறிது தேறி, அவர் எழுந்து அமர்ந்ததும் பாங்கின் வாசக விஷயம் அவர் காதை எட்டியது. தம் சகோதரரைக் கண்டித்து, மீண்டும் அவ்வாசகங்களை நீக்கினார் அவர்.

நூருத்தீனின் நோய் நீங்கிவிட்டது, இனி யாவும் நலமே என்று மகிழ்ந்தனர் மக்கள். குதூகலித்தன நகரங்கள். ஆயினும் அது நீடிக்கவில்லை. அவரது உடல்நலம் 1158ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் மோசமானது. அந்நிலைமை ஏறத்தாழ அடுத்த ஒன்றரை ஆண்டுக் காலம் நீடித்தது. பரங்கியர்கள் அச்சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். பல கோட்டைகள் அவர்கள் வசமாயின. டமாஸ்கஸைச் சுற்றித் தாக்குதல்களும் நிகழ்ந்தன.

தம்மால் செயல்பட இயலாமல் ஆகிவிட்ட அந்தக் காலகட்டத்தை நூருத்தீனும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். எல்லாம் வல்ல ஒருவனான அல்லாஹ்வைப் பற்றியும் விதியைப் பற்றியும் ஆழ்ந்த சிந்தனையிலும் ஆய்விலும் மூழ்கியது அவரது மனம். இறை பக்தியில் திளைத்தன எண்ணங்கள். இறை அச்சம் அவரை மெருகேற்றியது; மேலும் பக்குவப்படுத்தியது. 1159ஆம் ஆண்டு முழுவதுமாக நோயிலிருந்து அவர் மீண்டெழுந்த போது முதிர்ச்சியடைந்த ஓர் அரசராக அவர் வெளிவந்தார். ஆங்கில வரலாற்று ஆசிரியர்களுக்குத் துறவி அரசர் எனப் பொருள்படும் Saint King Noor al-Din என்றாகி விட்டது அவரது பெயர்; மன்னர் எனும் அந்தஸ்திற்குப் பொருத்தமற்ற எளிமைக்கு மாறியது ஆடை. போர்களெல்லாம் எப்போது ஓய, தாம் எப்பொழுது ஹஜ்ஜை முடிக்க என்ற கவலையில் பல போர் நிகழ்வுகளுக்கு இடையே 1161 ஆம் ஆண்டு தமது ஹஜ் கடமையையும் நிறைவேற்றி முடித்துக்கொண்டார் நூருத்தீன்.

oOo

நூருத்தீன் டமாஸ்கஸை வென்றதும் சிரியாவைப் பலவீனமாக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் பிரிவினைகளுக்கும் முடிவுகட்டி ஒருங்கிணைந்த ஆட்சியை ஏற்படுத்தினார் அல்லவா? அந்தச் சாதனை அவரது ஆட்சியின் முதல் பகுதி. நோயுற்றுப் பிழைத்துப் புது மனிதராக மீண்டெழுந்த அவர் இப்பொழுது தமது ஆட்சியின் இரண்டாம் பகுதியைக் கவனமாகத் திட்டமிட்டார். பெருநகரங்களை ஆக்கிரமித்திருக்கும் பரங்கியர்களை விரட்டி அதை மீட்டெடுப்பது அவருக்கு அடுத்த முன்னுரிமையானது. அவருக்கு அணுக்கமான ஆலோசகர்கள் –முக்கியமாக அலெப்போவினர் – முதல் கட்டமாக அந்தாக்கியாவை மீட்டெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அது சரியான ஆலோசனைதான்; இலத்தீன் கிறிஸ்தவர்களின் முக்கியமான மாநிலமாக ஆகிவிட்ட அந்தாக்கியாவை மீட்டெடுப்பது முக்கியம்தான். நூருத்தீன் தமது படையை அடுத்து அங்குதான் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அனைவரும் வியக்கும் வகையில் அவர் அதை எதிர்த்தார். சிலுவைப்படை பரங்கியர்களுக்கு எதிரான ஜிஹாது என்றபோதிலும் அதற்கு ஆயுதமே மொழி என்ற நிலையிலும் ராஜதந்திர சிந்தனை நூருத்தீனுக்கு நிரம்பியிருந்தது என்பதை ஆங்கில வரலாற்று ஆசிரியர்களேகூட ஏற்றுக்கொள்கிறார்கள்.

‘அந்தாக்கியா முன்னர் பைஸந்தியார்கள் வசம் இருந்தது. சிலுவைப்போருக்கு வந்தார்கள் பரங்கியர்கள். கொன்றார்கள்; வென்றார்கள்; அந்தாக்கியா அவர்கள் வசமாகிவிட்டது. அதன் பின் பைஸாந்திய சக்கரவர்த்திக்கும் கைப்பற்றிய பகுதிகளை மாநிலங்களாக்கி ஆண்டுகொண்டிருக்கும் இலத்தீன் கிறிஸ்தவர்களுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லைதான். என்ற போதிலும் நாம் இச்சமயம் அந்தாக்கியாவைக் குறிவைத்தால், அது அனாவசியமாக பைஸாந்திய மன்னரைத் தூண்டியதாக ஆகிவிடும். அவர் நேரடியாக சிரியாவிற்குள் மூக்கை நுழைக்க நாமே ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அளித்ததாகிவிடும். அப்படி ஆகிவிட்டால் முஸ்லிம்கள் இருதரப்பில் எதிரிகளுடன் மோத வேண்டுமே. எனவே, பைஸாந்தியத்தைத் தூண்டும் செயலை நாம் இப்போதைக்குத் தவிர்ப்போம். நமது கவனத்தை முக்கியமான கடலோர நகரங்களை மீட்டெடுப்பதில் செலுத்துவோம். அங்கிருந்து அப்படியே ஜெருசலம்’

நூருத்தீனின் அச்சத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்து விட்டது பைஸாந்தியச் சக்கரவர்த்தி மேனுவலின் சிரியா பிரவேசம். அந்தாக்கியாவின் ரேனால்ட் நிகழ்த்திய கொடூரங்களும் விளைவாக அவர் படையெடுத்து வந்ததும்தாம் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த நிகழ்வு. அவரது நோக்கம் ரேனால்டுக்கும் அந்தாக்கியாவுக்கும் பாடம் கற்பிப்பதுதான் என்பதை நூருத்தீன் அறிந்திருந்தாலும் தம் தூதுவர்களை பைஸாந்தியச் சக்கரவர்த்தியிடம் அனுப்பி வைத்தார்.

‘எமது படையெடுப்பின் நோக்கம் நூருத்தீனன்று. அவருடன் சுமுக உறவையே நாம் நாடுகின்றோம்’ என்று தூதுவர்களுக்கு வாக்குறுதி அளித்தார் சக்கரவர்த்தி.

oOo

1143ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ஜான் காம்னெனஸ் மரணம் அடைந்த பிறகு கிழக்கத்தியப் பகுதிகளில் பைஸாந்தியர்களின் செல்வாக்குத் தேய்ந்து போயிருந்தது. பட்டத்திற்கு வந்த அவருடைய மகன் மேனுவலுக்கும் இத்தாலி, பால்கன் விவகாரங்களில் மூழ்கும்படியான பிரச்சினைகள். அவை முடிந்து, இப்பொழுது ரேனால்ட் உருவாக்கிய பிரச்சினையினால் அந்தாக்கியாவிலும் சிலிசியாவிலும் தமது ஆளுமையைப் பறைசாற்றிய பின் பரங்கியர்களுடன் நல்லுறவை வலுப்படுத்திக்கொள்ள முனைந்தார் மேனுவல். அதற்குச் சிறந்த வழி? திருமண பந்தம்.

1158ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெருசல ராஜா மூன்றாம் பால்ட்வினுக்கும் மேனுவலின் சகோதரர் மகள் தியோடோராவுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு மூன்றாண்டுகளில் அந்தாக்கியாவின் கான்ஸ்டன்ஸின் மகளும் மூன்றாம் பொஹிமாண்டின் சகோதரியுமான மரியாவை சக்கரவர்த்தி மேனுவெல் மணமுடித்தார். இவ்வகையில் ஜெருசலமும் அந்தாக்கியாவும் பைஸாந்தியத்திற்கு நெருக்கமான உறவினர்களாக ஆகிவிட்டனர்.

இத்திருமணங்கள் அரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் நூருத்தீனுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. இஸ்லாத்தின் பண்டைய எதிரியான கிறிஸ்தவ பைஸாந்தியம் இக்கூடுதல் கூட்டணி வலிமையுடன் லெவண்த்திற்குள் புக முடியும்; அது எளிதில் அடக்க முடியாத நீடித்த அச்சுறுத்தலாக அமையவும் கூடும் என்று அவர் கவலைப்பட்டார். ஆகவே, அவற்றை மட்டுப்படுத்தி, பரங்கியர்களின் செல்வாக்கை மட்டந்தட்ட வேண்டும். தாம் சக்கரவர்த்தியுடன் நேரடிப் போரைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் அவருக்கும் தம்முடனான போரில் நாட்டம் இருக்கக்கூடாது என்று சிந்தித்தார். அதற்கு அவர் ஓர் உபாயத்தை மேற்கொண்டார்.

இராக்கின் மோஸூலிலிருந்தும் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் படைகள் வந்து சேர்ந்தன. அலெப்போவின் தற்காப்பு பலப்படுத்தப் பட்டது. மேனுவலின் தலைமையில் கூடியிருந்த படை எண்ணிக்கையைவிட நூருத்தீன் திரட்டியிருந்த படை அதிகமிருந்தது. எண்ணி சரிபார்த்துக்கொண்டு பைஸாந்தியச் சக்கரவர்த்தியிடம் தூதுவர்களை அனுப்பினார் அவர்.

‘போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வோம். இரண்டாம் சிலுவைப்போரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 6,000 கைதிகளை விடுவிக்கிறேன்’ என்று பேரம் பேசினார்.

பரங்கியர்களுக்கு இதில் விருப்பமே இல்லை. ஆனால் சக்கரவர்த்தி மேனுவல் அதைப் பொருட்படுத்தாமல் நூருத்தீனின் பேரத்தை ஏற்றுக்கொண்டார். பரங்கியர்களுக்கோ பெருத்த ஏமாற்றம். நாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல், சக்கரவர்த்தி நம்மைக் கலந்துகொள்ளவில்லை. தன்னலனே பிரதானமாகிவிட்டது அவருக்கு என்று பொங்கினார்கள். நூருத்தீனின் எண்ணம் ஈடேறியது, சக்கரவர்த்திக்கும் பரங்கியர்களுக்கும் இடையிலான இணக்கம் வலுவடையாமல் பலவீனப்படுத்தப் பட்டது.

அவ்விதம் பைஸாந்திய அச்சுறுத்தலை கட்டுப்படுத்திவிட்டு, பரங்கியர்களுடனான தமது ஜிஹாதைத் தொடர ஆயத்தமானார் நூருத்தீன்.

oOo

வருவார், இன்ஷா அல்லாஹ் …