ஒளுவின்றி ஸஜ்தா செய்யலாமா?

ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்.சஜ்தா திலாவத் எப்படி செய்ய வேண்டும். குரானை ஒளு இல்லாமல் ஓதலாம் என்றால், குரானில் சஜ்தா என்ற வார்த்தை வரும்பொழுது ஒளு இல்லாமல் சஜ்தா செய்யலாமா? (மின்னஞ்சல் வழியாக சகோதரி ஃபர்வின்)

 

தெளிவு:

வஅலைக்குமுஸ் ஸலாம் வரஹ்…

“ஸஜ்தா திலாவத்”தைத் தொழுகையில் நாம் செய்யும் ஸஜ்தாவைப் போன்று செய்ய வேண்டும். இதனைச் செய்வதற்குத் தொழுகைக்காக நாம் செய்யும் ஒளுவைப் போன்று ஒளு செய்ய வேண்டிய தேவை இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி ஸஜ்தா வசனத்தைக் கடந்து செல்கையில் எங்களுடன் சேர்ந்து ஸஜ்தாச் செய்வார்கள். அப்போது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு ஸஜ்தாச் செய்யக்கூட இடம் கிடைக்காது. தொழுகையல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது! அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) (நூலகள்: புகாரி, 1075. முஸ்லிம், 1006)

திருமறையை ஓதிக்கொண்டிருக்கும் பொழுது, ஸஜ்தா வசனங்களை ஓதினால் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்று ஹதீஸ்களிலிருந்து அறிய முடிகிறது. திருமறையை ஒளுவின்றி ஓதலாம் எனும்போது, ஸஜ்தா திலாவத்தையும் ஒளுவின்றிச் செய்யலாம். ஸஜ்தா வசனங்களை ஓதியதற்காக எழுந்து சென்று ஒளுச் செய்து வந்து ஸஜ்தா செய்யவேண்டும் என சட்டம் இயற்ற எந்த ஆதாரமும் இல்லை!

தொழுகையில் குர்ஆனை ஓதும்போது ஸஜ்தா வசனங்களை ஓதுமிடத்தில் அதற்கென ஸஜ்தா செய்யவேண்டும். இங்கு தொழுகைக்கென ஒளு அவசியம் என்பதால் ஸஜ்தாச் செய்வதும் தொழுகையின் ஒரு பகுதி எனக்கருதி தொழுகைக்கு வெளியே செய்யும் ஸஜ்தா திலாவத்துக்கும் ஒளு அவசியமோ என்ற மன ஊசலாட்டம் ஏற்படுகின்றது! ஸஜ்தா என்பது தொழுகையின் உள்ளே செய்யப்படும் ஒரு செயல் தான். ஆனால் அதனை மட்டும் செய்வதற்கு ஒளுவின் தேவை இல்லை. ஏனெனில், ஒருவர் ஸஜ்தா மட்டும் செய்கிறார் என்றால், நாம் ஒரு போதும் அவர் தொழுகிறார் என்று கூற மாட்டோம்.

ஒருவர் தொழுகையில் நுழைய வேண்டுமெனில், அதன் ஆரம்ப அடிப்படையான ஒளு வேண்டும். ஸஜ்தா என்பது இறைவனுக்குச் சிரம்பணிதல் மட்டுமே. இதனைத் தொழுகை என்ற வரம்பிற்குள் கொண்டு வர இயலாது. தொழுகை வேறு, ஸஜ்தா மட்டும் வேறு என்பதை விளங்கினால் இதில் குழப்பம் நீங்கிவிடும்!

குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்களுக்குத் தொழுகைக்கு வெளியே இருக்கும் போது கண்டிப்பாக ஸஜ்தா செய்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை.

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் காஃபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன். அறிவிப்பாளர் இப்னு மஸ்வூத் (ரலி) (நூல்கள்: புகாரி, 1070, 3972 முஸ்லிம், 1007)

நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) (நூல்கள்: புகாரி, 1071. திர்மிதீ, 524)

நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை. அறிவிப்பவர் ஸைத் இப்னு ஸாயித்(ரலி) (நூல்கள்: புகாரி, 1072. முஸ்லிம், 1008. திர்மிதீ, 525)

நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியே குர்ஆனில் ஸஜ்தா வசனங்களை ஓதியதற்காக ஸஜ்தாச் செய்திருக்கிறார்கள்; ஸஜ்தாச் செய்யாமலும் இருந்திருக்கிறார்கள். நபியவர்களைப் பின்பற்றி நபித்தோழர் உமர் (ரலி) அவர்களும் ஒரே வசனத்துக்கு ஸஜ்தாச் செய்தும், செய்யாமலும் விட்டிருக்கிறார்கள்.

உமர்(ரலி) ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள். (அதிலுள்ள) ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாச் செய்தார்கள். மக்களும் ஸஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் (மக்களை நோக்கி) ‘மனிதர்களே! நாம் ஸஜ்தா வசனத்தை ஓதியிருக்கிறோம். ஸஜ்தாச் செய்கிறவர் நல்லதைச் செய்தவராவார். அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை’ என்று கூறினார்கள். மேலும் அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை. நாமாக விரும்பிச் செய்தால் தவிர ஸஜ்தாவை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாபிஃஉ குறிப்பிட்டார்கள். (புகாரி, 1077)

இதிலிருந்து தொழுகைக்கு வெளியே, குர்ஆனை ஓதும் போது ஸஜ்தா திலாவத் வரும் வசனங்களில் ஸஜ்தா செய்வது கட்டாயக் கடமை இல்லை, விரும்பினால் ஸஜ்தாச் செய்யலாம் என்றே விளங்க முடிகிறது.

தொழுகையில் செய்யும் ஸஜ்தா போன்றே, குர்ஆன் ஓதியதற்கான ஸஜ்தா திலாவத்தைத் தொழுகைக்கு வெளியேயும் (ஒரு ஸஜ்தா மட்டும்) செய்ய வேண்டும். இந்த ஸஜ்தாவிற்கு தொழுகையில் செய்வது போன்று தக்பீர் கூறவேண்டுமென்றோ, ஸஜ்தாவில் ஓதவேண்டுமென்றோ ஆதாரங்கள் எதுவும் நாமறியவில்லை!

‘இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் ‘அர்ரஹ்மான் என்பவன் யார்? நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா?’ என்று கேட்கிறார்கள் இன்னும், இது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது. (அல்குர்ஆன் 25:60)

திருமறையின் ஸஜ்தா வசனங்களை நாம் ஓதும் வேளைகளில் ஸஜ்தா செய்வதன் மூலமாக, படைத்த இறைவனுக்கு உடனடியாக சிரவணக்கம் செய்து திருமறையின் கட்டளையை நிறைவேற்றுகின்றோம் அவ்வளவே. மற்றபடி, திருகுர்ஆனின் ஸஜ்தா வசனங்களுக்குச் செய்யும் ஸஜ்தாவிற்கும் தொழுகையில் செய்யும் ஸஜ்தாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.


(இறைவன் மிக்க அறிந்தவன்)