பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!
விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !
– சகோ. முஹம்மது அலாவுதீன்