முஸ்லிமல்லாதவர் முஸ்லிமிற்கு வாரிசாக முடியுமா?

Share this:

ஐயம்: நான் இஸ்லாத்திற்குத் திரும்பி 12 ஆண்டுகள் ஆகிறது. தற்போது சவூதி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். என்னுடைய விசா பழைய பெயரிலேயே இருப்பதால், பாஸ்போர்ட்டும் பழைய பெயரிலேயே இருக்கிறது. ஆனால் பெயர் மாற்றத்திற்கான வாக்குமூலம் இந்திய நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டு என்னிடம் உள்ளது.

என்னுடைய இரு மகன்களில் ஒருவர், தலாக் செய்துவிட்ட முன்னாள் கணவரிடமும் மற்றொருவர் என் தாயின் கன்காணிப்பிலும் இருக்கின்றனர். இவனும் முஸ்லிமாகத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளான்.

1. என்னுடைய சொத்து முழுவதும் என்னுடைய பழைய பெயரிலேயே உள்ளது. என் மரணத்திற்குப் பின் இந்தச் சொத்தை எவரெல்லாம் பிரித்துக் கொள்ள முடியும்?

2. இதுவரை என் புதிய பெயரை என் வீட்டின் அருகிலுள்ள பள்ளியில் பதிந்து கொள்ளவில்லை. நான் இறந்தால் என்னை முஸ்லிம்களின் கப்ரஸ்தானில் அடக்க மறுப்பு தெரிவிப்பார்களா?

3. (என் மகன் இஸ்லாத்திற்குத் திரும்பி) பெயர் மாற்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்யத பின்னர் வேறு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

– மின்னஞ்சல் மூலமாக ஒரு சகோதரி.


தெளிவு:

அன்புச் சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

இஸ்லாத்தின் பால் மீண்ட தங்களுக்கு வல்ல நாயன் அனைத்துப் பிழைகளையும் பொறுத்தருள்வானாக.

படைத்த இறைவனை ஏற்றுக் கொண்ட தருணத்திலேயே, இறைவனின் சன்னிதியில் நீங்கள் முஸ்லிமாகி விட்டீர்கள். அந்நிமிடத்திலேயே அதுவரையிலான உங்களின் அனைத்துப் பாவங்களையும் இறைவன் மன்னித்து விட்டான்.

தற்போதைய காலகட்டத்தில் இஸ்லாத்தின் பால் மீளுவோர், இவ்வுலக வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைச் சமாளிக்கத் தொடர்ந்து சில செயல்களைச் செய்ய வேண்டும். அதில் முக்கியமானது மாற்றப்படும் பெயரைப் பதிவு செய்தல் மற்றும் அரசாங்க ஆவணங்களில் உரிய மாற்றங்களைச் செய்தல் போன்றவை.

இதில் நீங்கள் சரியாகவே செயல்பட்டுள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ். உங்களின் பெயர் மாற்ற ஆவணத்தை உபயோகித்து உடனடியாக இந்திய தூதரகத்தை அணுகி பாஸ்போர்டிலும் உங்கள் பெயரை மாற்றி விடுங்கள். தொடர்ந்து உங்கள் விசாவிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் ஏதாவது தொந்தரவுகளில் சிக்காமல் இருக்க அது அத்தியாவசியமாகும்.

1. என்னுடைய சொத்து முழுவதும் என்னுடைய பழைய பெயரிலேயே உள்ளது. என் மரணத்திற்குப் பின் இந்தச் சொத்தை எவரெல்லாம் பிரித்துக் கொள்ள முடியும்?

சகோதரியே!

நீங்கள் இஸ்லாமைத் தழுவி முஸ்லிமாக ஆனதால், முஸ்லிம் அல்லாத ஒருவர் உங்களுக்கு வாரிசாக முடியாது.

“ஒரு முஸ்லிம் இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். ஓர் இறைமறுப்பாளர் முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல்: புகாரி, 4283, 6764)

எம்பெருமானாரின் இந்த அறிவிப்புபடி, உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு இஸ்லாமில் இணையாமல் முஸ்லிம் ஆகாத உங்கள் பிள்ளைகள் மற்றும் தாய், தந்தை, கணவர் என எந்த ஒரு உறவினரும் உங்கள் வாரிசாக முடியாது. அதுபோல் உங்கள் தாய், தந்தை, கணவர் உறவினர் சொத்துக்களுக்கு நீங்களும் வாரிசாக முடியாது!

நீங்கள் ஏற்கெனவே முஸ்லிமாகி விட்டதால், உங்கள் சொத்துக்கள் எந்தப் பெயரில் இருந்தாலும் அவை ஷரிஆ சட்டப்படியே பிரிக்கப்பட வேண்டும். ஷரிஆ சட்டப்படி, உங்களுக்கு முஸ்லிமல்லாத ஒருவர் வாரிசாக முடியாததால், முஸ்லிமான ஒருவர் உங்களுக்கு வாரிசாக இல்லாத நிலையில் உங்கள் மரணத்திற்குப் பின் உங்களின் அனைத்துச் சொத்துக்களும் பைத்துல்மாலில் சேர வேண்டும்.

ஆனால், அது உங்கள் மரணத்திற்குப் பின் கடைபிடிக்கப்படுமா? என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே, உங்கள் மரணத்திற்குப் பின் உங்கள் சொத்துக்கள் விஷயத்தில் பிரச்சனை எழாமல் இருக்க, உடனடியாக உங்கள் பெயர் மாற்ற ஆவணத்தை அடிப்படையாக வைத்துச் சொத்துக்களிலும் பெயரை மாற்றி விடுவதோடு, உரிய உயிலையும் எழுதி வைத்து விடுங்கள்.

இனி, இதுவன்றி உங்கள் தாயாரிடம் வளரும் உங்கள் மகன் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம் ஆகிவிட்டால் உங்கள் சொத்துக்களுக்கு அவர் நேரடி வாரிசாக ஆவார். உங்கள் மகன் முஸ்லிம் ஆனதை முறைப்படிப் பதிவு செய்து ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். நீங்களும் உங்கள் மகனும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட விபரங்களை அருகிலுள்ள பள்ளிவாசல் ஜமாஅத்தில் தெரிவித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு, வேறு சிக்கல்கள் எழாமல் தவிர்க்க, சொத்துக்களிலும் உங்கள் பெயர் மாற்றத்தை இணைத்து உறுதிபடுத்தி விட வேண்டும்.

2. இதுவரை என் புதிய பெயரை என் வீட்டின் அருகிலுள்ள பள்ளியில் பதிந்து கொள்ளவில்லை. நான் இறந்தால் என்னை முஸ்லிம்களின் கப்ரஸ்தானில் அடக்க மறுப்பு தெரிவிப்பார்களா?

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது உங்கள் அருகிலுள்ள பள்ளிவாசல் ஜமாஅத்துக்குத் தெரியவில்லை எனில் அடக்கம் செய்யத் தயங்குவார்கள். எனவே உடனடியாக உங்களின் பெயர்மாற்ற நீதிமன்ற ஆவணத்துடன் அருகிலுள்ள ஏதாவது ஒரு பள்ளிவாசல் ஜமாஅத்தில் தெரியப்படுத்திப் பதிவு செய்து விடுங்கள்!

3. (என் மகன் இஸ்லாத்திற்குத் திரும்பி) பெயர் மாற்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்யத பின்னர் வேறு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நீதிமன்ற ஆவணத்தை அடிப்படையாக வைத்து மகனின் சான்றிதழ்கள், ரேசன் கார்டு, ஓட்டு அட்டை, பாஸ்போர்ட் போன்ற இன்னபிற அனைத்து அரசு ஆவணங்களிலும் மகனின் பெயரை மாற்றிப் பதிவு செய்து விடுங்கள். இது மிக மிக அத்தியாவசியமானதாகும். மகனின் பிற்கால வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க இது உதவும்.

அத்துடன், நீதிமன்றத்தில் பெற்ற ஆவணங்களை பள்ளிவாசல் ஜமாஅத்தின் பொறுப்பாளரிடம் காண்பித்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைப் பெற்று அதன்படி நடந்துகொள்ளுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டுமாக.

(அல்லாஹ் மிக்க அறிந்தவன்!)


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.