செல்போனா? கவனம் நம் குழந்தைகள்!

விஞ்ஞான வளர்ச்சியின் இக்கால அற்புத கண்டுபிடிப்பில் ஒன்று தான் செல்போன். எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் உள்ளது போன்று, இக்கருவியிலும் நன்மையும் தீமையும் உள்ளது. நல்ல முறையில் பயன்படுத்தினால், செல்போனும் நமக்கு நன்மையே!

ஆனால், வளர்ச்சியின் வேகத்துக்கு ஏற்ப, சந்தைகளில் அறிமுகமாகும் புதுப் புது ரக செல்போன்களால் வளரும் இளம் தலைமுறையினரிடையே குற்றச் செயல்களும் தவறான பழக்க வழக்கங்களும் அதிகரித்து வருகின்றன.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்த சம்பவம் நடந்தது.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பதும் அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி அதன் பின்னர் மிரட்டத் துவங்குவதும் தெரியவந்தது.

நாடு முழுவதும் தற்போது இந்தச் செல்போன்களால் பெண் குழந்தைகளுக்குப் பல்வேறு ஆபத்துகள் சூழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை. மேற்கூறியது ஒரு உதாரணம் மட்டுமே. இது போன்று எண்ணற்ற குற்றச்செயல்கள் இன்று செல்போன்களின் துணை கொண்டு நடைபெறுகின்றன. பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். இதனைப் பெரும்பாலும் பெற்றோர்களோ, குழந்தைகளின் பாதுகாவலர்களோ அறிவதில்லை என்பது தான் மிகப் பெரும் பரிதாபம்!

நம் குழந்தைகளை இது போன்ற ஆபத்துகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான வழி என்ன? சமீபத்தில் ஒரு தினசரியில் இதற்கான தீர்வைக் குறித்து மனநல டாக்டர் பெரியார் லெனின் அவர்களிடம் கேட்டபோது அவர் கீழ்கண்டவாறு பதில் கூறியிருந்தார்:

“சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர்.

பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ, மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர். எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்”.

மனநல மருத்துவர் கூறிய ஆலோசனைகளில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள் உள்ளன.

1. பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது.

2.  வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர்.

3. தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

தேவையின்றி பெண் குழந்தைகளுக்கு மொபைல் போன்களை வாங்கித் தருவதைத் தவிர்ப்பதன் மூலம் செல்போன் மூலமாக வரும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் நம் பெண் குழந்தைகளைக் காத்துக் கொள்ள இயலும்.

குழந்தைகளின் குணம் என்பது, தம் பெற்றோர்களின் பழக்க, வழக்கங்களை ஒத்து வளர்வதாகும். பெற்றோர் சிறந்த ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் பட்சத்தில் பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளும் நல்ல பழக்க, வழக்கம் உடையவர்களாகவே இருப்பர்.

அவசர, அவசியம் கருதி செல்போன் வைத்திருக்கும் குழந்தைகளிடம் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அனாவசிய மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் களைத் தவிர்ப்பது குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்க வேண்டும். இவற்றின் மூலம் பெரும்பாலான ஆபத்துகளிலிருந்து தம் குழந்தைகளைப் பெற்றோர் பாதுகாத்துக் கொள்ள இயலும்.

குழந்தைகளை வளர்ப்பது என்பதும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைக் கற்பித்தல் என்பதும் இஸ்லாத்தில் மிக முக்கிய செயலாக ஊக்கிவிக்கப்பட்டவைகளாகும்.

உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் நடத்துங்கள். அவர்களது பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவர்களாகும். (இப்னு மாஜா)

எந்தவொரு பிள்ளைக்கும் அவரது பெற்றோர் அழகிய நல்லொழுக்கத்தைவிட எதனையும் சிறப்பாக கொடுத்து விட முடியாது. (புகாரி)

மேலே குறிப்பிட்ட இரு ஹதீஸ்களும் குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவாக கூறுகிறது.

1. வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு, விடுதியில் போன் வசதி இல்லாமல் போனால்,

2. வெளியூருக்குச் செல்லும் ஆண் குழந்தைகளுக்கு அவசரத்துக்கு உதவ

இதைப் போன்ற தருணங்களில் அவசியம் நிமித்தமாக மொபைல் போனை பிள்ளைகளுக்குத் தரலாம். அதுவும் வயது வந்த குழந்தைகளுக்கு மட்டுமே தர வேண்டும்.

எந்த ஒரு தருணத்திலும் நாம் தான் மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டோமே என்று தம்முடைய வேலைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டு விடலாகாது. அவர்களின் மொபைலில் என்ன எஸ். எம். எஸ் வருகிறது?, பதிவாகியுள்ள தொலைபேசி எண்கள் யாருடையவை? போன்றவற்றை அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். சம்பந்தம் இல்லாத பெயர்களில் அவர்களின் மொபைலில் அழைப்புகள் பதியப் பட்டிருந்தால், தயங்காமல் தம் பிள்ளைகளிடம் அது யார் என்று கேட்டு விடவேண்டும். செல்போனினால் வரும் பிரச்சனைகளை வெளிப்படையாக தயங்காமல் தம் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் எடுத்து கூறி அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிகமாக நேரம் ஒதுக்கி, அவர்களின் விஷயங்களில் பெற்றொருக்கு இருக்கும் ஆர்வத்தையும் கவனத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு செய்தால் அவர்கள் தனியாக இருக்கும் வாய்ப்பை தடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தீய எண்ணங்களின் பக்கம் செல்லாமலும் தடுக்க முடியும்.

சில பெற்றோர்கள் தம் வீடுகளில் குழந்தைகளுக்குத் தனியாக அறை ஒதுக்கி அவர்கள் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்கின்றனர். இதில் தவறில்லை. ஆனால், அவர்களுக்கு உரிய வசதிகளைச் செய்துக் கொடுத்து விட்டு, இனி எல்லாம் அவர்கள் கையில் என, மேற்கொண்டு அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்காமல் விட்டு விடுவது மிகப் பெரிய தவறாகும். இவ்வாறு அதிகப்படியான வசதிகளைத் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக செய்து கொடுக்கும் பெற்றோர்கள், அவர்களின் நடவடிக்கைகளைச் சீராக கண்காணித்து வர வேண்டியது கடமை என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.

சில வீடுகளில் தொலைகாட்சி சீரியல்கள் பெரியோர்களை மட்டுமன்றிக் குழந்தைகளையும் சீரழிக்கின்றது. படைத்தவனை உணராத முஸ்லிமல்லாதவர்கள் தான் வீணான தொலைகாட்சி மெகா சீரியல்களில் கட்டுண்டுக் கிடக்கின்றனர் என்றால், படைத்தவனுக்கு அஞ்சும் முஸ்லிம்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் வீணான மெகா சீரியல்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். இரவு நீண்ட நேரம் தொலைகாட்சியில் மூழ்கி கிடந்து விட்டு, காலையில் ஸுபுஹு தொழுகையைச் சர்வசாதாரணமாக விடும் முஸ்லிம் வீடுகள் ஏராளம்.

“சுபுஹு தொழுகையும் இஷா தொழுகையும் நயவஞ்சகர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும்” என்பது நபிமொழி!

இவர்கள் தாங்கள் கண் விழிப்பதோடு குழந்தைகளையும் கண் விழிக்க செய்கிறார்கள். இதில், சீரியல் முடிந்தவுடன் அதைப் பற்றி டிஸ்கசன் வேறு சில வீடுகளில் நடக்கிறது. அவன் அப்படி செய்திருக்கலாம், இவள் ஏன் இப்படி செய்தா, அவன் அந்த வேலையில் சேர்ந்திருக்க கூடாது என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த சீரியல்களை பார்த்து தான் பெண் குழந்தைகள் அதிகம் பேர் கெட்டுப் போகிறார்கள்.

புது சினிமா வந்து விட்டால் அதை உடனே வாங்கி வீட்டில் ஆண், மற்றும் பெண் குழந்தைகளோடு பார்க்கிறார்கள். அதில் முகத்தைச் சுழிக்கக் கூடிய வசனம் வந்தாலும், அன்னிய ஆணும் பெண்ணும் கட்டிப் புரண்டு கூத்தடிக்கும் பாடல் காட்சிகள் வந்தாலும் அவற்றைக் குறித்து எவ்வித வெட்க உணர்வும் இன்றி, தாய், தந்தை, குழந்தைகள் என குடும்ப சகிதமாக நாணம் கெட்டுப் போய் பார்த்து ரசிக்கின்றனர்.

“வெட்கம் ஈமானில் பாதியாகும்” என்று திருத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் அங்கு காற்றில் பறப்பதைக் குறித்து இவர்களுக்கு எவ்வித உணர்வும் இல்லை.

பெற்றோர்கள் இவ்விதம் செயல்பட்டால், குழந்தைகள் பெற்றோரின் வழியிலேயே வெட்க உணர்வின்றி வளர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இந்த சீரியல்களும், சினிமாக்களும் அதில் செய்யும் புது புது உத்திகளும் பிள்ளைகளின் மனதை எளிதில் கவர்ந்து கெடுத்து விடுகிறது. அதில் செல்போன்களை வைத்து என்னென்னவெல்லாம் செய்யலாம் என்று எல்லா தீய செயல்களையும் காண்பித்து விடுகின்றனர். இவற்றைக் காணும் குழந்தைகள், அதனைப் போன்றே செய்வதற்குத் தலைபடுகின்றனர். சினிமாவில் வரும் நடிகர்கள் போன்று தன்னுடைய உடைகளை மாற்றி கொள்வது, அவர்களைப் போன்று அலங்காரம் செய்து கொள்வது மற்றும் அவர்களைப் போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றி கொள்வது என்று இன்றைய ஆண், பெண் பிள்ளைகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய சீரழிவுகளிலிருந்து தம் பிள்ளைகளைக் காப்பதற்கு, முதலில் பெற்றோர் தம்மை மாற்றிக் கொள்ள தயாராவதே ஒரே வழி!

மற்றொரு முக்கியமான விஷயம், பிள்ளைகளின் நண்பர்களை பற்றிப் பெற்றோர்கள் முழுமையாக அறிந்து வைத்திருப்பதாகும்.

ஆண் பிள்ளைகள் வெளியே சென்று இரவு நீண்ட நேரம் சுற்றி விட்டு வந்தால், அது எவ்வளவு தலைபோகும் விஷயமாக இருந்தாலும் அவர்களைக் கண்டிக்க வேண்டும். இரவு வெகு நேரம் வரை இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் விஷயங்களில் முன்னரே தங்களை அழைத்து விவரம் தெரிவிக்கும் பழக்கத்தை அவர்களைக் கண்டிப்பதன் மூலமாக வளர்த்து விடவேண்டும்.

சினிமா போன்ற வீண், ஆபாச சீரழிவு காரியங்களுக்கு வெளியே செல்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

மார்க்க விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தொழுகை விஷயத்தில் கண்டிப்பு அவசியம். குழந்தைகளுக்கு உலக கல்வியை வளர்ப்பதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு மார்க்க அறிவை வளர்ப்பதற்கும் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளைக் கண்டிக்கும் விஷயத்திலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கும் விஷயத்திலும் பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்கின்றார்களோ அவற்றை அவர்கள் முதலில் தம்மிடம் சரியாக வளர்த்துக் கொள்வது மிக மிக முக்கியமானது. தான் சரியாக இல்லாமல், தங்கள் குழந்தைகள் மட்டும் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று கண்டிக்கும் பெற்றோர்கள் மிகப் பெரிய தவறைச் செய்கின்றனர். தொழுகயை அந்த நேரத்தில் தொழுதல், செல்போன்களில் அதிக நேரம் செலவிடாதிருத்தல், கேமரா மற்றும் லேட்டஸ்ட் மாடல் போன்கள் (மெமரி கார்டு) உபயோகிப்பதை தடுத்தல், சினிமா மற்றும் சீரியல்கள் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல், உபரியான வணக்கங்களில் அதிக கவனம் செலுத்துதல் ஆகியவற்றைத் தாம் முதலில் கடைபிடிப்பதோடு அவற்றின் முக்கியத்துவம் குறித்து பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னாலே அவர்கள் அதனைப் புரிந்து செயல்படுத்த முன்வருவர்.

ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகள் கெட்ட பழக்கம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது என்றும் நல்லொழுக்கம் உடையவர்களாக வளர வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்கான முதல் படியாக அனைத்து நல்லொழுக்கங்களையும் தம்மிடமிருந்து செயல்படுத்திக் காண்பிப்பதோடு, அதற்காக செய்யும் முயற்சியில் செல்போன்களுக்கு முதலிடம் கொடுப்போம்.

– சகோ. அபு நிஹான்