சிறுவர்கள் செய்யும் ஹஜ்ஜின் நிலை என்ன?

ஐயம்:

 

அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் தளத்தில் கேள்வி-பதில் உள்பட அனைத்து பகுதிகளும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. ஹஜ் கிரியைகளை செய்வதற்கு கடமையாவதற்குரிய ஒருவரின் வயது எது? ஏழு மற்றும் பத்து வயதில் உள்ள என் மகன்கள் என்னுடன் (இன்ஷாஅல்லாஹ் இவ்வருடம்) ஹஜ்செய்வதால் அவர்கள் மீதான ஹஜ் கடமை நீங்கிவிடுமா? அல்லது அவர்கள் பருவ வயதை அடைந்த பிறகு அவர்கள் மீண்டும் ஹஜ் செய்ய வேண்டுமா என்பதை தயவுசெய்து விளக்கவும். (மின்னஞ்சல் மூலம் ஒரு சகோதரர்)

 

தெளிவு:
 

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)
 

சிறுவர், பைத்தியக்காரர், தூக்கத்தில் இருப்பவர் இவர்களுக்காக எழுதுகோல் உயர்த்தப்பட்டது என இஸ்லாம் கூறுகிறது. இதன் அடிப்படையில் பருவ வயதை அடையாத சிறுவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படாது என்பதிலிருந்து ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் சிறுவர்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்றே விளங்க முடிகிறது. ஹஜ் கிரியைகளை நிறைவேற்றக் குறிப்பிட்டப் பருவ வயதை அடைந்திருக்க வேண்டும் என ஆதாரங்களைக் காண முடியவில்லை! பருவ வயதையடையாத சிறுவர்களின் ஹஜ்ஜும் நிறைவேறும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''நான் பருவ வயதை நெருங்கிய நேரத்தில் பெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன்…'' என்று அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) (புகாரி, 1857)

 

நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது இப்னு அப்பாஸ் (ரலி) சிறுவராக இருந்தார்.


''நான் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று ஸாயிப் பின் யஸீத் (ரலி) அறிவிக்கிறார். (புகாரி, 1858)
 

எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது நபியவர்களுடன் என் தந்தை என்னையும் ஹஜ் செய்ய வைத்தார்கள். என்று ஸாயிப் பின் யஸீத் (ரலி) அறிவிக்கிறார். (திர்மிதீ, அஹ்மத்)


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நபியவர்களுடன் சிறுவர்களும் ஹஜ் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட செய்திகளிலிருந்து அறிய முடிகிறது. சிறுவர்களின் ஹஜ்ஜும் கூடும் என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
 

ஒரு பெண்மணி தம் குழந்தையை உயர்த்திக்காட்டி 'அல்லாஹ்வின் தூதரே! இவனுக்கும் ஹஜ் உண்டா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள். ''ஆம் (அதற்காக) உனக்கும் நற்பலன் உண்டு'' என்று விடையளித்தார்கள். இப்னு அப்பாஸ், ஜாபிர் பின் அப்துல்லாஹ் ஆகிய நபித்தோழர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம், 2597. திர்மிதீ 927)


''இவனுக்கும் ஹஜ் உண்டா?'' என்ற கேள்விக்கு
 

''ஆம்'' என்று சிறுவர்களின் ஹஜ்ஜும் செல்லும், அதற்கான நற்பலனின் சிறுவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர், பொறுப்பாளருக்கும் பங்கு உண்டு என்றும் நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள். ஹஜ்ஜின் போது தல்பியாக் கூறுவது, கல்லெறிவது போன்ற அமல்களை சிறுவர்கள் செய்ய இயலாது என்பதால் சிறுவர்களுக்குப் பகரமாக பெற்றோர் அல்லது பொறுப்பாளர்கள் அக்காரியங்களைச் செய்து கொள்ளலாம்.
 

''நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். எங்களுடன் பெண்களும் சிறுவர்களும் இருந்தனர். சிறுவர்களுக்குப் பகரமாக நாங்கள் தல்பியாக் கூறினோம். மேலும் அவர்களுக்குப் பகரமாக நாங்கள் கற்களையும் எறிந்தோம்''. என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார். (இப்னுமாஜா)
 

ஆனால், சிறு வயதில் செய்த ஹஜ் கடமையான ஹஜ்ஜுக்கு ஈடாகாது. எனவே அச்சிறுவர் பருவ வயதை அடைந்த பின்னர் ஹஜ் செய்வதற்கான சக்தியைப் பெற்றால் அவர் ஹஜ் செய்வது அவர் மீது கடமையாகும் என்பது அனைத்து அறிஞர்களின் ஒருமித்தக் கருத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

''அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை'' (அல்குர்ஆன் 3:97)

 

ஹஜ் பற்றிய இந்தத் திருமறை வசனத்தில் ஹஜ் செய்ய வசதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், அவ்வசதியுடையவர்கள் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்பது கடமை. தம்மிடம் வசதியிருந்து தமது குழந்தைகளை அழைத்துச் செல்வதில் அவருக்கும் அவர் அழைத்துச் சென்று ஹஜ் செய்ய வைத்தவருக்கும் நன்மையுண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.

 

''அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்களுக்கு விதியாக்கிய ஹஜ் கடமை முதியவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் வாகனத்தில் அமர்ந்து செல்ல இயலாது. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று ஒரு பெண் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள்.


மற்றொரு அறிவிப்பில், ''அவர் சார்பாக நீ ஹஜ் செய்யலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி, 1513, 1855, 4399, 6228. முஸ்லிம், 2594, 2595)

மேலும், வசதி என்பதில் பண வசதி, வாகன வசதி, தங்குமிட வசதி, உடல் நலம், நேரம் விடுப்பு, போன்ற அனைத்து அம்சங்களும் அடங்கும். இவை அனைத்தையும் அமையப்பெற்றவர்கள் மீது ஹஜ் கடமையென்பதால் அதை அந்த சிறுவர் பருவ வயதை அடைந்த பின் ஒருமுறையேனும் அதை செய்ய வேண்டும்; அதுவே அவருக்கும் நன்மையானது என்று விளங்க முடிகிறது.


அல்லாஹ் மிக அறிந்தவன்.